Wednesday, July 19, 2017

நங்கை சானியும், எழு தேவரடியார்களும் - புகைப்படங்கள்

 இது குளக்கோட்டன் சமூகம்

2010 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சோழர்கால கல்வெட்டுக்களைக் காண்பதற்காக கந்தளாய்ச் சிவன் கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. தற்போது சிறியதாக அமைக்கப்பட்டிருக்கும் சிவன் ஆலயத்தில் ஒரு புராதானக் கோயிலின் சிதைந்த பாகங்களை பாதுகாத்து வருகிறார்கள் அவ்வூர் மக்கள். அவற்றில் சிவன் பார்வதி சிலை, தூண் சிதைவுகள் , ஆவுடையார் , கல்வெட்டுக்கள் என்பன அடங்குகின்றன.

இவ்வரிய சொத்துக்கள் அனைத்தும் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னரான சோழப் பெருமன்னர்கள் காலத்தில் ( முதலாம் இராஜராஜன் ,   முதலாம் இராசேந்திர சோழன் ) கந்தளாயில் இருந்த இராஜராஜேஸ்வரம் எனும் ஆலயத்திற்குச் சொந்தமானவை.


கந்தளாயின் புராதான ஆலயமான இராஜராஜேஸ்வரத்துடன் தொடர்புடைய பளமோட்டைச் சாசனம் என்ற கல்வெட்டே ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் கந்தளாயில் வாழ்ந்த இருவகைப் பெண்களின் சமுதாய நிலையினை ஆவணப்படுத்தி இருக்கிறது.

1993 ஆம் ஆண்டில் 'பளமோட்டைச் சாசனம்” கண்டெடுக்கப்பட்டு பிரபல சாசனவியலாளர்களான சேனரத் பரணவிதான (இலங்கை)  K.V. சுப்பிரமணிய ஐயர் (தமிழ்நாடு) ஆகியோரால் வாசிக்கப்பட்டது.  முதலில் அச்சாசனத்தை முழுமையாகப் பார்த்துவிட்டு நம்பதிவுக்கு வரலாம்.

பளமோட்டைச் சாசனம்

இக்கல்வெட்டு   முதலாம் விஜயபாகு ( கி.பி. 1055 – 1110 ) மன்னனின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தது.  அம்மன்னனின் 42 ஆம் ஆட்சியாண்டில் எழுதப்பட்டது.

இது ஒருதான சாசனமாகும். தானம் செய்தவர் ஒரு பிராமணப் பெண். அவளது பெயர் நங்கை சானி. அவள் தனது கணவனான ஞக்ரமவிந்தன் எனும் பிராமணன் இறந்ததன் நினைவாக இத்தானத்தினைச் செய்திருக்கிறாள்.

இத்தானம் கந்தளாயான விஜயராஜ சதுர்வேதி மங்கலத்தில் இருக்கும் தென்கைலாசமான ஸ்ரீ விஜயராஜ உடையாருக்குச் செய்யப்பட்டதாக கல்வெட்டின் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிடப்படும் விஜயராஜ சதுர்வேதி மங்கலத்தினை விளங்கிக்கொள்ள நாம் முதலில் கந்தளாயில் சோழர்காலத்தில் இருந்த  இராஜராஜ சதுர்வேதிமங்கலம் பற்றி அறிந்துகொள்வது அவசியமாகும்.

                                         இராஜராஜ சதுர்வேதிமங்கலம்

சோழராட்சிக் காலத்திலே கந்தளாயில் இராஜராஜ சதுர்வேதிமங்கலம் என்னும் பிரம்மதேயம் ஒன்றிருந்தது. இது அரசால் பிராமணர்களுக்கு வரியின்றி வழங்கப்பட்ட நிலமாகும்.

வேதகாலத்திலிருந்து பிராமணர்களின் ஆதிக்கம் இருந்தாலும், சோழர் காலத்தில்தான் இவ்வாதிக்கம் நிறுவனமயப்படுத்தப்பட்டது. வேத சாத்திரங்களிலும், புராணங்களிலும் தெளிந்த அறிவுடையவர்களாக இருந்த பிராமணர்கள் அம்பலங்களிலும், திருக்கோயில்களிலும் இரவில் மகாபாரதம், பதினெண்புராணம் என்பவற்றை பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் படித்தனர்.

அரசர்களுக்குரிய ஆசாரியர்களாகவும், அரசனின் நல்வாழ்வு வேண்டி வேள்வி, கிரியைகள் செய்பவர்களாகவும் பணிபுரிந்தனர். மன்னனின் நம்பிக்கைக்கும், பெருமதிப்புக்கும் உகந்தவர்களாகச் செயற்பட்ட இவர்கள் சோழப் பேரரசில் அமைச்சர்களாகவும், படைத்தலைவர்களாகவும் சேவையாற்றினர்.

இவர்களது சேவைக்காக அகரப் பற்று, அக்கிரசாலைப்புரம், அக்கிரகாரவாடை, வேதவிருத்தி, பட்டவிருத்தி, அத்தியாயனவிருத்தி முதலான பலவகை மானியங்கள் மன்னனால் வழங்கப்பட்டன.

பிராமணர்களுக்கு சதுர்வேதிமங்கலம் எனும் பெயரால் கிராமங்களும், நிலங்களும் மன்னனால் வரியின்றி தானமளிக்கப்பட்டன. பல்வேறுபட்ட மக்கள் வாழும் ஊர்களில் பிராமணர்களுக்குத் தனியான தெருக்கள் ஒதுக்கப்பட்டன.

பிராமணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட பல சதுர்வேதிமங்கலங்கள் சோழப்பேரரசில் பரவலாக இருந்தன. அவனி நாராயண சதுர்வேதி மங்கலம், மதுராந்தகச் சதுர்வேதி மங்கலம், இராசராசச் சதுர்வேதி மங்கலம், உத்தரமேரு சதுர்வேதி மங்கலம், செம்பியன் மாதேவிச் சதுர்வேதி மங்கலம், கண்டராதித்;த சதுர்வேதி மங்கலம் என்பன அவற்றுள் சிலவாகும்.

இலங்கை முழுவதையும் ஆண்ட சோழர்களின் செல்வாக்குப்பெற்ற பிரதேசமாக திருகோணமலை இருந்தது.சோழர்களின் ஆட்சியில் கந்தளாய் இராஜேந்திர சோழவளநாடு என்னும் பிரிவில் அடங்கியிருந்தது. இது மும்முடிச் சோழ வளநாடு, இராஜவிச்சாதிர வளநாடு என்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டது.

கந்தளாயிலிருந்த பிராமணக் குடியிருப்பை “இராஜராஜ சதுர்வேதி மங்கலம்” எனப்பெயர் சூட்டி சோழர்கள் ஆதரித்தார்கள் . ஐயங்கொண்ட சலாமேக சதுர்வேதி மங்கலம், ஸ்ரீபதி கிராமம் போன்ற இலங்கையில் இருந்த பொலநறுவைக் காலத்து பிரம்மதேயங்களில் (பிராமணக் குடியிருப்பு) கந்தளாய் பிரம்மதேயம் முதன்மை பெற்று விளங்கியது.

 இங்கு வாழ்ந்த மக்களால்  கந்தளாய்க் குளத்துடன் தொடர்புடைய வாய்க்கால்  தொடர்பிலும், அவற்றின் மூலம் பாசனம் பெறும் வயல் நிலங்களுக்கான வரிதொடர்பாகவும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதைச் சொல்கின்ற கல்வெட்டு ஒன்று இங்குள்ளது. இது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட வரலாற்று ஆய்வாளர்கள் இச்சாசனம் விபரிக்கின்ற நிகழ்ச்சி கி.பி.1033 இல் அல்லது கி.பி.1047 இல் நடைபெறிருக்க வேண்டும் என்ற கருத்தினை முன்வைக்கின்றனர்.

இந்தத்தகவல்கள் மூலம் சோழர் காலத்தில் கந்தளாய் பல விடையங்களில் முடிவெடுக்கும் அதிகாரத்தினைக் கொண்ட சுயாட்சி அலகான இராஜராஜ சதுர்வேதி மங்கலமாக இருந்ததை அறியலாம். 

விஜயராஜ சதுர்வேதி மங்கலம்

பளமோட்டைச் சாசனம் கந்தளாயினை விஜயராஜ சதுர்வேதி மங்கலம் என்று குறிப்பிடுவதை மேலே பார்த்திருந்தோம். நீண்டகாலம் சோழப்பேரரசுக்கு எதிராக பலமுறை படை நடத்தி இறுதியில் வெற்றியீட்டிய சிங்கள மன்னன் முதலாம் விஜயபாகு. அவன் சோழர்காலத்தில் தளர்ச்சியுற்றிருந்த பௌத்த மதத்தின் மீள் எழுச்சிக்காக பர்மாவில் இருந்து புத்த பிக்குகளை வரவழைத்தும் , விகாரைகளைப் புதுப்பித்தும் , புதிய விகாரைகளை அமைத்தும் புத்தமதத்தினை தன்னிலைப்படுத்த பெரிதும் பாடுபட்டவன். இம்மன்னனது ஆட்சியின் கீழ் கந்தளாய் விஜயராஜ சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டதை நங்கை சானியின் தானசாசனம் குறிப்பிடுகிறது. 

சோழர் காலத்தில் இராஜராஜ சதுர்வேதி மங்கலம் என வழங்கி வந்த பிரமாணக் குடியிருப்பு முதலாம் விஜயபாகுவினால் விஜயராஜ சதுர்வேதி மங்கலம் என பெயர் மாற்றப்பட்டு ஆதரிக்கப்பட்டதை இச்சாசனம் உறுதிப்படுத்துகிறது.

சோழரை எதிர்த்து பௌத்த மறுமலர்ச்சிக்காகப் பாடுபட்ட சிங்கள மன்னன் ஒரு பிரமாணக் குடியிருப்பினை ஆதரிப்பதற்கு வலுவான காரணமேதும் இருந்திருக்க வேண்டும். இராஜராஜ சதுர்வேதி மங்கலம் குறிப்பிடத்தக்களவில் பெரிதானதாகவும் , சுயாட்சி அதிகாரம் கொண்டதாகவும் இருந்ததனால் அக்குடியேற்றத்துக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வது தனதாட்சியைப் பொறுத்தமட்டில் புத்திசாலித்தனமான நடவடிக்கையாக அமையாது என்பதனை உணர்ந்து அம்மன்னன் இக்குடியேற்றத்தின் பெயரை மாற்றி ஆதரித்து இருக்க வேண்டும். இது திருகோணமலையில் இருந்த ‘வெல்கம் விகாரை’ என்ற தமிழ் பௌத்த விகாரையை ‘இராஜராஜப் பெரும்பள்ளி’ எனப் பெயர் மாற்றி சோழர்கள் ஆதரித்தது போலானதாகும்.

விஜயராஜேஸ்வரம்

அடுத்ததாக இத்தானம் விஜயராஜ சதுர்வேதி மங்கலத்தில் அமைந்திருந்த தென்கைலாசம் என்று போற்றப்பட்ட விஜயராஜேஸ்வர உடையாருக்குச் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதிலிருந்து இங்கு ஒரு ஆலயம் இருந்ததும் அது ‘ஈச்சரம்’ என அழைக்கப்பட்டதும் அறியப்படுகிறது.

ஊர்ப்பெயர் முதலாம் விஜயபாகு மன்னனின் காலத்தில் மாற்றப்பட்டதைப் போலவே ஆலயத்தின் பெயரும் இராஜராஜேஸ்வரம் என இருந்து பின்னர் விஜயராஜேஸ்வரம் எனப் பெயர் மாற்றப்பட்டிருக்கலாம் என்பதனைப் புரிந்து கொள்ளலாம். இவ்வாலயம் அக்காலத்தில் தென்கைலாயம் என போற்றப்பட்டிருக்கிறது. இங்கு உடையார் என்பது இறைவனைக் குறிப்பதாக அமைந்திருக்கிறது.

இடத்தின் பெயர் ,ஆலயம் என்பவற்றிற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெறுவது தானம் அளித்த நங்கை சானியின்   பொருளாதார நிலை. கணவன் இறந்த பின்னால் அவன் நினைவாகத் தானமளித்த இப்பெண் விஜயராஜேஸ்வரத்திற்கு அளித்த தான விபரம் வருமாறு.

  • ஆறு களஞ்சு பொன்முடி, 
  • சந்தி விளக்கொன்றினை எரிப்பதற்காக ஒரு காசு , 
  • நந்தவனம் வைத்திருப்பதற்கு எட்டுக்காசு, 
  • இவற்றுக்கு ஏற்படும் அழிவுசேர்வுகளை ஈடுசெய்வதற்கு என ஒரு காசு,
  • தேவரடியார் எழுவரைத் தலை இலட்சினையிட்டு பராமரிப்பதற்கென்று இருபத்திமூன்று காசு 
என்பனவற்றை ஆலயத்திற்கு தானமாக வழங்கினாள் என இச்சாசனம் உறுதிப்படுத்துகிறது. மேற்கூறிய தான விபரங்கள் நங்கை சானியின் பொருளாதார நிலையினை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

விளக்கெரித்தல் , நந்தவனங்களைப் பராமரித்தல் போன்ற ஆலயக் கடமைகளுக்கு அப்பால் தேவரடியார்கள் தொடர்பிலும் நங்கை சானியால் தானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

தேவரடியார்கள் 

இது குளக்கோட்டன் சமூகம்

தேவரடியார்கள் அல்லது தேவதாசிகள் முறைமை சோழராட்சியின் நீட்சியாக இங்கு நோக்கப்படுகிறது. கோயில் திருப்பணிக்காக தங்களை முழுமையாக அர்பணித்துக் கொண்டவர்கள் தேவரடியார்கள். பக்தி இலக்கியம் மேலோங்கி இருந்த ஆறாம் நூற்றாண்டளவில் இவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தாலும் இராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்திலேயே தேவரடியார்கள் முறைமை நிறுவனமயப்படுத்தப்பட்டது.

அதன்போது தேவரடியார்கள் கோவில் ஊழியர்களாக்கப்பட்டார்கள் , ஒரு விதமான அடிமைமுறை அவர்கள் மேல் திணிக்கப்பட்டது. இராஜராஜன் தஞ்சைப் பெரியகோவிலை நிர்மானித்த காலத்தில் அங்கு பணிபுரிவதற்கென 400 தளிச்சேரிப் பெண்களைக் கொண்டுவந்து நியமித்தான்.

பல குலங்களில் இருந்தும் தாமாக தம்மை இறைவனுக்கு அற்பணித்துக் கொண்ட பெண்களும் ,தொடர்ச்சியாக சோழர்களால் மேற்கொள்ளப்பட்ட போர்களில் போர்க்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களும் ,வறுமை காரணமாக தாமாகவோ அல்லது செல்வந்தர்களால் விலை கொடுத்து வாங்கப்பட்ட பின்னர் ஆலயங்களுக்கு விற்கப்பட்டவர்களும் தேவரடியார்களில் அடங்கி இருந்தனர்.

சோழர்காலத்தில் தேவரடியார்களுக்கு இலச்சினை இடும் பழக்கம் இருந்திருக்கிறது. சைவக்கோவில்களில் பணியாற்றும் தேவரடியார்களுக்கு சூல இலச்சனையும், வைணவக் கோவில்களில் பணியாற்றும் தேவரடியார்களுக்கு சக்கர இலச்சனையும் இடப்பட்டது.

இந்தப் பின்னணியிலேயே நங்கை சானியால் கந்தளாயில் இருந்த விஜயராஜேஸ்வரத்திற்கு தேவரடியார் எழுவரைத் தலை இலச்சனையிட்டு பராமரிப்பதற்கு வழங்கப்பட்ட தானத்தினைப் புரிந்துகொள்ள முடியும்.

இவையனைத்தையும் தானமாக வழங்கிய அப்பெண் இந்த அறக்கட்டளைகளை பரிபாலனம் செய்யும் பொறுப்பினை விக்கிரம சலாமேகத் தெரிந்த வலங்கை வேளைக்காறன் எனும் படைப்பிரிவிடம் ஒப்படைத்த செய்தியை கல்வெட்டின் இறுதி வாசகங்கள் ஆதாரப்படுத்துகின்றன.

சோழப்பேரரசின் ஆதிக்க விரிவாக்கத்திற்கு அடிப்படைக்காரணமாக இருந்தது அவர்களது நன்கு பயிற்றுவிக்கப்பட்ட திறமையும்,தேர்ச்சியும் பெற்ற நிலையான படையணிகள். அவற்றில் முக்கியமான பிரிவுகளில் ஒன்று வேளைக்காறப் படையணி . அதில் வலங்கை, இடங்கை முதலான பதினாங்கு பிரிவுகள் இருந்தது.

சோழராட்சி இலங்கையில் முற்றுப்பெற்ற பின்னரும் இவர்கள் பெரும் வலிமையுடன், அதிகாரம்மிக்கவர்களாக சிங்கள மன்னர்களிடம் சேவகம் செய்தனர். இவர்கள் சேவைமானியமாக நிலங்களைப் பெற்றிருந்தனர். இவ்வாறான படைப்பிரிவுகளில் ஒன்றான விக்கிரம சாலமேகத் தெரிந்த வலங்கை வேளைக்காறர் என்னும் படைப்பிரிவிடமே நங்கை சானி மேற்கூறிய தானங்களை மேற்பார்வை செய்யும் பொறுப்பினை ஒப்படைத்திருந்தார். இச்செய்தி மூலம் அந்த பிராமணப்பெண் செல்வ வழத்துடன், அரசியல் செல்வாக்கும் கொண்டவளாக இருந்தாள் என்பது புலனாகிறது.

இருவகைப் பெண்களின் வரலாற்றுப் பதிவுகள்

இன்று நான் இப்பதிவினை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் திருகோணமலை நகரப் பகுதியில் இருந்து சுமார் 40Km  தூரத்தில் இருக்கும் கந்தளாயில் இன்றைக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த இருவகைப் பெண்கள் இவர்கள்.
  • நங்கை சானி
  • தேவரடியார் 
நங்கை சானி
நங்கை சானி தொடர்பில் மேலே விரிவாகப் பார்த்திருந்தோம். அவர் 1000 வருடங்களுக்கு முன்னால் கந்தளாயில் இருந்த அதிகாரம்மிக்க சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்தவர். அரசியல், சமுக, பொருளாதார பலம் மிக்கவராக வாழ்ந்தவர்.


தேவரடியார் 
கந்தளாயில் நங்கை சானியின் சமகாலத்தில் வாழ்ந்த இவர்கள் அடிமைகளாக இருந்தனர் என்பதனை இக்கல்வெட்டுச் சொல்கிறது. கல்வெட்டுக்கள் அதிகாரத்தில் இருந்தவர்களால் உருவாக்கப்பட்டவை என்பதனால் இவர்கள் தொடர்பில் தகவல்களைப் பெறுவது கடினமானது. எனினும் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும்
  1. தேவரடியார் எழுவரும் நங்கை சானியின் அடிமைகளாக இருந்தனர் அல்லது கோவிலுக்கு தானம் கொடுப்பதற்காக அடிமைகளாக வாங்கப்பட்டிருந்தனர்.
  2. தானம் வழங்கப்பட்டபோது அவர்கள் தலையில் குறி சுடப்பட்டது.
  3. ஆலயதானமாக வழங்கப்பட்ட அவர்கள் வாழ்வு அடிமைத்தனத்துடனேயே முடிந்திருக்கும்.
இத்தகைய தகவல்கள் தவிர இவர்களின் வாழ்க்கைமுறை  தொடர்பில் இக்கல்வெட்டில் வேறு தகவல்கள் எதுமில்லை. எனினும் இரண்டாம் கஜபாகு (கி.பி 1132-1153) மன்னன் காலத்திற்குரிய எல்லை நிர்ணயம் தொடர்புடைய கல்வெட்டு ஒன்று சில ஊகங்களுக்கு வழிவகுக்கிறது.

இம்மன்னனுடைய ஆட்சிக்காலத்தில் கந்தளாயில் இருந்த பிரம்மதேயமான பிராமணக் குடியிருப்பில் இடையர்கல் எனும் இடத்தில் ஊர் மக்களால் எல்லைக்கல் நாட்டப்பட்டதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

கந்தளாய் முழுவதும் சதுர்வேதி மங்கலமாக இருந்திருந்தால் எல்லைக்கல் நாட்டவேண்டிய தேவை ஏற்பட்டு இருக்காது. எனவே கந்தளாயில் குளத்தை அண்டிய மேடான வளம்மிக்கபகுதி சதுர்வேதி மங்கலமாகவும், தாழ்ந்த, வளம்குறைந்த, வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய பகுதி சேரிப்பகுதியாகவும் இருந்திருக்க வேண்டும். முன்னதில் நங்கை சானியும் பின்னையதில் தேவரடியாராக தானம் வழங்கப்பட்ட பெண்களும் வாழ்ந்திருப்பர்.

அடிப்படையில் பெண்களான இவ்விருவரையும் அவர்களது சமுதாய ஏற்றத் தாழ்வு நிலை சமுகத்தில் வைத்திருந்த பாங்கினை விரிவாக மேலே பார்த்தோம்.

நம்மூதாதையர் ஆயிரம் ஆண்டுகளாக பெற்றுக்கொண்ட அனுபவ படிப்பினைகளுக்கூடான பண்பாட்டு முதிர்சியை இன்று நாம் பெற்றிருக்கிறோம்.

ஆனால் இன்றும் இதுபோன்ற சமுதாய ஏற்றத் தாழ்வுகள் எம்மத்தியில் நிலவிய வண்ணமே இருக்கிறது. அவை விமர்சிக்கப்பட வேண்டியவை மட்டுமல்ல , விட்டுவிலக்கப்படவேண்டியவையும்கூட. அதுவே நம் சமுகத்தின் வழமான வாழ்வுக்கு வழிசமைப்பதாய் அமையும்.

நட்புடன் ஜீவன்.
admin@geevanathy.com



மேலும் வாசிக்க

              துளைகொண்ட அபூர்வ பானை கந்தளாயில் - புகைப்படங்கள்

இது குளக்கோட்டன் சமூகம்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

7 comments:

  1. Dear Dr
    You have brought our Marvelous treasures into light. Keep it up and Thank you fr your effort - Kernipiththan arulanantham

    ReplyDelete
  2. சிவபாலன்Jul 25, 2017, 2:47:00 PM

    உங்கள் கடைப்பந்தியில் குறிப்பிடப்பட்ட ஏற்றத்தாழ்வுகளும்சாதிபார்ப்பதுவும் தவிர்கப்பட வேண்டும் என்பது உண்மை. இப்பொழுதும் சுவிட்சர்லாந்துபோன்ற நாடுகளில் நம் யாழ் சகோதரர்கள் இதனைக் கடுமையாகப்பின்பற்றுவதைக்காணலாம்.எம்இனத்தின் சாபக்கேடு இது.

    ReplyDelete
  3. இவை களையப்படும்போதே நம் சமுகம் மீட்சிபெறும்.

    ReplyDelete
  4. தென் இந்தியாவிலும் பாண்டியர் கால கல்வெட்டுக்களில் "நங்கை சானி" இன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுக்கு என்ன தொடர்பு என்று ஆராய வேண்டும்.

    ReplyDelete
  5. தென் இந்தியாவிலும் பாண்டியர் கால கல்வெட்டுக்களில் "நங்கை சானி" இன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுக்கு என்ன தொடர்பு என்று ஆராய வேண்டும்.

    ReplyDelete