Tuesday, March 24, 2015

தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் பதிகம்திருச்சிற்றம்பலம்

நீர்வளச் சிறப்பும் நிலவளச் சிறப்பும்
நிகரில்லாப் பெருவளம் கொழிக்கும்
ஊரதன் பெயரே தம்பலகாமம்
உழவர்கள் வாழ்ந்திடும் பேரூர்
சீர்மிகு வயல்கள் ஆறுடன் சூழ்ந்த
கோயில் குடியிருப்பெனும் பதியில்
கூர்வளைப் பிறையும் கொன்றையும் அணிந்த
கோண நாயகர் அமர்ந்தாரே

பிரமனும் அரியும் பிழைபடத் தாமே
பெரியவர் என்றென்னும் சிறுமை
புரிபடச் செய்ய முடிவிலா மலையாய்த்
தோன்றினார் பெரும் புகழாளர்
அரியயன் செருக்கு அடங்கிய பின்பு
அவர்கட்கும் நல்லருள் புரிந்தார்
கரிதனை உரித்துப் போர்த்திய நிர்மலர்
கோயில் குடியிருப் பமர்ந்தாரே

கானிடைச் சென்று வேட்டுவ வடிவில்
காண்டீபனுடன் சமர் விளைத்து
வானிடை எற்றி வரம்பல ஈந்த
மாபெரும் வானவர் தலைவர்
தானெனும் முனைப்பு உடையவர்க் கென்றும்
தரிசிக்க முடியாத முதல்வன்
தேன்மலர்ச் சோலையும் வயல்களும் சூழ்ந்த
கோயில் குடியிருப் பமர்ந்தாரே

தேவர்கள் துயரம் தீர்த்திட எண்ணி
தேரூர்ந்து சென்றவர் அங்கே
மூவர்கள் உறையும் முப்புரங்களையும்
முறுவலால் எரிபடச் செய்தார்
சேவலைக் கொடியாய்க் கொண்ட செவ்வேளைச்
செந்தமிழ்க் கடவுளாய் நல்கும்
காவலர் எங்கள் சிவபெருமானார்
கோயில் குடியிருப் பமர்ந்தாரே

கன்றினால் எறிந்து விளாங்கனி உதிர்த்த
கண்ணனின் தங்கையை மணந்தார்
மன்றுனில் ஆடும் கூத்த பிரானை
மறந்திடா திருந்திடும் பெரியோர்
என்றுமே துன்ப இடர்தனில் சிக்கார்
ஏற்றமே அருளுவார் ஈசர்
குன்றென உயர்ந்த தென்னைகள் சூழ்ந்த
கோயில் குடியிருப்பு அமர்ந்தாரே.

குளத்தினில் மூழ்கிய தந்தையைக் காணாக்
குழந்தையின் அழுகுரல் கேட்டு
அளப்பெரும் அன்பொடு அம்மையாய் அப்பராய்
அச்சிறு குழவி முன் தோன்றிக்
கிளர்ந்திடும் ஞானப் பாலமு தூட்டிக்
கிருபையைப் புரிந்த கோணேசர்
வளத்தினில் சிறந்த வயல்களால் சூழ்ந்த
கோயி;ல் குடியிருப் பமர்ந்தாரே

மாதவம் மிகுசெய் மணிவாசகரின்
மனத்துயர் அகற்றுதற்காக
வேதத்தின் முடிவாய் விளங்கிடும் ஈசர்
விரைந்தனர் பரித்திரள் சூழ
பாதி நள்ளிரவில் பரியெல்லாம் நரியாய்
ஆக்கியோர் அற்புதம் புரிந்த
மாதுமை பங்கர் வயல் வெளி சூழ்ந்த
கோயில் குடியிருப் பமர்ந்தாரே

கல்லுடன் பிணித்துக் கடலினுள் எறிந்தும்
கஷ்டங்கள் ஏதுமே இன்றி
நல்லிசைப் பாடலால் நாதனின் நாமம்
நவின்றிடும் நாவுக்கு அரசர்
வல்வினை அகற்றி வைத்தவரான
வானவர் போற்றிடும் தலைவர்
நெல்மணிப் போர்கள் நெருக்கமாய்த் தோன்றும்
கோயில் குடியிருப் பமர்ந்தாரே

தோழமை உயர்வை உலகினுக் குணர்த்த
சுந்தர மூர்த்தியின் மனையாள்
நீழ்விழி நங்கை பரவையா ரிடத்தில்
நயந்துரையாடித் தன் அன்பர்
வாழ்வது சிறக்க வழிவகை செய்த
வல்லவரான எம் பெருமான்
ஆழ்கடல் சூழ்ந்த இலங்கையிலுள்ள
கோயில் குடியிருப் பமர்ந்தாரே

அம்மையை இடப்புறம் இருத்தி இவ்வுலகோர்
இல்லற வாழ்க்கையின் புனிதச்
செம்மையை உணர அம்மை அப்பராய்
சிறப்புற அவர் கொண்ட கோலம்
தம்மையே துதித்து உரிகிடுவோரின்
தழைஎல்லாம் பொடிபடச் செய்து
இம்மையில் முத்தி அருளிடும் முதல்வன்
கோயில் குடியிருப் பமர்ந்தாரே

மாயஇவ்வுலக வாழ்க்கையில் சிக்கி
வருந்திடும் அடியவர் தமக்கு
நோய்தனை அகற்றும் மருத்துவர் போல
நோக்கினால் திருவருள் புரிவார்
தாயினும் பரிவு கொண்டு இவ்வுலகத்
தலைமையைத் தாங்கும் பேரிறைவன்
கோயிலும் வயலும் நீருடன் சூழ்ந்த
கோயில் குடியிருப் பமர்ந்தாரே

தொல்லைகள் சூழ்ந்திடும் துயரங்கள் நேர்ந்திடும்
போதவர் நாமம் நினைந்தால்
அல்லல்கள் அகன்றிடும் ஆனந்தமோங்கிடும்
அகத்தினில் புத்தொளி வீசும்
தில்லையில் திரு நடம் செய்தருள் புரிகின்ற
தெய்வமே இப்பதி மாந்தர்
வல்வினை போக்கிடும் கருணையினால் வந்து
கோயில் குடியிருப்பில் அமர்ந்தாரே.

திருச்சிற்றம்பலம்
தம்பலகாமம்.க.வேலாயுதம்இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

3 comments:

 1. இறையருள் வேண்டிப் படிக்க உதவும்
  இனிய பக்திப் பா வரிகள்
  தொடருங்கள்

  ReplyDelete
 2. வணக்கம்
  ஐயா

  பாடலை பாடினால் துன்பங்கள் நீங்கிவிடும் மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி ஐயா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. தங்களின் கருத்துறைக்கு மிக்க நன்றி!

  ReplyDelete