Friday, February 22, 2013

போற்றுதற்குரிய கடவுளாவர்


ஒப்பறேசன் என்றவுடன் உடல் நடுங்கி
ஒடுங்கிப்போய்க் கிடந்தவன் உளந்திருந்தி
துடிப்போ டெழுந்திருந்து துயரைப் போக்கி
சுறுக்காக யாழ்ப்பாணம் சென்று ஆங்கே
எடுப்பாக ‘இருபத்தேழாம் வாட்டில்’ சேர்ந்தேன்
என்னோடு பல நூறு நோயாளர்கள்
‘எதர்க்கும்’ அஞ்சாத மன நிலையில்
இருக்கின்ற காட்சி கண்டு இதயம் நொந்தேன்.


விடிந்தால் நாளைக்கு ‘வெட்டுவார்கள்’
வியப்புத்தான்! இவர்களுக்கு உணர்வேயில்லை
அடித்தாலும் காயம் சிலநாள் செல்லும்
ஆறுதற்கும் ‘நோ’மாறிப் போவதற்கும்
வெட்டுக்காயத்தால் ‘ரணம்’பெருகி
வேண்டாத தொல்லைகள் தந்தால் ஐயோ!
எப்படித்தான் தாங்குவேன்? இறைவன்தானே
எனக்கருள் புரிய வேண்டி நின்றேன்.

என்னதான் இருந்தாலும் ‘டொக்டர்களின்’
தந்தையாய் இருப்பது தவறு என்று
இப்பொழுதுதான் எண்ணிக் கவலையுற்றேன்
எனக்கிருவர் இங்கே டொக்டர்களாய்ப்
பணிபுரிந்து வருகின்ற காரணத்தால்
‘பதுங்கி’ஒழிக்கவும் வழிகள் இல்லை
வசமாக நானும் மாட்டிக்கொண்டேன்
‘வாழ்க்கைத் துணைவியும் அந்தப் பக்கம்’

வருவது வரட்டுமெனத் துணிவு கொண்டேன்
வருகின்ற ‘திங்கள்’ எனக்கு ‘வெட்டு’
சரியென்று ஒப்பமும் வைத்து விட்டேன்
‘தடக் தடக்’ கென்று மனம் அடித்துக்கொள்ள
காலையிலே கட்டிலிலே ஏற்றினார்கள்
கைகளிலே எனக்கொரு ‘நம்பர்’அட்டை
வேலைக்குச் செல்வது போல் வெள்ளைச் சாறன்
விடுதியெங்கும் பார்த்தால் இந்தக் காட்சி

ஆடுகளை வெட்ட கொலைக்களத்திற்கு
அழைத்துச் செல்லுகின்ற அந்தக்காட்சி
மாடுகளா? நாங்கள் என்று எண்ணி
மனந்நொந்த வேளை ஒரு ஐயா சொன்னார்
‘ஒப்பறேசன் ஒன்றும் கொடுமையில்லை
உயிர்போகாதிருப்பதற்குச் செய்ய வேண்டும்
தப்பேதும் எண்ணாதீர் ஐயா நீங்கள்;
தவறாக எண்ணுகிறீர் எழுக’ என்றார்.

அப்போது அங்கே வந்தவோர் மங்கை
அவரும் அங்கே ‘டொக்டர்’ தானாம்
‘அப்பா உங்கள் இலக்கம் என்ன?’ என்று
அன்பாகக் கேட்கவும் துணிவு கொண்டேன்.
சிட்டையைச் சரிபார்த்துச் சிரித்த நங்கை
‘சில நொடிப்பொழுதில் உங்கள் நோயை
வெட்டியே சரி செய்வோம் அஞ்ச வேண்டாம்
விரைவாகக் குணமாகும்’ என்று சொன்னார்.

கட்டிலைத் தள்ளி உள்ளே சென்று
கதிரவனின் ஒளிபோன்ற கூட்டின் கீழே
விட்டார்கள் விரைவாகச் சிலபேர் சேர்ந்து
விதம் விதமாய் ஏதேதோ செய்யலானானர்
முதுக்குப் பக்கமாய் நின்ற ‘டொக்டர்’
முதுகுத் தண்டிலே ஊசி போட்டு
‘மெதுவாக உங்களுக்கு விறைப்பு வரும்
வெட்டியே கற்களை எடுப்போ’ மென்றார்.

அரைமணி நேரமாய் அவர்கள் எல்லாம்
அதிசயமாய் ஏதேதோ சேர்ந்து செய்து
பணிதன்னைப் பக்குவமாய் முடித்து விட்டார்
பார்ப்பதற்கு அவர்களே! தெய்வ மானார்.
என்ன இது அதிசயம்!என்று எண்ணி
எப்படித்தான் நடந்ததெனத் தெரியா நிலையில்
தலைதனை நிமிர்த்தி மேலே பார்த்தேன்;
சந்திர முகத்தாள் முறுவலித்தாள்.

‘ஐயா உங்கள் ஒப்பறேசன்
அருமையாய் நடந்தது வெற்றி’என்றார்.
கைகூப்பி அனைவரையும் வணங்கி மீண்டேன்
கடவுளரை கண்களால் கண்ட இன்பம்.
இத்தனை நாள் இதைப்பற்றி எண்ணி ஏங்கி
இருந்ததனை சிந்தித்து மனமும் நொந்து
சிந்தனையில் தோய்ந்து கிடந்த வேளை
சிறியதொரு கருத்து மனதில் தோன்றும்.

கடவுள்களை கற்பனையில் கண்டு நாங்கள்
கதை கதையாய் எழுதினோம் ஏடுகளில்
கடவுள்களை மனிதராய் நம் கண்முன்னாலே!
காண்கிறோம் பொய்யல்ல உண்மை உண்மை.
மனிதர்களின் உயிர் காக்கும் சேவை ஒன்றே!
மகத்தான புகழ் படைத்த சேவையாகும்.
புனிதமாய் இதனைப் புரிவோர் உலகில்
போற்றுதற் குரிய கடவுளாவர்.

 வே. தங்கராசா.

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment