Thursday, November 05, 2015

நல்லதோர் வீணை - கேணிப்பித்தன் ச.அருளானந்தம்


கேணிப்பித்தன் ச.அருளானந்தம் அவர்கள் எழுதிய நல்லதோர் வீணை நூல் வெளியீட்டு விழா திருகோணமலை ஶ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் சம்பந்தர் மண்டபத்தில் 24.10.2015 அன்று இடம்பெற்றது.

நூலாசிரியர் உரை

இந்நாவலைப் படிப்பவர்களை 1950 தொடக்கம் 1967 வரையான காலப்பகுதிக்குள் அழைத்துச் செல்கிறேன். அப்போது நமது சமூக அமைப்பினை வாசித்துப் பார்க்கலாம். கிராமியச் சூழலை ரசிக்கலாம். சமூகக்கட்டமைப்பினையும் மக்களின் வாழ்வியலையும் விளங்கிக் கொள்ளலாம். இந்த நாவலை எழுதிவிட்டு வெளியிட வசதியற்ற நிலையில் இருந்தேன். நிதிநிலை காரணமாக காலங்கடந்து விட்டது. வாய்ப்பும் சந்தர்ப்பமும் கிடைக்காது போயிற்று. எனினும் இந்நூலை வெளியிட முனைந்து இன்று வெளிவந்து உங்கள் கரங்களில் தவழவிட்டிருக்கிறேன். தொடர்ந்து எழுதுவதா? விடுவதா? என்பது வாசகர்களின் கைகளில்தான் உள்ளது. இந்நாவலுக்குப் பின் எழுதிய நாவல்களை வெளியிட வாய்ப்புக் கிடைத்தன.

இது கற்பனைகலந்த உண்மை. இதில் வரும் கதாபாத்திரங்களில் பல உண்மையானவை. நான் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களை விபரித்துள்ளேன். இன்பமும் மிகத் துன்பமும் நிறைந்த கொடுரமான காலமாக இருந்தது.; இளைஞர்களால் சாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் நிறையவே உள்ளன. இளைஞர்களால்தான் சமூகத்தை மலர்ச்சியுறச் செய்யலாம் என்பது எனது நம்பிக்கை.

வாழ்க்கையென்பது மலர்ப்படுக்கையல்ல. சுழன்றடிக்கும் சூறாவளிகள் நிறைந்த ஒரு மையம். வாழ்க்கையைப் புரிந்தவன் சமாளித்துக் கொள்வான். வாழ்க்கையைப் புரியாதவன் காலச்சுழியில் சிக்கி அல்லல் பட்டு வீழ்ந்து போவான். எப்போதும் விழிப்பாக இருப்பவன் வாழ்க்கைக் கடலை நீந்திக் கடந்து விடுவான். வள்ளுவர் வகுத்த வழியில் செல்பவன் வாழ்க்கையை எளிதில் புரிந்து கொள்ளுவான்.

பரீட்சைக்கு ஆயத்தம் செய்யும் மாணவன்போல்தான் எப்போதும் வாழ்க்கையைப் புரிவதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். துன்பத்தைக் கண்டு துவண்டு விடாதும், இன்பத்தைக் கண்டு மதிமயங்காதும் இருப்பவன் வாழ்க்கையை அனுபவிப்பான்.

சம்பவங்கள் பல நிறைந்துள்ள இந்நாவலில் இன்பமும், துன்பமும், சமூக அவலங்களும் பின்னிப் பிணைந்திருப்பதைக் காணலாம். நாம் நல்லனவற்றைச் செய்தால் நன்மைதான் விளையும். சுடச்சுடத்தானே பொன் மிளிரும். அதைப்போன்றுதான், மனிதனுக்குத் துயரங்கள் வரும்போது அவற்றை நமக்கு வரும் சோதனைகளாக எடுத்துக் கொண்டால் வெற்றி காண்பது உறுதி. ‘சவாலே சமாளி’ என்பதுதான் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். ‘காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்’ என்று ஏன்சொன்னார்களோ தெரியாது. சிலர் அதனைத் தங்களுக்குச் சாதகமாக்கி மக்களை ஏமாற்றுவதற்குப் பயன்படுத்துவதையே காண்கிறோம். இந்நாவலின் கதாபாத்திரங்கள் ஓரு கிராமத்தின் எழுச்சியில் எவ்வாறு பங்கு கொண்டுள்ளனர் என்பது பேசப்படுகிறது. நல்லாசிரியர்களது குணவியல்புகள் பேசப்படுகின்றன.

இந்த நாவலூடாக எனது கிராமத்தின் அக்கால நிலமையினைச் சொல்லியிருக்கிறேன். சாதாரண சராசரி மனித வாழ்க்கையில் எழும் பிரச்சினைகள் பேசப்படுகின்றன. அத்துடன் சில வரலாற்றுப் பதிவுகளையும் சேர்த்துள்ளேன். அன்று முதல் இன்றுவரை சுயநலமிகள் இருந்துள்ளதைத் தொட்டுக் காட்டியுள்ளேன். நானில்லாத காலத்தில் எனக்குப் பின்வரும் சந்ததியினருக்காகச் சில தடயங்களைச் சொல்லிவைப்பது எனது கடமையென உணர்ந்ததால் அவ்வாறு செய்தேன். படித்துப் பாருங்கள். அமரர் வ.அ.இராசரத்தினம் ‘ஒரு வெண்மணல்கிராமம் காத்துக்கிடக்கிறது’ என்ற நாவலின் தொடர்ச்சியாக இந்நாவல் அமையலாம் என்பது எனது அனுமானம். இதில் வரும் பாத்திரங்கள் நீங்களாகவும் இருக்கலாம்.

எனது ‘நெருங்கின பொருள் கைப்படவேண்டும்’ என்ற நாவலுக்கு அணிந்துரை தந்த கலாபூஷணம் திரு.செ.விபுணசேகரம் அவர்கள் இந்நூலுக்கும் மனமுவந்து அணிந்துரை தந்துள்ளார். அவர் சகலகலாவல்லவன். இயல் இசை நாடகம் ஆகிய துறைகளில் வல்லவர். இசைக்கருவிகளை இசைப்பதில் வல்லவர். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

கேணிப்பித்தன் ச.அருளானந்தம்


     
புகைப்படங்கள் - திரு.சி.சசிக்குமார்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. வணக்கம்
    ஐயா

    நிகழ்வை சிறப்பாக தொகுத்து வழங்கியமைக்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete