Tuesday, July 15, 2014

திருகோணமலை வன்னிபங்கள் - வன்னிபத்தின் உயில் - 3

குளக்கோட்டன்

இருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்லபூபால வன்னிபத்தின் உயில்

திருகோணமலையின் கொட்டியாரப்பற்றில் அடங்கியிருக்கும் இயற்கை வனப்பு நிறைந்த ஒரு ஊர் மேன்காமம். அங்கு சுமார் 120 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு உறுதி அண்மையில் எமக்குக் கிடைக்கப்பெற்றது.  05.06.1893 ஆந் திகதியிடப்பட்ட அவ்வுயில்    கொட்டியாரப்பற்று மேன்காமத்தில் வசித்த இருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்ல பூபால வன்னிபத்தினால் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் தொழும்புகள் பற்றி ஒரு நியமன உறுதி முடித்துக் கொடுக்கப்பட்டதைச் சொல்கிறது. திருகோணமலைப் பிராந்திய தமிழர்களின் வரலாற்றாதாரங்களில் இது ஒரு முக்கிய ஆவணமாகும். மேற்குறித்த உயிலின் அடிப்படையிலும், கிடைக்கும் ஏனைய சான்றாதாரங்களின் துணைகொண்டும் வன்னிபங்களின் காலத்து திருகோணமலைப் பிரதேசத்தின் வழமைகளை ஆராயமுயல்கிறது இக்கட்டுரை.

இந்த ஆவணத்தின் முக்கியத்துவத்தினை அறிந்துகொள்வதற்கு கீழ்வரும் தலைப்புகளிலான சுருக்கமான தேடல்கள் உதவிபுரியும் அதேவேளை அவை வன்னிபச் சிற்றரசுளின் காலத்தில் இருந்த சமூக நிலைகளை விளங்கிக் கொள்வதற்கு துணைபுரிவதாகவும் இருக்குமெனலாம். இந்த அடிப்பையில்
01. வரலாற்றுக்கால தமிழ்ச் சிற்றரசுகள்
02. வன்னி அரசர் அல்லது வன்னிபம்
03. திருகோணமலை வன்னிபங்களும் அதன் தேசவழமைகளும்
04. கொட்டியாரப்பற்று வன்னிமை
05. இருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்ல பூபால வன்னிபத்தின் உயில்.
என்பனவற்றினை தனித்தனியே ஆராய்தல் பொருத்தமானதாக இருக்கும்.
திருகோணமலை வன்னிபங்கள்

குளக்கோட்டன்


திருகோணமலைப் பிரதேசத்தில் வன்னிபங்களின் ஆட்சி திருகோணமலை மக்களின் வரலாற்று நாயகனாகிய குளக்கோட்டு மன்னன் காலத்தில் சிறப்பிடம் பெற்றிருந்ததோடு, ஒரு ஒழுங்கு படுத்தப்பட்ட வரையறைகளையும் கொண்டிருந்தது. அக்காலத்தில் திருகோணமலை மாவட்டம் நான்கு வன்னிப் பற்றுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. வன்னிபங்களின் நியமனம், கோணேஸ்வர ஆலய, கந்தளாய்க்குளத் திருப்பணிகள் என்று திருகோணமலை வரலாற்றில் முக்கிய அத்தியாயங்களைத் தொடங்கி வைத்த வரலாற்றுப் புகழுக்குரிய குளக்கோட்டு மன்னன் காலத்தில் திருகோணமலைப் பிரதேச வன்னிமைகள் பின்வருமாறு அமைந்திருந்தன.
1.திருகோணமலைப்பற்று (நகரப்பகுதி)
2.கட்டுக்குளப்பற்று.
3.கொட்டியாரப்பற்று.
4.தம்பலகாமப்பற்று.

