Tuesday, December 06, 2022

07.06.1786 இல் ஆதிகோணநாயகர் ஆலயம்


தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம் காலனித்துவ ஆட்சியாளர்களின் பயணக்குறிப்புகளில் Tamblegam Pagoda என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இன்று நமக்குக் கிடைக்கும் Tamblegam Pagoda தொடர்பான பல்வேறு தகவல்களில் ஒல்லாந்து ஆளநர் Van Senden அவர்களின் குறிப்பு அதிக முக்கியத்துவம் பெறுவதாக அமைகிறது.

ஒல்லாந்து ஆளுநர் Van Senden அவர்கள் 07.06.1786 புதன்கிழமை அன்று Tamblegam Pagoda (தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம்) இற்கு விஜயம் செய்துள்ளார். அவர் பதிவு செய்திருக்கும் குறிப்பு இவ்வாலய மேலதிக ஆய்வுகளுக்கு அவசியமானவை என்ற வகையில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஆளுநரின் ஆலய தரிசனம் தொடர்பான தமிழ் மொழிபெயர்ப்பு இவ்வாறு அமைகிறது.

'கிழக்கில் இருந்து மேற்காக அமைக்கப்பட்டுள்ள தம்பலகாமத்தில் உள்ள புகழ் வாய்ந்த ஆலயத்திற்கு நான் மாலையில் சென்றேன். பிரதம பிராமணக் குருக்கள் இன்னும் சிலருடன் சேர்ந்து என்னை வரவேற்க வந்தார். அவர் எனக்கு சம்பிரதாய பூர்வமாக வழங்கப்படும் அன்பளிப்பான தேசிக்காயும் பூக்களும் வழங்கினார். நான் அவரிடம் கீர்த்தி மிக்க இரண்டு விக்கிரங்களையும் காட்டுமாறு கேட்டேன். அதில் ஒன்று போர்த்துக்கீசர் வருகையின் போது ஆயிரங்கால் மண்டபக் கோயிலில் (திருக்கோணேச்சரம்) இருந்து பாதுகாப்பாக எடுத்து வரப்பட்டதாகும். பல சிரமங்களின்  பின்னர் என் வேண்டுதலின் பின்னர் என் பரிசுப் பொருட்களைப் பெறச் சம்மதித்தார். என்னை ஆலய மண்டபத்திற்கு அப்பால் நெருங்க அனுமதிக்கப்படவில்லை. ஆலயத்தில் நன்றாக ஒளி அலங்காரம் செய்யப்பட்டிருந்ததால் எனது தொலைநோக்கியின் உதவியுடன் ஒருவகைப் பலிபீடத்தில் அமர்ந்தவாறு காட்சியளிக்கும் விக்கிரகங்களை ஒருவாறு பார்க்க முடிந்தது. அவை துணியினால் போர்க்கப்பட்டு முகம் மாத்திரம் பார்க்கக் கூடியதாக இருந்தது. முற்பக்கத்தில் கோணேசரைப் போன்றும் அவருடைய இடப்பக்கத்தில் சாய்வான நிலையில் ஈஸ்வரி அம்மன் அமர்ந்திருந்தார்.
என மிக விரிவாக ஆலய புராதன விக்கிரகங்கள் தொடர்பான அவரது வர்ணனை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இன்றைக்குச் சுமார் 230 வருடங்களுக்கு முன்னர் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய புராதன விக்கிரகங்கள் தொடர்பாகக் கிடைக்கும் நம்பகமான தகவல் இது என்ற வகையில் இவ்வாவணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

மேற்குறித்த விக்கிரகங்கள் திருக்கோணேச்சரம் போர்த்துக்கீசரினால் அழிக்கப்பட்ட போது பாதுகாப்பாக தம்பலகாமம் கொண்டுவரப்பட்டவை என்பதும் இவ்விரு விக்கிரகங்களும் பலிபீடம் போன்ற அமைப்பில் அமர்ந்த நிலையில் வார்க்கப்பட்ட விக்கிரகங்கள் என்பதும் கூர்ந்து கவனிக்கத்தக்கது. இங்கு குறிப்பிடப்படும் அமர்ந்த நிலையில் வார்க்கப்பட்ட விக்கிரகங்கள் சிவனின் உமாமகேசுவர மூர்த்தமா? என்ற ஐயப்பாடு மனதில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம் நிர்மாணிக்கப்பட்ட ஆண்டு இதுவரை  சரிவர அறியப்படவில்லை என்ற போதிலும் ஒல்லாந்து ஆளுநரின் விஜயம் இவ்வாலயம் கட்டப்பட்டு சுமார் ஒரு நூற்றாண்டு காலப்பகுதியை அண்மித்ததாக நிகழ்ந்திருக்கிறது. எனவே ஆளுநரின் பதிவு தம்பலகாமம் ஆதி கோணநாயகர் ஆலய புராதான விக்கிரகங்கள் தொடர்பில் கிடைக்கும் நம்பகரமான முதல் தகவலாகிறது. இக்காரணத் தினால் மிகுந்த ஆவலுடன் ஒல்லாந்து ஆளுநரின் அறிக்கையின் மூல ஆவணத்தை தேட வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. 
குளக்கோட்டு மன்னன் திருப்பணி செய்த திருக்கோணேச்சரத்தை போர்த்துக்கீசர் இடித்தழித்த பின்னர் அங்கிருந்து மறைவாக சில விக்கிரகங்களை ஆலயத் தொழும்பாளர்கள் தம்பலகாமம் கொண்டுவந்தனர். அவற்றில் அமர்ந்த நிலையில் வார்க்கப்பட்ட விக்கிரகத்தினையே அப்போதைய ஆலயப் பிரதம குருவாக இருந்தவர் ஆளுநருக்கு காட்டி இருக்கிறார் என்பதனை ஆவ்வாவணம் கீழ்வருமாறு பதிவு செய்கிறது. 

ஒல்லாந்து ஆளுநரின் அறிக்கை

 1.Twee beelden in zittende postuur (two statues in sitting   posture)  இரு விக்கிரகங்கள் அமர்ந்த நிலையில்

 2. Ccin it front was het beeld van den koning koneesen en aan zyne linker zeyde in een oblique linie dat van isowerie amen (in the front was the image of the king koneses and on its left side in an oblique line that of isowerie ammen his wife) முற்பக்கத்தில் கோணேசரைப் போன்றும் அவருடைய இடப்பக்கத்தில் சாய்வான நிலையில் ஈஸ்வரி அம்மன் 

எனத் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளமை கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது.

ஒல்லாந்து ஆளுநர் தொலைநோக்கியூடாகப் பார்த்த விக்கிரகங்கள்  உமாமகேசுவர மூர்த்தமாக இருந்தால் அவை இப்போது எங்கே என்ற கேள்வி எழும். தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வரலாற்றில் பல களவுச்  சம்பவங்களும் வன்முறைகாலங்களில் சூறையாடல் சம்பவங்களும் நிகழ்ந்திருப்பதால் இந்தப் புராதன விக்கிரகங்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய உறுதியான தகவல்கள் ஏதும் இதுவரை திரட்டப்படவில்லை.

இத்தகவல் எதிர்காலத்தில் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வரலாற்றோடு மட்டுமல்லாது திருக்கோணேஸ்வர ஆலய வரலாற்றிலும் நாம் தேடிக் கண்டறிய வேண்டிய பல வரலாற்றுப் புதிர்களுக்கு அடிப்படையான தகவலாக அமைகின்றது.


tjeevaraj78@gmail.com


தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வு நூலினை தற்பொழுது கொழும்பில் பெற்றுக்கொள்ளலாம்.

விரும்பியவர்கள் தொடர்புகொள்ள....
பூபாலசிங்கம் புத்தகசாலை
309 A 2/3 Galle Rd, Colombo 6
Phone: 0114 515 775
WhatsApp +94 716 335 511
ஆர்வமுள்ள நண்பர்களுக்கு இத்தகவலை பகிர்ந்துதவுங்கள்.

நட்புடன் ஜீவன்.இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment