Wednesday, March 18, 2015

ஆதி கோணநாயகர் கோயில் வரலாறு (04.07.1980) - புகைப்படங்கள்


1980 ஆண்டு அமரர்  தம்பலகாமம். க.வேலாயுதம்  அவர்கள் ஆக்கிய  ‘தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் வரலாறு’ என்ற தலைப்பில் அமைந்த இந்நூல் வெளியீடு செய்யப்பட்டது. 


இராஜகோபுரம் அமைவதற்கு முன்னால் மூலஸ்தானத்தில் இருந்த சிவலிங்கம்.


படத்தில் இருக்கும் சிவஸ்ரீ ந.நாகேஸ்வரக் குருக்கள் ஆதிகோணநாயகர் ஆலயத்தில் 1963 முதல் 1985- 86 வரை பூசகராக இருந்தார். இவர் இணையவெளியில் பரவலாக அறியப்பட்ட மலைநாடான் அவர்களின் தந்தையாவார்.




ஆதி கோணநாயகர் கோயில் வரலாறு
 (04.07.1980) 

1980 ஆண்டு தம்பலகாமம் ஆதிகோணநாயகர் வழமைப் பிரகாரம் ஆடி அமாவாசைத் திர்த்தத்திற்காக ஆலங்கேணியிலுள்ள கங்கைக்கரையோரம் பக்தர்கள் படைசூழ எழுந்தருயிருந்த வேளையில் அமரர்  தம்பலகாமம். க.வேலாயுதம்  அவர்கள் ஆக்கிய ‘தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் வரலாறு’ என்ற தலைப்பில் அமைந்த இந்நூல் வெளியீடு செய்யப்பட்டது. 

பிரபல எழுத்தாளரும், இலங்கையின் சிறுவர் இலக்கிய முன்னோடியுமாகிய கலாபூசணம் திரு.எஸ்.அருளானந்தம் அவர்களின் தலைமையில் இவ்வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக இடம்பெற்றது. கவிஞர் ‘தாமரைத்தீவான்’ அவர்கள் நூல் ஆய்வுரையை கவிதையில் உரைத்தார். 

தம்பலகாமம் கந்தர்வகான இசைமணி கலாபூசணம் அமரர் க.சண்முகலிங்கம்  அவர்கள் இந்நூலிலுள்ள பாடல்கள் அனைத்தையும் தனது மதுரமான குரலில் பண்ணிசைத்துப்பாடினார். அமரர்களான திருவாளர் வேலாயுதம் கனகசபை, திருமதி தங்கம்மா கனகசபை ஆகியோர்களின் நினைவுமலராக இந்நூல் வெளியீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  


திருச்சிற்றம்பலம்
(விநாயகர் துதி)
கங்கை சூடிய கோணயங்கடவுளின் கருத்தை விட்டகலாத
மங்கை தன்னோடு தம்பலகாம மெனும் பெரும்பதியினிலமர
இங்கு மோருயர் ஆலயமமைந்த சரிதையைச் செய்யுளிற் சமைக்க
துங்கமாமுக விநாயகன் மலரடி தொழுவது நம் கடனாகும்.
அவையடக்கம்
கல்வியிற் சிறந்த மேலவரியற்றும் கவிவளம் பொருள்நயமுள்ள
நல்லிசைப்பாடலால் அமைத்திடும் திறமை எனக்கில்லையாயினும் ஈசன்
வல்லமையொன்றே துணையென நம்பி வரைந்திடும் வலராற்றிலேதும்
சொற்பொருள் குற்றம் உளதெனில் பெரியோர் பொறுத்தருள் செய்திட வேண்டும்.
நூல்
சோழகங்கன் எனுமொருதூயோன் கோணமாவரையினி லமைத்த
நீழ்மதிலுடனே வானுறவுயர்ந்த கோணநாயகர் திருக்கோயில்
பாழ்மனமுடைய பறங்கியராலே அழிபட விருப்பதையறிந்து
மாழ்கி நைந்தனர் திருமலை நகர்வாழ் சைவநன் மரபினில் வந்தோர்,

அன்னியர் கைகளில் கடவுளர் உருவம் அகப்படுமோர்நிலை நேர்ந்தால்
தன்னகர்கொண்டு ஏகுவறென்றுளம் அஞ்சினர் சைவநற்பெரியோர்
எந்நிலைநேரினும் தாம்வழிபாடுசெய் கோணநாயகர் திருவுருவை
முன்னமே எடுத்துச் சென்றிடவேண்டுமென் றோருயர் முடிவினைச் செய்தார்,

ஆலயப்பகுதிக்குள் சைவர்கள் சென்றுபின் மீழ்வது அரியதாயிருந்தும்
மேலவரான சைவநற்பெரியோர் வெகுண்டொரு இரவினிற்புகுந்து
மாலயன் தேடியும் காணாத ஒருவனின் வடிவினைக் கைகளில் ஏந்தி
விலங்குகள் நிறைந்திடும் கானகவழியில் விரைந்தனர் தென்திசை நோக்கி.

தம்பலகாமத்தின் மேற்கினிலுள்ள மலைதனில் மூர்த்தியை வைத்து
எம்பெருமானின் திருவடி தொழுது இயற்றினர் பூசனை பலநாள்
நம்புமவ்வடியார் படுதுயர்கண்டு நாயகனானபேர் இறைவன்
தம்பலகாமத்தில் கோயிலொன்றமையக் கருணையாற்றிருவுளங் கொண்டான்

மாருதப்புரவிக வல்லியின் வயிற்றினில் வந்திடும் வரராசசிங்கன்
சீர்மிகுஈழ நாட்டினிலரசு செய்திடும் போதவன் கனவில்
கூர்வளைப் பிறையை அணிந்தவரான கோணநாயகர் எழுந்தருளி
நீர்வளஞ் செறிந்த தம்பலகாமத்தில் நிறுவுக ஆலய மென்றார்.

மன்னனே! நாமும் மலைதருமகளும் மற்றுள கணங்களுமுறைய
செந்நெலால் நிறையும் தம்பலகாமத்தில் சிறப்புறக் கோயிலொன்றமைப்பாய்
முன்னம் நீ செய்த வினையெலாமிதனால் முடிந்திடு மென்றுரை செய்தான்
என்னதுவென்று துயில்நிலை யொழிந்து எழுந்தனன் வரராஜசிங்கன்.

கனவிற்கண்டது என்னே! என்றவன் கருத்தினில் பலவாறுவெண்ணி
வினைதனைப்போக்கும் ஈசனின் ஆணை என்றதை மகிழ்வுடன் ஏற்று
நினைவினிலினிக்கும் நெஞ்சிடையமர்ந்த நிர்மலனடியினைத் தொழுது
தானைகள் சூழ ஜெயதுங்க வரராஜன் தம்பலகாமத்தை வந்தடைந்தான்.

மன்னனின்வரவு கண்டுளம்நெகிழ்ந்து மகிழ்ச்சியிலாழ்ந்து அச்சைவர்
தன்னுளமுள்ள கருத்துகள் யாவும் அரசனுக்கெடுத்துரை செய்து
நன்னிலைதன்னில் கோணநாயகர் அமர்ந்திடத்தக்கதாய் இங்கோர்
பொன்னிகராலயம் அமைத்திட வேண்டும் என்றவன் அடியினை(ணை) தொழுதார்.

தம்பலகாமத்தின் தலையெனச்சிறந்த தக்கதானவோரிடத்தை
எம்பிரான் உறையும் கோயிலொன்றமைக்க ஏற்ற இடமாகத்தெரிந்து
கும்பமாய்த் தூபி முடியுடன் தோன்றக் கோயிலை அழகுறவமைத்து
செம்பினாலுயர் கொடிமரஸ்தம்பம் சிறப்புற அமைந்திடச் செய்தான்.
(வேறு)
மலையிடை வைத்துப்போற்றும் வானவர்க்கரசன் தாளை
பலமுறை வீழ்ந்து தாழ்ந்து பணிந்தனன் அன்பினோடு
சிலைதனை எடுப்பித்திங்கு சேர்த்ததைக் கோயிலுக்குள்
நிலைபெறச் செய்யவுள்ள நெறியெலாம் ஆற்றினானே.

சங்கரா சம்போவென்று சகலரும் இறைஞ்சிப் போற்ற
மங்கள வாத்தியங்கள் வானிடை யுயர்ந்து கேட்க
செங்கையைச் சிரசில் கூப்பித் தேவர்கள் மலர் சொரிய
எங்கணும் சிவ நாமமே எழுந்தது பேரோசையாக

ஆதியாம் கோணைநாதன் ஆலயம் அழிந்திட்டாலும்
நீதியில் சிறந்த குளக்கோட்டனின் தர்மம் குன்றா
சோதியாய்த் தம்பை நாட்டில் துலங்கிடு மாலயத்தில்
மாதுமை பங்கன் கோணை நாயகன் குடி புகுந்தான்

குளக்கோட்டு மன்னன் சொன்ன கூற்றினுக் கமைவாய் எல்லா
வழக்கமும் தொழும்பும் மற்றுங் கிரிகைகள் போற்றி நின்று
உளத்தினில் பக்தி நன்றாய் ஓங்கிடத் தொழும்பு செய்தே
வளத்தினால் மகிழ்ந்து தெய்வ மணங்கமள் வாழ்வு பெற்றார்.

கோணையில் நடந்ததைப் போல் குறைவின்றி இங்கும் செய்ய
ஆணைகளிட்டு மன்னன் ஆவனவெல்லாம் செய்தான்
ஆணவ மலத்தை நீக்கி அருள் தரும் அரன்தாள் போற்றி
சேனைகள் சூம மன்னன் செங்கட நாடு சென்றான்.

அன்று நாள் இருந்து கோணை ஆலயம் இரண்டதாக
நன்றுறப் பூசை செய்வோர் நாடொன்றும் பெருகச் சைவக்
குன்றெனவுயர்ந்து துன்பச் சேற்றினில் வீழ்வார் தம்மை
மன்றுளில் ஆடும் நாதன் மலரடி சேர்க்கு தென்பேன்.

ஒன்றினை யழிக்க ஒன்று தோன்றிய அற்புதத்தால்
இன்றைய உலகில் கோணைப் பதிகளுக்குவமை உண்டோ?
கன்றினைக் கரத்திலேந்தும் கடவுளின் கருணை வேண்டின்
சென்றுநீர் கோணைநாதன் சேவடி போற்றல் செய்வீர்!

உக்கிர சேனசிங்கன் உதவிய சிறுவனான
மைக்கிடு களிற்றுத்தானை வரராஜசிங்க னென்னும்
தக்கவோர் மேலோன் செய்த தலமிது இதனைப் போற்றும்
மக்களின் பிறவித் துன்பம் அகன்ரரன் அடியில் சேர்வர்.

திருச்சிற்றம்பலம்
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்
தம்பலகாமம்.க.வேலாயுதம்



மேலும் வாசிக்க
பகுதி - 1  திருக்கோணேச்சரம்  2015 - புகைப்படங்கள்
பகுதி - 2  'கோணமாமலை அமர்ந்தாரே'  2015 - புகைப்படங்கள்
பகுதி - 3  Koneswaram 2015 - Photo Galleries
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

3 comments:

  1. அருமையான வரலாற்றுப் பதிவு
    நன்றி

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா
    இந்த ஆலயத்தில் வந்து தரிசனம் செய்துள்ளேன்... மிக அழகாக இருக்கும்.. கோயில் வரலாற்றை அறியத்தந்தமைக்கு நன்றி புகைப்படங்கள் ஒவ்வொன்றும் பொக்கிஷம்.... ஐயா.
    இந்த வாரந்தான் ஆலயத்தில் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது ...அறிந்தேன்... பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. தங்களின் கருத்துறைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete