Saturday, May 18, 2013

நான்காம் ஆண்டு நினைவேந்தல் ( 19.05.2009 ) - அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்

நான்காம் ஆண்டு நினைவேந்தல் ( 19.05.2009 ) - அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்

தம்பலகாமம்.க.வேலாயுதம் திருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளர், சிறந்த கவிஞர், வீரகேசரிப் பத்திரிகையில் 50 வருடங்களுக்கு மேலாக நிருபராக அனைவரும் பாராட்டும் வகையில் கடமையாற்றியவர்.


வீரகேசரி, மித்திரன், தினபதி, சிந்தாமணி, சுடர், சுதந்திரன், தினகரன், தினக்குரல், ஆத்மஜோதி, சிவநெறி, குமுதம் பக்தி இதழ் ஆகியவற்றில் தனது கைவண்ணத்தைக் கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுநாவல், செய்தி மடல் என பலவகைகளில் பதிவு செய்தவர்.

அவர் வீரகேசரி நிருபராகக் கடமையாற்றிய காலப்பகுதியில் ‘தம்பலகாமம்’ செய்திகளுக்கு ஒரு தனி மதிப்பு இருந்தது. வெறுமனே செய்திகளை மட்டும் எழுதாமல் ,கிராமத்தின் அத்தியாவசிய தேவைகளையும், அவற்றை எவ்வாறு தீர்க்கலாம் என்பதற்குரிய வழிவகைகளையும் கட்டுரைகள் மூலமாக தமிழ் கூறும் உலகிற்கு எடுத்துரைத்தவர்.

நான்காம் ஆண்டு நினைவேந்தல் ( 19.05.2009 ) - அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்

வரலாற்றுப் புகழ்மிக்க தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயிலுக்கு அண்மையில்’குஞ்சர்’என்ற பெயரில் ஒரு அடப்பனார் வாழ்ந்து வந்தார். பழமையில் அடப்பன் என்பது ‘கிராமத்தலைவர்களை’குறிப்பதாக அமைந்திருந்தது. பிரித்தானியர் ஆட்சிக்காலத்திலும் இம்முறை நடைமுறையில் இருந்தது. குஞ்சர் என்பவர் மிகுந்த செல்வாக்குடன் பிரசித்த நிலையில் விளங்கியதால் அவர் வாழ்ந்த ஊர்ப்பிரிவுக்கு ‘குஞ்சர்அடப்பன் திடல்’ என்ற பெயரே வழங்கலாயிற்று. காலப் போக்கில் இப்பெயரே சிதைந்து ‘குஞ்சடப்பன்திடல்’ஆயிற்று.

இந்த ஊர்ப்பிரிவில் திரு.வே.கனகசபை என்பவருக்கும் திரு.த.வீரக்குட்டியாரின் நடு மகள் தங்கத்திற்கும் நடந்த திருமண நிகழ்வால் 1917 ஆம் ஆண்டு கார்திகை மாதம் 17 ஆந் திகதி பிறந்தவர்தான் அமரர் திரு.க.வேலாயுதம் அவர்கள். இவரது தந்தை திரு.கனகசபை அவர்கள் சகல காரியங்களிலும் வல்லுநராக விளங்கினார்.இவரின் தாயின் மூத்த சகோதரியின் கணவர் திரு.புத்தினியர் பிரசித்த சுதேச வைத்தியர்.

இவர்களின் குடும்பம் ஒரு சங்கீதக் குடும்பம். பெரிய தாயாரின் மகன் திரு.வேலுப்பிள்ளை சிறந்த ‘ராஜபாட்’நடிகர் நாடகங்களைத் தயாரித்து நெறிப்படுத்தி மேடையேற்றும் அண்ணாவியார். ஆர்மோனியம் வாசிப்பதிலும் கைதேர்ந்தவர். இவருடைய தாய்மாமன் திரு.கதிர்காமத்தம்பி மதுரையிலிருந்து வாங்கிவந்த ஆர்மோனியப் பெட்டியில் ஆர்மோனியம் பழுகி வந்தார். இவரையும் ஆர்மோனியம் பழகுமாறு ஊக்கப்படுத்தினார். பிற்காலத்தில் இவர் தம்பலகாமத்தில் சிறந்த ஓர் ஆர்மோனியக் கலைஞராக விளங்கினார்.
நான்காம் ஆண்டு நினைவேந்தல் ( 19.05.2009 ) - அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்

வேலுப்பிள்ளை அண்ணாவியார் பழக்கி மேடையேற்றிய ‘கண்டி மன்னன் ஸ்ரீவிக்கரமசிங்கன்’ நாடகத்தில் குமாரகாமியின் தங்கை ‘ரஞ்சிதபூசணி’யாக திரு.வேலாயுதம் முதன் முதலாக நடித்தார். கள்ளிமேட்டு ‘ஆலயடி’அரங்கேற்ற அரங்கில் இந்நாடகம் மேடையேறியது. இனிமையான குரல் வளமும் சங்கீத ஞானமும் மிக்க திரு.க.வேலாயுதம் அவர்கள் இந்நாடகத்தினூடாக இரசிகப் பெருமக்களின் நல்லாதரவைப் பெற்றார். தொடர்ந்து நளதமயந்தி நாடகத்தில் தமயந்தியாகவும் மயில்ராவணனில் அவன் தங்கை தூரதண்டியாகவும் அண்ணாவிமார் இணைந்து நடாத்திய பவழக்கொடியில் அர்ச்சுனனின் மகனாகவும் நடித்துப் பெரும் புகழ் பெற்றார்.

இவர் பாடசாலைக் கல்வியை 5 ஆந் தரத்துடன் நிறுத்தி வீட்டிலேயே காலங்கழித்து வர வேண்டிய நிலை ஏற்பட்டது. வகுப்பு ரீதியாகக் கல்வியை மேற்கொள்ள முடியவில்லை எனினும்’கண்டது கற்கப் பண்டிதனாவான்’ என்னும் பழமொழிக்கொப்ப தானாகவே முயன்று வாசிப்பினூடாக தனது கல்வியை வளம்படுத்திக் கொண்டார். வாசிப்பினூக ஒருவன் பூரணத்துவம் அடைகிறான் என்பதற்கு இவர் ஒரு உதாரண புருசராவார்.

பிற்காலத்தில் இவர் எழுதிய கதை கவிதை சிறுகதை நாவல் கட்டுரைகளுக்குப் பத்திரிகைத்துறை ‘மேதாவி’ அமரர் திரு.எஸ்.டி.சிவநாயகம் அவர்கள் ‘சுதந்திரன்’ பத்திரிகையிலிருந்து தினபதி சிந்தாமணி வரையில் களம் அமைத்துக் கொடுத்தார்கள்.இவர் எழுதிய முதற்கவிதை சுதந்திரனில் வெளியாகியது.

மைந்தனைப் பறிகொடுத்து
மார்பினில் அறைந்தரற்றும்
பைந்தமிழ் அன்னைக் கிந்தப்
பாரினில் துணையுமுண்டோ?
எந்தையே!தமிழருக்காய்
இயன்றிடப் பாடுபட்ட
தந்தையே!நின் பிரிவால்
தவிக்குதே!தமிழர் நெஞ்சம்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வன்னியசிங்கம் அவர்களின் மறைவுக்காகப் எழுதப்பட்ட இக்கவிதையூடாக அமரர் திரு.க.வேலாயுதம் அவர்கள் எழுத்துலகில் பிரவேசித்தார். இதனைத் தொடர்ந்து வீரகேசரியும் மித்திரனும் இவரது ஆக்கங்களை பிரசுரித்து. இவரது எழுத்துலகப் பிரவேசத்திற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தன.

இந்தியாவிலிருந்து வெளிவரும் குமுதம் ‘சொல்லும் செயலும்’ என்ற சிறுகதையைப் பிரசுரித்து சன்மானமும் வழங்கியது. குமுதம் பக்தியிதழ் ‘தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வரலாற்றை’ நல்ல முறையில் வெளியிட்டுதவியது. கரிகாலன் அவர்கள் ஆசிரியராகக் கடமையாற்றிய ‘காலச்சுடர்’ ;பல உருவினில் உத்தமிகள்’; ‘சண்டியன் கதிர்காமர்’ போன்ற கதைகளையும் போட்டிக் கவிதைகளையும் பிரசுரித்தது. இதே போல ‘பேய்கள் ஆடிய இராம நாடகம்’ என்னும் கதையைச் சிந்தாமணி வெளியிட்டது. தினக்குரல் பத்திரிகையில்; ‘அமெரிக்காவைக் கண்டு பிடித்தவர் கொலம்பஸ் அல்ல’ என்ற ஆய்வுக்கட்டுரை வெளிவந்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
நான்காம் ஆண்டு நினைவேந்தல் ( 19.05.2009 ) - அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்

வீரகேசரியில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தம்பலகாமம் நிருபராகக் கடமையாற்றிய திரு.வேலாயுதம் அவர்கள் செய்திகளை உடனுக்குடன் தருவதில் கைதேர்ந்தவராக விளங்கினார். தம்பலகாமத்தின் குறைபாடுகளை செய்திக்கடிதங்களாக எழுதி அவற்றைத் தீர்த்து வைப்பதில் மிகுந்த ஈடுபாடு காட்டினார்.

தனது கிராமத்தினை பெரிதும் நேசித்த அவர் தனது பெயருடன் தனது கிராமத்தின் பெயரையும் இணைத்தக் கொண்டே எழுதினார். தம்பலகாமம் க.வேலாயுதம் என்ற பெயரே அவருக்குப் பெயரையும் புகழையும் தந்தது.

தனது எழுத்துக்கள் புத்தக உருவில் வெளிவரவில்லையே என்ற கவலை நீண்டகாலமாக அவருக்கு இருந்தது. இந்தக் குறைபாட்டைத் திருகோணமலையைச் சேர்ந்த அமரர்கலாபூசணம் சித்தி அமரசிங்கம் அவர்கள் ‘ஈழத்து இலக்கியச் சோலை’யின் 20 தாவது வெளியீடாக இவர் எழதிய ‘ரங்கநாயகியின் காதலன்’ என்னும் வரலாற்றுக் குறுநாவலை 2005ஆம் ஆண்டு வெளியிட்டு தீர்த்து வைத்தார்.

நான்காம் ஆண்டு நினைவேந்தல் ( 19.05.2009 ) - அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்

தொடர்ந்து இதே ஆண்டில் தம்பலகாமம் க.வேலாயுதம் என்ற நூலையும் வெளியிட்டார். தம்பலகாமம் ‘பொற்கேணி கிராம அபிவிருத்திச் சங்கம் இவரது 30 கட்டுரைகளைத் தொகுத்து ‘தமிழ் கேட்க ஆசை’என்ற பெயரில் இதே ஆண்டில் வெளியிட்டது.

தம்பலகாமம் சாயி சேவா சங்கம் இவர் எழுதிய ‘இந்திய ஞானிகளின் ஆன்மிக சிந்தனைகள்’ என்ற தத்துவ நூலை 2008ஆம் ஆண்டில் வெளியிட்டது. இந்நூலில் ‘மெய்ஞானம் விஞ்ஞானம் ஆன்மிகவாதம் லோகாயதவாதம் மார்க்ஸிஸம் சைவசித்தாந்தம் அத்வைதம்’போன்ற தத்துவங்கள் அலசப்பட்டுள்ளன. பிரபஞ்சத்தைப்பற்றியும் உலகைப்பற்றியும் உயிரினங்கள் பற்றியும் ஆராயும் இந்நூல் அமரர் தம்பலகாமம் க.வேலாயுதம் அவர்களின் புலமைக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
நான்காம் ஆண்டு நினைவேந்தல் ( 19.05.2009 ) - அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்

அவரது பல இலக்கிய முயற்சிகள் இனப்பிரச்சனையாலும் , இயற்கை அனர்த்தத்தினாலும் அழிவடைந்தமை பற்றி இங்கு குறிப்பிட்டாக வேண்டும். கந்தளாய்க் குள உடைப்பு அவர்ருக்கு ஏற்படுத்திய அழிவினை அவரது கவிதையில் இப்படிச் சொல்கிறார்.

மண்டையைப் போட்டுடைத்து
மனத்தினில் கருத்துச் சேர்த்து
விண்டிட நினைத்த நல்ல
இலக்கிய முயற்சி எல்லாம்
பண்டைய எனது வீட்டில்
பத்திரமாக வைத் தேன்
கண் தழைக் குளத்து வெள்ளம்
கவர்ந்தெங்கோ சென்ற தம்மா

கடலெனப் பெருகி வந்த
கந்தளாய் உடைப்பு வெள்ளம்
அடவிகள் மற்றும்
அனைத்தையும் கடந்து வந்து
உடமைகள் வீட்டுச் சாமான்
ஒவ்வொன்றாய்க் கவர்ந்ததோடு
பெட்டியில் எழுதி வைத்த
பிரதிகள் அனைத்தும் நாசம்

பூட்டிய அலுமாரிக்குள்
புகுந்த அப் பொல்லா வெள்ளம்
கட்டுரை கவிதை நல்ல
கதைகளைச் சிதைத்ததோடு
விட்டதா? அதனைச் சாய்த்து
வெளியிலே இழுத்தெறிந்து
நட்டங்கள் செய்த நாளை
நான் எண்ணிக் கலங்குகின்றேன்

ஆலங்கேணி கிராமத்தைப் புலமாகக் கொண்ட ‘அவள் ஒரு காவியம்’ என்னும் சமூகக்குறுநாவல் ‘சொல்லும் செயலும்’ என்ற சிறுகதைத் தொகுப்பு ‘நெஞ்சு நோகாத நாட்களில்லை’என்ற தலைப்பில் அமைந்த கவிதைத் தொகுப்பு நூல் ஆகியன இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நூல்களை வெளியிடும் முயற்சி தொடர்கிறது என்பது என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காம் ஆண்டு நினைவேந்தல் ( 19.05.2009 ) - அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்

இத்தகைய சிறந்த கலைஞனை எழுத்தாளனை சிந்தனையாளனை 19.05.2009 ஆம் ஆண்டு நாம் இழந்து விட்டோம். தமிழையும் தான் பிறந்த மண்ணையும் உயிரென மதித்துப் போற்றிய அப்பெருமகனாரின் இழப்பு ஈழத்து இலக்கிய உலகுக்கு ஓர் பேரிழப்பாகும்.

வே.தங்கராசா.


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

 1. அருமையான நினைவேந்தல், கண் தழைக் குளத்து வெள்ளக் கவிதை - சிறப்பான உள வெளிப்பாடு.
  5ம் தரம் தான் படித்தவர், இத்துணை சிறப்பெனில் அன்றைய கல்வியின் மாண்பு பெரிதே!

  ReplyDelete
 2. வேலாயுதம் ஐயா அவர்களது ஆன்ம இளைப்பாற்றிக்காக என் பிரார்த்தனைகள்.

  ReplyDelete