Wednesday, March 11, 2015

Koneswaram 2015 - Photo Galleries


இதைத் தொடர்ந்து சம்பந்தர் தான் பாடிய பதிகங்களின் எட்டாவது பாடல் இராவணன் பற்றிய குறிப்பினை கொண்டிருக்கும் வகையில் அமைத்திருக்கிறார். இராவணன் தமிழ்வீரன் என்பதும், அவன் சிறந்த சிவபத்தனாகத் திகழ்ந்தான் என்பதும் புராணக் கதைகள் வாயிலாக நமக்குக் கிடைக்கும் செய்தியாகும். இப்புராணக் கதை மரபினை பதிகங்களில் பயன்படுத்தும் வழக்கினை ஆரம்பித்து வைத்தவர் சம்பந்தப் பெருமானாகும். இது பிற்காலத்தில் நாயன்மார்கள் தமது பாடல்களில் இவற்றை இணைத்துக் கொள்ள பெரும் உதவியாக இருந்தது.

பகுதி - 1  வாசிக்க.... திருக்கோணேச்சரம்  2015 - புகைப்படங்கள்
பகுதி - 2  வாசிக்க...   'கோணமாமலை அமர்ந்தாரே'  2015 - புகைப்படங்கள்
சம்பந்தர் தமது பதிகங்களில் கையாண்ட பொது மரபினையே கோணேஸ்வர பதிகத்திலும் கையாண்டள்ளார் என்பதற்கு திருஆலவாய் திருநீற்றுப் பதிகம் உதாரணமாகும். ‘இராவணன் மேலது நீறு ’ இரவின் (கரிய) வண்ணம் கொண்ட சிவபக்தன் இராவணன் தன் அங்கமெல்லாம் அணிவது திருநீறு என்று திருநீற்றின் பெருமை பாடிச்செல்லும் இப்பதிகம். சிவபக்தனான இராவணனைக் கொண்டாடுகிறது. அதுபோலவே கோணேஸ்வரப் பதிகமும்


பாடல் எண் : 8
எடுத்தவன் றருக்கை யிழித்தவர் விரலா லேத்திட வாத்தமாம் பேறு
தொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பு மிறப்பறி யாதவர் வேள்வி
தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை தன்னருட் பெருமையும் வாழ்வும்
கொடுத்தவர் விரும்பும் பெரும்புகழாளர் கோணமா மலையமர்ந் தாரே.
(கயிலைமலையை வெட்டி எடுக்க நினைத்த இராவணனின் செருக்கைத் தம் திருப்பாத விரலினால் ஊன்றி அழித்தவர் சிவபெருமான். இருந்தும் அவன் மனந்திருந்தி போற்றிப் பாடியதைக் கண்டு விருப்பத்துடன் வெற்றி வாளும், நீண்ட வாழ்நாளும் இராவணனுக்கு அருளியவர். செல்வத்தோடு கூடிய பிறப்பும், இறப்பும் அறியாதவர். சிவனை வணங்காது தக்கன் செய்த வேள்வியைத் தடுத்தவர். வனப்பு மிகுந்த உமாதேவியை ஒருபாகமாக கொண்டவர். உயிர்களிடத்துக் கருணைகொண்டு தன்னருட் பெருமையும், வாழ்வும் கொடுத்தவர். இத்தகைய பெரும்புகழையுடைய சிவபெருமான் கோணமலையில் வீற்றிருக்கிறார்.)

சிறந்த வீணை வித்துவானான இராவணனை வீணை மீட்டிப் பாடுவதில் வெற்றி கண்டவர் அகத்திய முனிவர்.
கன்னியா வெந்நீரூற்று
இராவணன் தனது தாயாருக்காக சிவலிங்கம் பெற்று வரும்போது விநாயகரும், விஷ்ணுவும் தடுத்தமை 

இராவணேஸ்வரனின் செருக்கினை அழித்துப்பின் அவனது சிவபக்தியினை மெச்சி வேண்டும் வரங்களைக் கொடுத்த கோணமலையான் என்று பாடுகிறார் சம்பந்தர். திருக்கோணேஸ்வரமும் அதனுடன் தொடர்புகளைப் பலமாகக் கொண்ட இராவணேஸ்வரனும் இனிய இசையுடன் கூடிய பாடல் வடிவமாக உலகமெலாம் உள்ள சிவபக்தர்களிடம் சென்று அவர்கள் மனத்தினை இறுகப் பற்றிக்கொள்ள வழியமைக்கிறார் ஞானசம்பந்தர். இதில் மற்றொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். சம்பந்தர் ஒவ்வொரு பதிகத்தின் ஒன்பதாவது பாடல்களில் பிரமா, விஷ்ணு ஆகிய தெய்வங்கள் அடிமுடி தேடிய கதையினைச் சொல்லும் வழமையைக் கொண்டவராகக் காணப்படுகிறார். அவர் பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களுக்கு முன்பாக எட்டாவது பதிகத்தில் இராவணனைப் பாடவதன் மூலம் இராவணேஸ்வரனுக்கு முக்கியத்துவம் கொடுக்க முனைந்திருக்கிறார் என்றே கருதவேண்டியுள்ளது.


இன்று திருகோணமலை மண்ணில் ஆழவேரூன்றியிருக்கும் இராவணன் தொடர்பான கருத்துக்கள் தட்சண கைலாய புராணம், திரிகோணாசலப் புராணம் என்பனவற்றை ஆதாரமாகக் கொண்டவை. இராவணன் தனது தாயாரின் வணக்கத்திற்காக திருக்கோணேஸ்வரத்தினை நகர்த்த முற்பட்டு வாளினால் வெட்டினான் என்ற காரணத்தின் அடிப்படையில் இன்றுவரை ‘இராவணன் வெட்டு’ என்றழைக்கப்படும் இடம் இருக்கிறது. அத்துடன் அவனது தாயாரின் ஈமைக்கிரிகைக்காக உருவாக்கியதாகக் கருதப்படும் ‘கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள்’ மற்றும் இராவணன் தொடர்புடைய ஏனைய அம்சங்கள் திருகோணமலை வாழ் மக்களிடையே நீண்ட நெடுங்காலமாக நிலவிவரும் நம்பிக்கைகளாக இருக்கிறது. எனவேதான் இராவணனை கோணேஸ்வரத்துடன் தொடர்புபடுத்திப் பாடிய சம்பந்தரின் பதிகம் இலகுவாக திருகோணமலை மக்களின் மனத்தினை வென்றது. அதுபோலவே இதே நம்பிக்கையுடைய ஈழநாட்டின் ஏனைய பகுதிகளிலும், தமிழ் நாட்டிலும் உள்ள அடியவர்கள் மனத்தில் பக்தியுடன் கூடிய தமிழுணர்வை ஊட்டியது.

சம்பந்தரின் ஒன்பதாவது பாடல் சிவனுடைய அடிமுடி தேடி பிரமனும், திருமாலும் அலைந்த கதையினை நினைவூட்டுவதாக அமைந்திருக்கும். அந்த நாட்களில் பிரிந்து முரண்பட்டு நின்ற சைவ, வைணவ மதங்களை ஒருங்கிணைத்து தனியொரு கடவுளாக்கும் தேவை அப்போதிருந்தது. இவ்விரு சமயங்களும் ஒன்றுபட்டு செயற்படாவிட்டால் அரச ஆதரவுடன் பரவிக்கொண்டிருந்த சமண, பௌத்த மதங்களை எதிர்கொள்ளும் ஆற்றல் இல்லாமல் போய்விடும் என்பதை சம்பந்தர் நன்குணர்ந்திருந்தார். எனவே


பாடல் எண் : 9
அருவரா தொருகை வெண்டலையேந்தி யகந்தொறும் பலியுடன் புக்க
பெருவரா யுறையு நீர்மையர் சீர்மைப் பெருங்கடல் வண்ணனும் பிரமன்
இருவரு மறியா வண்ணமொள் ளெரியா யுயர்ந்தவர் பெயர்ந்தநன் மாற்கும்
குருவராய் நின்றார் குரைகழல் வணங்கக் கோணமா மலையமர்ந் தாரே.
(அருவருப்பு ஏதுமில்லாமல் பிரமனின் வெண் தலையைக் கையிலேந்தி வீடுகள்தோறும் சென்று பிச்சை ஏற்று உண்ணும் பெருமையுடையவர். சீர்மை பொருந்திய பெருங்கடலில் துயில்கொள்ளும் திருமாலும், பிரமனும் அடி,முடி அறியமுடியாத வண்ணம் ஒளியுடைய பெரிய நெருப்புப் பிழம்பாய் உயர்ந்து நின்றவர். திருமால் தாமரை போன்ற தன் கண்ணையே பூவாக அர்ச்சனை செய்யக் குருவாய் விளங்கியவர். அடியவர்கள், ஒலிக்கின்ற வீரக்கழல்கள் அணிந்த தம் திருவடிகளை வணங்கும் வண்ணம் கோணமலையில் வீற்றிருக்கிறார்.)

மேற்கூறிய பாடல் மூலமாக தனிப்பெருங்கடவுளாக சிவனைக்காட்ட அவர் முயல்கிறார். இக்காலகட்டத்தில் சிவனையும், திருமாலையும் ஒரே உருவமாக வழிபடும் ஹரிஹர மூர்த்தி வழிபாடு தோன்றியதும் குறிப்பிடத்தக்கது.

சம்பந்தரது பத்தாவது பதிகம் சமண, பௌத்த சமயங்களின் கொள்கைகளுக்கு எதிரான வாதங்களை முன்வைப்பதாகவும் அவர்களது போலிவேடம், ஒழுக்கக் கேடுகள் என்பனவற்றை முன்னிலைப்படுத்தி அவற்றினைப் பொதுமக்களிடம் அம்பலப்படுத்துவதன் மூலம் சைவ சமயத்தை முன்னிலைப்படுத்துவதாக அமைந்திருக்கும்.

தமிழ் நாட்டில் சைவ சமயத்தை நிலைநிறுத்த எண்ணியது போலவே ஈழத்திலும் அக்கைங்கரியத்தைச் செய்யும் நோக்குடையவராகச் செயல்பட்டார் அவர். அக்காலச் சூழலில் திருகோணமலையில் சமண, பௌத்த மதங்களின் செல்வாக்கு எப்படியிருந்தது என்பது பற்றிய தெளிவான வரலாற்றாதாரங்கள் அவருக்கு கிடைக்காவிட்டாலும் சைவ சமயத்தை அழிக்க முனையும் பிறமதங்களை கண்டிக்க அவர் பின்னிற்கவில்லை என்பதையே பின்வரும் வரிகள் நமக்கு நன்குணர்த்துகின்றன.


பாடல் எண் : 10
நின்றுணுஞ் சமணுமிருந்துணுந் தேரு நெறியலா தனபுறங் கூற
வென்றுநஞ் சுண்ணும் பரிசின ரொருபான் மெல்லிய லொடுமுட னாகித்
துன்றுமொண் பௌவ மவ்வலுஞ் சூழ்ந்து தாழ்ந்துறு திரைபல மோதிக்
குன்றுமொண் கானல் வாசம்வந் துலவுங் கோணமா மலையமர்ந் தாரே.
(நின்றுண்ணும் சமணர்களும், இருந்துண்ணும் புத்தர்களும் சிவபெருமானைப் பற்றி நெறியல்லாதனவற்றைச் சொல்லி புறங்கூறுகின்றனர். ஆனால் எம்பெருமானோ நஞ்சையே உண்டு தேவர்களைக் காத்த பெருமைக்குரியவர். மெல்லியலான உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட இவர் கடல் சூழ்ந்த மலையில் கடலலைகள் கரையினில் மோத, மல்லிகைச் சோலைமணம் வீச கோணமலையில் வீற்றிருக்கிறார்.)

பாடசாலைக் காலங்களில் கண்மூடி மனனம் செய்த சம்பந்தரின் பாடல்களில் புரியாத பல இலக்கிய நயங்கள் இப்போது புரிகிறது. ‘அவர்’ (சமணர்) நின்றுண்பவர், ‘இவர்’ (பௌத்தர்) இருந்துண்பவர். ‘என்பெருமானார்’ ஈசனோ நஞ்சையே உண்ணும் வல்லமை படைத்தவர் என்று இடித்துரைக்கிறார் சம்பந்தப்பெருமானார். அவரது இந்தப் பதிகம் சமண, பௌத்த சமயங்கள் மீது அவருக்கிருந்த வெறுப்புணர்வை உணர்த்துவதாக அமைந்துள்ளது. சைவசமயம் வலிகுன்றக்காரணமாக இருந்த சமயங்கள் என்றரீதியில் அவற்றினை இழிவுபடுத்தியிருக்கிறார் என்றே நாம் கருதவேண்டியுள்ளது.

இறுதியாகவரும் கோணேசர் பதிகத்தின் பயன் சொல்லும் முத்திரைக் கவிதை இவ்வாறு அமைந்துள்ளது.


பாடல் எண் : 11
குற்றமி லாதார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரைக்
கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான் கருத்துடை ஞானசம் பந்தன்
உற்றசெந் தமிழார் மாலையீ ரைந்து முரைப்பவர் கேட்பவ ருயர்ந்தோர்
சுற்றமு மாகித் தொல்வினை யடையார் தோன்றுவர் வானிடைப் பொலிந்தே.
(குற்றமில்லாத குடிமக்கள் வாழ்கின்ற ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த கோணமலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமானை, கற்றுணர் ஞானமும் கேள்வி ஞானமும் உடைய சீர்காழிவாழ் மக்களின் தலைவரான சிவஞானக் கருத்துடைய சம்பந்தன் செந்தமிழில் அருளிய இப்பதிகத்தை உரைப்பவர்களும் கேட்பவர்களும் உயர்ந்தோர் ஆவர். அவர்களுடைய சுற்றத்தாரும் எல்லா நலன்களும் பெற்றுத் தொல்வினையிலிருந்து நீங்கப் பெறுவர். சிவலோகத்தில் பொலிவுடன் விளங்குவர்.)


இங்கு தன்னை ‘கற்றுணர் ஞானமும், கேள்வி ஞானமும் உடைய சீர்காழி வாழ் மக்களின் தலைவரான சிவஞானக் கருத்துடைய சம்பந்தன் ’ என்று பதிவு செய்கிறார். கோணேசர் பதிகத்தினைப் போலவே ஏனைய பதிகங்களின் முத்திரைக் கவிதைகளில் ‘நற்றமிழ் ஞானசம்பந்தன்’ ‘தமிழ் ஞானசம்பந்தன்’ ‘சம்பந்தன் செய்த தமிழ் மாலை’ ‘தமிழ் நவிலும் ஞானசம்பந்தன்’ என்றுவிளிக்கிறார். இதன் மூலம் மிகத்தெளிவாக மொழி (தமிழ்) உணர்வு ஊடாக பக்தி மார்க்கத்தினைப் புத்துயிர் பெறச் செய்ய சம்பந்தர் முயற்சித்து வெற்றிகண்டிருக்கிறார் என்பது புலனாகிறது. ‘தேசிய இலக்கியம்’ என்ற நூலில் அதன் ஆசிரியரான திரு.அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள் ‘தமிழ்முரசு கொட்டி, தமிழ்க் கொடியேந்தி, தமிழ்க் கவிதையால் தமிழ்க்கடவுளைப் பாடிதுதிக்கும் தமிழினத்தைத் தட்டியெழுப்பிய வீரத் தமிழராக’ திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரைப் பார்க்கிறார். அது மிகப்பொருத்தமானதே.

மக்கள் மத்தியில் சமயக் கொள்கைகளைப் பரப்புவதற்கு ஏற்ற ஊடகமாக இசையுடன் பாடக்கூடிய தேவாரத்தைத் தெரிவு செய்து, மக்களை அணிதிரட்டச் செய்ய பக்தி இரசத்தையும், மொழி உணர்வையும் (தமிழ்) இனஉணர்வையும் (இராவணன்) சமவிகிதத்தில் கலந்து சமண, பௌத்த மதங்களுக்கான எதிர்ப்புணர்வையும் நயத்துடன் புகுத்தி தனது இலட்சியத்தில் வெற்றி பெற்ற தோடல்லாமல் பின் வந்தவர்களுக்கும் வழிகாட்டியாக விளங்குகிறார் ஞானசம்பந்தர். தன் காலத்தில் சைவத்தின் எழுச்சியை தமிழின் எழுச்சியாக்க முற்பட்டிருக்கிறார் சம்பந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்காலத்தில் தீண்டாக் குடம்பத்தைச் சேர்ந்தவராகக் கருதப்பட்ட திருநீலகண்டர் என்பவரை தம்முடன் யாழ் இசைப்பதற்காக அழைத்துச்சென்ற இவர் சாதி வேறுபாடு, தீண்டாமை முதலிய மூடநம்பிக்கைகளை உடைத்தெறிய முயன்றிருக்கிறார். அத்துடன் தேவாரம் பாடி கோவிற்கதவு திறக்கப்பட்ட கதைமூலம் வேதப்பொருள் தெரியாமல் இருந்த சாதாரண தமிழ் மக்களுக்கு வேதப்பொருளினை தமிழில் அறியச்செய்ய திருஞானசம்பந்தர் பாடுபட்டிருக்கிறார் என்பதையும் அறியக்கூடியதாக உள்ளது.

மக்களுடைய நம்பிக்ககைள் தளர்ந்து, சமயம் தளர்வுற்றிருந்த காலத்தில் பக்தி இயக்கத்தினை முன்னெடுத்துச் செல்ல உறுதி பூண்டவர் ஞானசம்பந்தர். அவர் பதிகம் பாடி சுமார் 1350 ஆண்டுகளுக்குப் பின்னால் கடல் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் கோணமலைக் குன்றில் வீற்றிருக்கும் திருக்கோணேசப் பெருமானைக் கண்மூடி ‘குரைகடல் ஓதம் நித்திலங் கொழிக்கும் கோணமாமலை யமர்ந்தாரே’ என்று தியானிக்கும் போது திருஞானசம்பந்தரின் திருவுருவம் மனக்கண்ணில் நிழலாடுவதைத் தவிர்க்கமுடியவில்லை.


ஆலய உள்வீதியில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் சிற்பங்களும், சித்திரங்களும் சம்பூர் சுதேஸ்குமார் தலைமையிலான குழுவினரின் கைவண்ணம்.


திருக்கோணேஸ்வரத்தின் தொன்மை தொடர்பான வரலாற்றுத்தேடல்கள் தொடரும் .....................
                                                                                                       நட்புடன் ஜீவன்.



த.ஜீவராஜ்


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

3 comments:

  1. இராவணன் பற்றிய செய்தியோடு
    பயன்தரும்
    திருமலை வரலாறு!

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா

    நாம் நினைப்பது ஒரு ஆலயம் என்று... இருந்தாலும். அதன் வரலாறு எப்படி பட்டது என்பதை படித்திருக்கேன் ... அதை விட மேலும் விரிவாக தங்களின் பதிவு வழி அறியக்கிடைந்துள்ளது... நான் இறுதியாக தரிசனம் செய்தது.2007... முன்பு இருந்ததை விட இப்போது பார்க்கும் போது எவ்வளவு வித்தியாசமாக உள்ளது... இறை தரிசனம் கிடைத்தது போல உணர்வு... பகிர்வுக்கு நன்றி ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி

    ReplyDelete