Tuesday, June 17, 2014

வரலாற்றுப் புதையல் தேடும் பயணங்கள் - 1 - புகைப்படங்கள்

வரலாற்றில் திருகோணமலை

பண்டைய நாட்களில் சில செய்திகள் என்றும் அழியாமல் இருக்கவேண்டும் என அக்கால மக்கள் விரும்பினார்கள். அதனால், அவற்றைப் பல பொருட்கள் மீது எழுதி வைத்தார்கள். அவற்றில் கல்லும் ஒன்று. அவ்வாறு நீண்ட காலம் அழியாதிருக்க வேண்டும் என கல்லில் பொறிக்கப்பட்ட செய்தியே கல்வெட்டு எனப்படுகின்றது. கல்வெட்டுக்கள் பல ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கக் கூடியவை என்பதனால், மிகப்பழங்கால வரலாற்றுச் செய்திகள் மற்றும் நிகழ்வுகளுக்கான நம்பகரமான வரலாற்றுச் சான்றாதாரங்களாக அவை திகழ்கின்றன.

கல்வெட்டுச் செய்திகள் முதலில் ஓலையில் எழுதப்பட்டிருக்கும். அதனை எழுதவேண்டிய கல்லின் மீது ஓவியம்போல் வரைவார்கள். பின்பு அதன்மீது கூர்மையான உளி போன்ற கருவியால் வெட்டுவார்கள். வெட்டிய எழுத்துகள் கல்லில் சிறிது பள்ளமாகத் தோன்றும். இவை கல்லில் வெட்டப்பட்ட எழுத்துக்கள் என்பதனால் கல்வெட்டுகள் என்றழைக்கப்படுகின்றன. கல்வெட்டைச் சிலாசாசனம் (சிலை+சாசனம் = சிலாசாசனம்) எனவும் கூறுவர். இங்கு சிலை என்ற சொல் கல்லைக் குறிப்பதாயும், சாசனம் என்ற சொல் அறிவிக்கும் செய்தி அல்லது உத்தரவு எனப்பொருள்படுவதாயும் அமைந்திருக்கும்.

வரலாற்றில் திருகோணமலை
வரலாற்றில் திருகோணமலை
வரலாற்றில் திருகோணமலை

கல்வெட்டுக்கள் பெரும்பாலும் பொதுமக்கள் பார்ப்பதற்காக வெட்டப்படுவதால் கோயில்கள், பொது மண்டபங்கள் போன்ற இடங்களில் வெற்றித்தூண்கள், நடுகற்கள், தானசாசனங்களாகக் காணப்படுகின்றன. குகைகளில் தங்கியிருந்த துறவிகளுக்கு அரசர்களும், வணிகர்களும் அளித்த தானம் பற்றிய செய்திகளைத் தெரிவிக்கும் குகைக்கல்வெட்டுக்களும் உண்டு.

வரலாற்றில் திருகோணமலை
வரலாற்றில் திருகோணமலை


பொதுவாக ஒரு முழுமையான கல்வெட்டு மங்கலச்சொல், மெய்க்கீர்த்தி , அரசன் பெயர் ,ஆண்டுக் குறிப்பு ,கொடை கொடுத்தவர் ,கொடைச் செய்தி , காப்புச் சொல் ,எழுதியவர் போன்ற பகுதிகளைக் கொண்டிருக்கும். இவ்வாறு உருவாக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுகள் உரைநடை வடிவிலும், பாடல் வடிவிலும் எழுதப்பட்டதாகும். அவற்றில் இடம்பெற்றுள்ள செய்திகளிலிருந்து,  கல்வெட்டு எழுதப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். அவற்றின் மூலம் அவர்களது பண்பாட்டுக் கூறுகளையும் அறிந்து கொள்ளலாம்.

சொல்லுக்குச் சொல் இடைவெளி விடுவதோ, நிறுத்தக்குறிகள் முற்றுப்புள்ளி, அரைப்புள்ளி, கால்புள்ளி ,மெய்ப்புள்ளி இடும் வழக்கமோ கல்வெட்டுக்களில் இருப்பதில்லை. மிக அரிதாகச் சில கல்வெட்டுகளில் மெய்ப்புள்ளி எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றின் வரிவடிவம் அவை எழுதப்பட்ட காலத்திற்கேற்ப வேறுபாட்டைக் கொண்டிருக்கும்.

உலகில் இன்றுவரை கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில் அதிகமான கல்வெட்டுகளைக் கொண்ட மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் திருகோணமலையிலேயே பெரும்தொகையான தமிழ்ச் சாசனங்கள் இதுவரை கிடைத்துள்ளன. இதுவரை கிடைத்தவை போல் பலமடங்குச் சாசனங்கள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பது பற்றிய தகவல்கள் அண்மைக்கால ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.

