Tuesday, March 26, 2013

தம்பலகாமம் தந்த தமிழ்த்துறைப் பேராசிரியர் அமரர் திரு.எஸ்.சத்தியமூர்த்தி

பேராசிரியர் அமரர் கலாநிதி திரு.எஸ்.சத்தியமூர்த்தி

தம்பலகாமத்தில் ‘கூட்டாம்புளி’ என்னுந்திடல் மிகப் பிரசித்தமானது. ‘கூட்டங் கூட்டமாய்ப் பசு வளர்த்த கூட்டாம்புளி’ எனக் கவிஞர் தம்பலகாமம் வேலாயுதம் அவர்கள் இத்திடலைச் சிறப்பித்துப் பாடியுள்ளமையை இங்கே குறிப்பிடலாம்.

கேரளத்துப் பல்கவைக்கழகப் பேராசிரியராகிய அமரர் திரு.எஸ்.சத்தியமூர்த்தி அவர்களும் , திருகோணமலையின் முதல் வயலின் இசைக் கலைஞர் சங்கீதபூசணம் அமரர் திரு வல்லிபுரம் சோமசுந்தரம் அவர்களும் , சங்கீத இசை ஆர்வலர் அமரர் திரு.மாரிமுத்து அவர்களும் இத்திடலைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களாகும்.
திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்றுப்புகழ்மிக்க தம்பலகாமத்தில் ‘கூட்டாம்புளி’ என்னும் திடலைத் தாயகமாகக் கொண்ட சிறீதரன் இராசநாச்சியார் தம்பதிகளின் அருந்தவப் புதல்வனாக 1940 ஆம் ஆண்டு மாசிமாதம் ஏழாந்திகதி பிறந்தவர்தான் நமது பெரு மதிப்பிற்குரிய அமரர் கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள்.

தனது ஆரம்பக்கல்வியை தம்பலகாமம் மகாவித்தியாலயத்திலும் பின்னர் திருகோணமலை இராமகிருஷ்ண மிசன் இந்துக்கல்லூரியிலும் பெற்றுக்கொண்ட இவர் தனது பதினாறாவது வயதிலேயே தமிழகம் சென்று சிதம்பரம் ஆறுமுகநாவலர் பாடசாலையிலும் அதன்பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் கற்று புலவர் பட்டத்தினையும் பி.ஓ.எல்.சிறப்புப் பட்டத்தினையும் பெற்றுக் கொண்டார்.

‘முயற்சி ஒன்றே மனிதனை முழுமையாக்கும்’ என்பார்கள். அமரர் திரு.எஸ்.சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ்மீது கொண்ட தணியாத காதலால் கேரளப்பல்கலைக் கழகத்தில் பயின்று கலைமுதுமானிப் பட்டத்தினையும் 1976 ஆம் ஆண்டில் அதே பல்கலைக் கழகத்தில் கலாநிதி பட்டத்தினையும் பெற்றுக் கொண்டார். 1976 ஆம் ஆண்டு தொடக்கம் 1978 ஆம் ஆண்டுவரை கேரளப்பல்கலைக் கழகத்திலேயே அவர் தனது ஆய்வுகளை மேற்கொண்டதையும் இங்கே சிறப்பாக் குறிப்பிடலாம்.

கற்பித்தல் துறையிலும் தமிழகத்தில் இவர் சாதனை படைத்துள்ளார். கலைமுதுமானி மாணாக்கர்களுக்கு தமிழ்மொழி , தமிழ் இலக்கியவரலாறு தத்துவம் போன்ற பாடங்களைப் போதித்து வந்துள்ளார். இவர் தமிழ் ஆற்றலையும் தமிழ்மீது இவர் கொண்டுள்ள தணியாத பற்றுதலையும் நன்கு அறிந்து கொண்ட முன்னாள் தமிழக கல்வியமைச்சராகிய திரு. அவிநாசிலிங்கம் செட்டியர் அவர்கள் தமது நிறுவனமான கோயம்புத்தூர் இராமகிருஷ்ண மிசன் வித்தியாலத்தில் தமிழ்த்துறையில் இணைத்துக் கொண்டார். தனது அயராத முயற்சியூடாக இவ்வித்தியாலயத்தின் தமிழ்த்துறைத் தலைவராக பின்னாளில் இவர் விளங்கியதையும் இங்கே குறிப்பிடுதல் சாலப்பொருந்தும்.

கற்பித்தல் பணியை தமிழகத்தில் மிகச்சிறப்பாக மேற்கொண்டிருந்த இவர் தமிழகத்தில் வெளிவரும் ஏடுகளிலும் தனது ஆக்கங்களை வெளியிட்டு வந்தார். இவர் எழுதிய 45 கவிதைகள் தமிழகப் பத்திரிகைகளிலும் பல்கலைக்கழக ஏடுகளிலும் பிரசுரமாகி இவருக்குப் பெயரையும் புகழையும் தந்தன. கேரளப்பல்கலைக்கழகத்து வெளியீடாகிய ‘இளவேனில்’ சஞ்சிகையில் வெளியாகிய இவரது ‘அமைதி’ என்ற கவிதை பலரதும் பாராட்டைப் பெற்றது. தமிழகத்தில் வெளியாகும் ‘கண்ணதாசன்’ இதழ் இக்கவிதையை வெகுவாகப் பாராட்டியதை இங்கே குறிப்பிடலாம்.
‘சிவலிங்க வழிபாடு’ என்ற நூலினையும் இவர் தமிழகத்தில் வெளியிட்டுள்ளார்.

கோயம்புத்தூர் இராமகிருஷ்ண மிசன் வித்தியாலயத்தில் இவர் தமிழ்த்துறைத் தலைவரகக் கடமையாற்றிய காலத்தில் பல பட்டிமன்றங்களுக்கும் தலைமை வகித்துச் சிறப்பித்துள்ளார். தமிழகத்தில் தனது தாயாருடனும் தனது அருமை மனைவியுடனும் வாழ்ந்து வந்த கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் தன்னை நாடிவருபவர்களை அரவணைத்து விருந்தோம்பும் பெருந்தகையாளராக விளங்கினார். இலங்கையிலிருந்து கல்விகற்க வந்தவர்களுக்கு அருந்துணைவனாக விளங்கினார்.

தம்பலகாமத்தைத் தாயமாகக் கொண்ட திரு.மு.சிறிஸ்கந்தராசா அவர்கள் தனது உயர்கல்விக்காகத் தமிழகம் வந்த போது அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் புரிந்து அவர் ஒரு வி.கோம். பட்டதாரியாக வருவதற்கு துணையாகச் செயல்பட்டார். இன்று அவர் புலம்பெயர்ந்து இலண்டனில் வாழ்ந்தாலும் பாதிக்கப்பட்ட தனது மக்களுக்காகவும் அவர்களது குழந்தைகளின் கல்விக்காகவும் பெரும் உதவிகளைச் செய்து வருகிறார்.

குன்றக்குடி அடிகளாரின் மீது அளவற்ற அன்பும் மரியாதையும் செலுத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் அடிகளாருடன் தாயகம் வந்து தம்பலகாமத்திற்கும் அப்பெருமகனை அழைத்து வந்ததையும் என்றும் மறக்க முடியாது. இத்தகைய சிறந்த பெருமகனோடு அவர் வாழ்ந்த சம காலத்தில் தம்பலகாமம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் பெரும் பாக்கியம் எனக்கும் கிடைத்ததையிட்டு இன்று பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்று அவர் எம்மோடில்லை. அந்த அன்புள்ளம் மறைந்து விட்டது. ‘சிலோன் பேராசிரியர்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் இன்று சென்று விட்டார். தனது இறுதி மூச்சையும் தமிழிற்காக அர்ப்பணித்த அந்த அருந்தவப் புதல்வனை சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.

வே.தங்கராசா

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

3 comments:

  1. It is proud to say such a great man was with us....

    Thanks for you search & effort... It is very pleasure to read and proud myself in this busy life...

    ReplyDelete
  2. It is very proud to say such a greatfull man was with us.. It is pleasure and proud to read in this busy life...

    Thanks Sir..(I was student of you in Saradha Vidyalayam) for your search & effort..


    I wish you all the best to continue your writing service...

    ReplyDelete