இந்நான்கு குறுநிலப்பிரிவுகளும் தனியான சுயாட்சி அலகுகள் என்பதற்கு அவை கொண்டிருந்த அதிகாரங்கள் ஆதாரங்களாகின்றன. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐரோப்பிய காலனித்துவ நிர்வாகிகளால் எழுதப்பட்ட நூல்கள் இந்நான்கு வன்னிப்பற்றுக்களையும் ‘அரசுகள்’ என்று குறிப்பிடுகிறது. இங்கு வன்னிபங்களின் தலைமையில் கூட்டப்பட்ட கூட்டங்கள் ‘மகாநாடு’என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. பயிர்ச்செய்கை விருத்தியால் தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்த திருகோணமலையின் நான்கு வன்னிப் பற்றுக்களும் வன்னிபங்களின் காலத்தில் இருந்து ஐரோப்பியரின் ஆக்கிரமிப்பின் தொடக்கம் வரை சிறப்புற விளங்கியது குறிப்பிடத்தக்கது.

கோணேசர்கல்வெட்டு என்னும் நூலில் இந்த நான்கு வன்னிப் பிரிவுகளிலும் ஆட்சிபுரிந்த வெவ்வேறான குலத்து வன்னிபங்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் திருகோணமலைப் பற்று வன்னிபங்கள் ‘பூபாலகட்டு’ என்னும் இடத்திலுள்ள மாளிகையில் வாழ்ந்தனர். ‘தனியுண்ணாப் பூபாலன்’ என்பது அவர்களது சிறப்புப் பெயர். அவர்கள் 32 பேரின் பெயர்ப்பட்டியல் கோணேசர் கல்வெட்டில் காணப்படுகிறது. அவற்றோடு மூன்று வன்னிப குலங்களின் விபரங்கள் காணப்படுகின்றன. அவை முறையே மருங்கூர் வன்னிபம், சோழநாட்டு வன்னிபம், காரைநகரால் வந்த வன்னிபம் என்பனவாகும். இவற்றில் பரம்பரை பரம்பரையாக ஆட்சி செய்தவர்களின் பெயர்ப் பட்டியலையும் கோணேசர் கல்வெட்டு விரிவாகத் தருகிறது. இவற்றில் மருங்கூர் வன்னிபம் 37 பேரும், சோழநாட்டு வன்னிபம் 31 பேரும், காரநகர் வன்னிபம் 42 பேரும் அடங்குவர். இக்குலங்கள் ஒவ்வொன்றும் கட்டுக்குளப்பற்று, தம்பலகாமப்பற்று, கொட்டியாரப்பற்று என்பவற்றை ஆட்சி புரிந்தனர். மேற்கூறிய வன்னிபங்களின் ஆட்சி பற்றிய ஆதாரங்களை ஆதாரப்படுத்தும் முக்கிய ஆவணங்களாக
1.பண்டைய நூல்கள்
2.கல்வெட்டுக்கள்
3.ஐரோப்பிய நிர்வாகிகளின் ஆவணங்கள்
                                                              என்பனவற்றைக் கூறலாம்.

இவற்றில் திருகோணமலை வன்னிபங்கள் பற்றிய ஆதாரங்களாத் தரும் பண்டைய நூல்களில் முதன்மை பெறுவது கோணேசர் கல்வெட்டாகும். அத்துடன் யாழ்ப்பாண வைபவமாலை, வையாபாடல், வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுத காதல் ஆகிய நூல்களும் ஆதார ஆவணங்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. 'கோணேசர் கல்வெட்டு' என்கின்ற வரலாற்று நூல் கவிராஜவரோதயன் அவர்களால் 16 ம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இது பாடல்களையும் , உரைநடைப்பகுதிகளையும் கொண்டமைந்திருக்கிறது. அந்த நாட்களில் அரசர்கள் தங்களது திருப்பணிகள், கட்டளைகள் போன்றவற்றை சாசனங்களாகக் குறித்து வைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட சாசனத்தை ஆதாரமாகக்கொண்டு இலக்கியங்கள் உருவாக்கப்பட்டால் அது 'கல்வெட்டு' என அழைக்கப்பட்டது.

திருக்கோணேச்சர ஆலயத்துக்கு திருப்பணிகள் செய்த குளக்கோட்டு மன்னன், ஆலயம் பற்றியும், அதனை நிர்வகிப்பது பற்றியும், கோயிற்தொழும்பாளர்கள் கடமைகள் பற்றிய செய்திகளையும் உள்ளடக்கி 'பெரியவளமை பத்ததி' என்னும் செப்பேட்டில் பொறித்து வைத்திருந்தார். அச்சாசன விடையங்களை அடிப்படையாக வைத்து அதைத் தொகுத்தும், விரித்தும் கவிராஜவரோதயரால் உருவாக்கப்பட்டதுதான் கோணேசர் கல்வெட்டு. இந்நூல் மூலம் திருக்கோணேச்சரத்தின் வரலாறு, அவ்வாலயத்துக்கு குளக்கோட்டு மன்னன் செய்த திருப்பணிகள், அக்காலத்து திருகோணமலைச் சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்கள் என்பனவற்றுடன் திருகோணமலை வன்னிமைகள் பற்றிய விரிவான செய்திகளை அறியத்தருகிறது.

கோணேசர் கல்வெட்டைத் தொடர்ந்து திருகோணமலை வன்னிமைகள் பற்றிய தகவல்களைத் தரும் ஆவணமாக வையாபாடல் விளங்குகிறது. யாழ்ப்பாண செகராசசேகர அரசனின் அவை வித்துவானான வையாபுரி ஐயர் அவர்கள் 16ம் நூற்றாண்டில் இந்நூலினை இயற்றினார். வையாபாடலில் பல வன்னியர்களின் பெயர்கள் வருகின்றன. அவர்கள் சென்றிருந்த இடங்களும், கைப்பற்றிய இடங்களும் கூறப்படுகின்றன. அதில் சுபதிட்டா என்னும் அந்தணனும், படையும் திரியாய் என்னுமிடத்திற்குச் சென்று நீலப்பணிகனைக் கொன்று விட்டு அந்நிலத்தை ஆண்டனர் என்றும். அங்கசன் கட்டுக்குளத்திற்கும் , புகழ்மிக்க சிங்கவாகு திருக்கோணமலைக்கும் , மாமுகன் என்பவன் வெருகல், தம்பலகாமம் ஆகிய பிரதேசங்களைக் கைப்பற்றியாளச் சென்றார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வையாபாடலை மூலநூல்களில் ஒன்றாக் கொண்ட யாழ்ப்பாண வைபவமாலை 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மயில்வாகனப் புலவர் என்பவரால் இயற்றப்பட்ட நூலாகும். இது யாழ்ப்பாண அரசுடன் திருகோணமலை வன்னிமைகள் தொடர்புகளையும், சில காலங்களில் அவர்களின் ஆட்சி மேலாதிக்கத்தையும் ஏற்றிருந்ததையும் விபரிக்கின்றது. 15ஆம் 16ஆம் நூற்றாண்டுகளில் ஆட்சி புரிந்த யாழ்ப்பாண மன்னர்கள் திருகோணமலை வன்னிபங்களோடு மணத்தொடர்பும் கொண்டிருந்தனர். கனகசூரிய சிங்கையாரியனும் அவன் மகனும் வடதேசத்திலிருந்து ஈழத்திற்குத் திரும்பியபோது திருகோணமலையில் தங்கி பின்னர் தமது நாட்டைச் சென்றடைந்தனர் என யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. அதே வேளை ஆரியச்சக்கரவர்த்தி செகராசசேகரனும் பரராசசேகரனும் திருக்கோணேஸ்வரத்திற்குச் சென்று வழங்கிய தானங்கள் பற்றி கோணேசர் கல்வெட்டு ஆதாரப்படுத்கிறது.

இந்த நூல்களின் வரிசையில் கொட்டியாபுரப்பற்றில் இளஞ்சிங்க வன்னிபத்தின் தலைமையில் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுத கோயில் மண்டபத்தில், தேசத்தவர் கூடியிருந்த மகாநாட்டிலே தம்பலகாமத்து வீரக்கோன் முதலியார் பாடிய சித்திரவேலாயுத காதல் என்ற நூல் இடம்பெறுகிறது. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்நூல் கொட்டியாபுரப்பற்றை நிர்வாகஞ்செய்வதற்கு நியமிக்கப்பட்ட வன்னிமையும், வெருகலம் பதியை பரிபாலனஞ் செய்யும் கங்காணம், அடப்பனார் முதலாய தலைமைக் காரரும் ,தேச மக்களும், கல்வி கேள்விகளில் சிறந்த பண்டிதர்களும் ஆலயத்தில் உள்ள அழகிய மண்டபத்தில் மாகாநாடு கூடினர் என்ற சமகால விபரங்களை சிறப்பாக எடுத்துரைக்கிறது. எனவே கோணேசர் கல்வெட்டு, வையாபாடல், யாழ்ப்பாண வைபவமாலை, வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுத காதல் ஆகிய நூல்கள் திருகோணமலை வன்னிபங்களின் வரலாற்றினை ஆதாரப்படுத்தும் ஆவணங்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
த.ஜீவராஜ்
தொடரும்.................


மேலும் வாசிக்க

வரலாற்றுக்கால தமிழ்ச் சிற்றரசுகள் - வன்னிபத்தின் உயில் - 1
வன்னி அரசர் அல்லது வன்னிபம் - வன்னிபத்தின் உயில் - 2

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

5 comments:

  1. எனது அம்மப்பா சித்திரவேலு வன்னியனார், அவரது தந்தையார் வைரமுத்து வன்னியனார் இருவரும் கொட்டியாரப்பற்று வன்னியனார்களாக இருந்தவர்கள் என்பது உறுதியாகத் தெரியும். அதேபோன்று எனது அம்மம்மாவின் தந்தையார் இராசையா வன்னியனார் அவர்களும் வன்னியனாராக இருந்தவரே! ஆனால் எப்பகுதிக்கு என்று தெரியவில்லை. இந்தப் பதிவின் பின்னர் "வன்னியனார்கள்" பற்றிய விழிப்புணர்வும், ஆவலும் மிகுந்துள்ளது. நிச்சயமாக அவர்கள் பற்றிய தேடலைத் தொடங்கி ஆவணப்படுத்த எண்ணியுள்ளேன்.
    உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  2. உங்களுடைய ஆர்வம், மிகுந்த மனமகிழ்வைத் தருகிறது. உங்களது முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள். கி.பி 1786 இல் திருகோணமலையில் இருந்த வன்னிபங்கள் தொடர்பான விபரங்கள்

    கட்டுக்குளப்பற்று - சந்திரசேகர நல்லமாப்பாண வன்னிபம்
    கொட்டியாரப்பற்று- இருமரபுத்துய்ய எதிர்வீரசிங்க நல்லமாப்பாண வன்னிபம்
    தம்பலகாமப்பற்று - கடகதண்டிகை கனகரட்ணம் முதலியார்
    பிரித்தானியர் ஆட்சியில் 1936 இல் திருகோணமலையில் இருந்த வன்னிபங்கள் தொடர்பான விபரங்கள்

    கட்டுக்குளப்பற்று - இராசையா
    கொட்டியாரப்பற்று - சங்கரப்பிள்ளை
    தம்பலகாமப்பற்று - கனகசிங்கம்
    திருகோணமலைப்பற்று - சரவணமுத்து

    ReplyDelete
  3. தங்கள் பதிவு சிறந்த ஆவணப்படுத்தல்
    தொடருங்கள்

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா.
    தங்களின் பதிவு இனிவருகிற தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என்பதில் ஐயமில்லை. எல்லாத்தகவலையும் புத்தகமாக வடிவமைத்தால் இணையம் இல்லாதவர்களும் படிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. மிக்க நன்றி தங்கள் கருத்துரைகளுக்கு. புத்தகமாக்கும் முயற்சிகள் தொடர்கிறது.

    ReplyDelete