Thursday, September 18, 2014

கப்பல்துறைக் காட்டினுள் கண்ணகி அம்மன் வழிபாடு - புகைப்படங்கள்

கண்ணகி அம்மன் வழிபாடு

திருகோணமலையில் மிகவும் பின்தங்கியதும், யுத்தத்தால் பலமுறை முழுமையாகப் பாதிக்கப்பட்டதுமான  கிராமங்களில் கப்பல்துறைக் கிராமமும் ஒன்றாகும். இது திருகோணமலைக்கும் தம்பலகாமத்திற்கும் மத்தியில் அமைந்துள்ளது. இங்குள்ள காட்டுப்பகுதியில் புராதான கண்ணகி அம்மன் வழிபாட்டு இடம் ஒன்று இருப்பதாக கப்பல்துறை இளைஞர் ஒருவர்மூலம் அறியக்கிடைத்தது.


இலங்கையில் கண்ணகி வழிபாடு பிரசித்தமான ஒரு புராதன வழிபாடாகும். திராவிடப்பண்பாட்டில் முக்கியத்துவம் பெற்ற சக்தி வழிபாட்டினையே கண்ணகியம்மன் வழிபாட்டில் நாம் காண்கிறோம். கண்ணகி அம்மனுக்கு இலங்கையில் ஆலயங்கள் அமைத்து வருடந்தோறும் பொங்கல் படைத்து குளிர்த்தி பாடி வழிபடுவதைக் காணலாம்.

கண்ணகி அம்மன் வழிபாடு

கண்ணகி, தமிழில் எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் தலைவி. கற்பிற் சிறந்தவளாக காட்டப்பட்டுள்ள இவள், எவ்வித ஆராய்வுமின்றிப் பொய்க் குற்றச்சாட்டின் மீது கொலைத் தண்டனைக்கு உட்பட்ட தனது கணவனின் குற்றமற்ற தன்மையை பாண்டிய அரசன் நெடுஞ்செழியனிடம் வாதித்து நிரூபித்தாள். தன் பிழை கண்டு வேதனையடைந்த பாண்டியனும் அவனது அரசி கோப்பெருந்தேவியும் அவ்விடத்திலேயே உயிர் துறந்தனர். கோபம் அடங்காத கண்ணகி, மதுரை நகரை தன் கற்பின் வலிமையால் எரித்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

சிலப்பதிகாரம் எழுதப்பட்ட வேளையில், சேர நாட்டு மன்னன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழா எடுத்தான். இவ்விழாவில் இலங்கை மன்னன் கஜபாகுவும் கலந்துகொண்டதாக வரலாறு கூறுகிறது. இவன் மூலம் இலங்கையில் கண்ணகியை பத்தினித் தெய்வமாக வணங்கும் வழக்கம் ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது.

பூம்புகாரைத் தலைநகராகக்கொண்ட சோழ நாட்டிலே பிறந்து, பாண்டியநாட்டிலே  புரட்சி செய்து, சேரநாட்டிலே தெய்வமாகிய கண்ணகி கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் அநுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த கஜபாகு மன்னன் காலத்தில் இலங்கைக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டு இன்றுவரை சிங்கள மக்கள் மத்தியில் பத்தினித்தெய்யோ  என பக்தியுடன் வழிபட்டு வருவதைக் காணலாம். 

கஜபாகு மன்னன் வருடந்தோறும் ஆடி மாதத்தில் பத்தினி தெய்வத்திற்கு விழா எடுப்பித்தான். சிங்களத்திலே ஆடி மாதம் எசல எனப்படும். அதிலிருந்து இந்த விழா எசல பெரஹர என அழைக்கப்பட்டது. சுமார் 1800 வருடங்கள் பழைமையான இந்த வழிபாடு. இந்த அரசனை கடல்சூழிலங்கைக் கயவாகு வேந்தன் என சிலப்பதிகாரம் சிறப்பித்துக் கூறுகிறது. 

கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும் 
எம்நாட்டு ஆங்கண் இமய வரம்பனின் 
நல்நாள் செய்த நாள் அணி வேள்வியில் 
வந்து ஈக என்றே வணங்கினர் வேண்ட
(சிலப்பதிகாரம், வரந்தருகாதை: 160-163)

கப்பல்துறை கண்ணகி அம்மன் வழிபாட்டு இடம்

கப்பல்துறை கண்ணகி அம்மன் வழிபாடு பற்றி அறிந்ததும் ஆர்வம் மேலிட்டது. அதுபற்றி அறியத்தந்த கப்பல்துறை நண்பர் திரு.ச.சதீஸ் உடன் கண்ணகி அம்மனைத் தரிசிக்க பயணிக்கத் தொடங்கினேன். நாங்கள் செல்ல இரு பயணப்பாதைகள் இருந்தது. கப்பல்துறை ஊடான நீண்டதூர காட்டுப்பாதை ஒன்று, மற்றையது முத்துநகர் ஊடான பாதை. எனது நேரமின்மை கருதி இரண்டாவதைச் தெரிவு செய்தோம்.


கிராமத்தில் இருந்து வெளிகளினூடான நீண்ட பயணத்தின் பின் அம்மன்குளத்தினை அடைந்தோம். பல நூற்றாண்டுகளாக கைவிடப்பட்ட இந்த குளம் இன்று தூர்ந்து மறையும் நிலையில் இருக்கிறது.


யுத்தகாலத்தில் மக்களின் இடப்பெயர்வினால் கைவிடப்பட்ட இந்த இடம் இப்போது காடாகி இருக்கிறது.


சிறிது நேரப் பயணத்தின் பின்னர் கப்பல்துறை கண்ணகி அம்மன் வழிபாட்டு இடத்தினை அடைந்தோம். 1820 ஆம் ஆண்டு கவாட்டிக்குடா காளியப்பு என்பவரால் அவருக்குச் சொந்தமான நிலத்தில் கண்ணகி அம்மனுக்கு அமைக்கப்பட்ட வழிபாட்டிடம் அது.

அவரால் அமைக்கப்பட்ட கண்ணகி அம்மன் ஆசனக்கல்லினை மையப்படுத்தி இந்த வழிபாட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கிருக்கும் சிலையினை அண்மையில் சில விசமிகள் சேதப்படுத்தி விட்டதாக நண்பர் வருத்தத்துடன் கூறினார்.

கண்ணகி அம்மன் வழிபாடு
கண்ணகி அம்மன் வழிபாடு

காடாக இருந்த இந்த இடத்தினை தன்னார்வம் கொண்ட சில கப்பல்துறை இளைஞர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் துப்பரவு செய்து சீர்படுத்தி இருக்கிறார்கள். பல தடைகள், அச்சுறுத்தல்கள் என்பனவற்றினைத்தாண்டி கடினமாக உழைத்திருக்கிறார்கள்.

வடகிழக்கைப் பொறுத்தவரை வழிபாட்டிடங்கள் சமய காரணங்களுக்கு அப்பால் அங்குவாழும் மக்களின் இருப்பினை உறுதிப்படுத்தும் ஆதாரங்களாகவும் அமைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


கப்பல்துறை கண்ணகி அம்மன் தொடர்பில் தம்பலகாமத்தைச் சேர்ந்த திரு.பா.ஹம்சன் இயற்றிய சிலம்புத்தாய் என்ற 18 அம்மன் பாடல்கள் அடங்கிய நூல் 2011இல் வெளிவந்திருக்கிறது. சுமார் 70 வருடங்களுக்கு முன்னர் பெரியார் ஒருவரால் கப்பல்துறை கண்ணகி அம்மன்மீது பாடப்பட்ட அடைக்களப்பத்து பாடல்கள் இனக்கலவரத்தில் அழிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

சிலம்புத்தாய்
சிலம்புத்தாய்

அழைத்தவுடன் செய்துகொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு உற்சாகத்துடன் உதவிய நண்பன் சதீஸ் இடம் மனம்நிறைந்த நன்றிகளைத் தெரிவித்து விடைபெற்றேன்.

புத்தகங்களிலும், இணையத்திலும் தமிழர் வரலாற்றாதாரங்களைத் தேடிக்கொண்டிருப்பவர்கள் மத்தியில் உயிர் வாழ்தலுக்காக அன்றாடம் கடினமாக உழைத்துக்கொண்டு, தங்கள் இருப்பையும், அடையாளப்படுத்தல்களையும் அழியவிடாமல் காக்கும் அந்த மக்களைப்பற்றிய எண்ணங்கள் மனதைக் கனக்கச்செய்தது.
த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

7 comments:

  1. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  2. அருமையான வரலாற்றுப் பதிவு

    ReplyDelete
  3. வணக்கம்
    தங்களின் தேடலுக்கு முதலில் எனது உளம் கனிந்த பாராட்டுகள் ஐயா...
    தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்... என்பது போல தங்களின் தேடல் வரும்காலத்தில் அழியதாபொக்கிஷசம் .... மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. அருமையான பதிவு
    தொடர்வதற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ஐயா நல்ல பதிவு

    ReplyDelete
  6. நல்ல தேடலும் அருமையான பதிவும். வாழ்த்துக்கள்

    ReplyDelete