திருகோணமலையின் வரலாறு அடங்கிய கல்வெட்டுக்களைத் தேடியலைந்து அவற்றைப்பற்றிய தகவல்களை உரியவர்களிடம் ஒப்படைத்து அக்கல்வெட்டுக்களிலுள்ள விபரங்களை மற்றவர்களும் அறியும் வண்ணம் பிரபலப்படுத்த பேருதவியாக இருந்தவர் திருகோணமலையின் வரலாற்று நாயகனாகிய திரு.நா.தம்பிராசா அவர்கள். திருகோணமலை வரலாற்றை ஆராய்ந்த பல பேராசிரியர்களுக்கு இவர் பெரும் உதவியாக இருந்தார். 1970 ஆம் ஆண்டு தொடக்கம் தனது தாயாருடன் இணைந்து தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை ஆவணப்படுத்தும் பெருங்கைங்கரியத்தில் ஈடுபட்டார்.
நா.தம்பிராசா

கந்தளாய்க்கல்வெட்டு, பெரியகுளம் கல்வெட்டு, மாங்கனாய்க்கல்வெட்டு , புல்மோட்டைக்கல்வெட்டு, பத்திரகாளியம்மன் கல்வெட்டு ,நிலாவெளிப்பிள்ளையார் கோயில் கல்வெட்டு, கங்குவேலிக்கல்வெட்டு ,தம்பலகாமம் ஐயனார்திடல் கல்வெட்டு, வில்லூண்டிக்கந்தசாமி கோயில் கல்வெட்டு ஆகியவை இவரது பெருமுயற்சி காரணமாக வரலாற்றுத்துறை நிபுணர்களான கலாநிதி.செ.குணசிங்கம் ,பேராசிரியர்.சி.பத்மநாதன் ,பேராசிரியர்.கா.இந்திரபாலா ஆகியோர்களால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அரிய பல வரலாற்றுத் தடயங்களை உலகுக்கு அறிமுகம் செய்தன. திரு.நா.தம்பிராசா அவர்களைப் போலவே அவரைத்தொடர்ந்து பலரும் திருகோணமலை பிரதேசத்தின் வரலாற்றைத் தேடுவதில் ஆர்வம்காட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் நண்பர் வைத்தியகலாநிதி ஸதீஸ்குமார் உடன் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களின்  தலைமையில் தமிழர் வரலாற்றாதாரங்கள் தேடும் பயணமொன்று நடைபெற்றது. இதில் கிழக்குப்பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மாணவர்களான திரு.தனுராஜன், திரு.பசில், திரு.செல்வகுமார் ஆகிய மூவரும் ஆர்வத்துடன் இணைந்திருந்தனர். வழமை போலவே குறுகிய நேரத்தில் மிக விறுவிறுப்பாக நடந்தேறிய பயண நிகழ்வுகள் வாழ்வில் மறக்கமுடியாதவையாகும்.

கல்வெட்டியல் அல்லது சாசனவியல் (Epigraphy) என்பது, கல் அல்லது வேறு பொருட்களில் வெட்டப்பட்ட அல்லது உலோகங்களில் வார்க்கப்பட்ட எழுத்துக்கள் தொடர்பான ஆய்வுத்துறையாகும். இத்துறை பண்பாடு மற்றும் கால அடிப்படையில் கல்வெட்டுக்களை வகைப்படுத்துவதையும், அவற்றை வாசித்து விளக்குதல், அவற்றிலிருந்து முடிவுகளைப் பெறல் என்பனவற்றிற்கு உதவுகிறது.

கிழக்குப்பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மாணவர்கள் மூவரும் கடுமையான வெயிலையும், பசியையும் பொருட்படுத்தாது ஆறுதலாகவும், ஆர்வத்துடனும் கல்வெட்டுக்களைப் படி எடுப்பதுபற்றி விளக்கம் தந்தனர். கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டினை கழுவிச்சுத்தப்படுத்தி அதன் மீது நீரில் ஊறவிடப்பட்ட மையப்படி எடுக்கும் தாளினை விரித்து அதன்மீது மையை ஒற்றி எடுக்கும் கல்வெட்டுக்களைப் படி எடுக்கும் செயல்முறையினை விளக்கினர்.

வரலாற்றில் திருகோணமலை
வரலாற்றில் திருகோணமலை
வரலாற்றில் திருகோணமலை
வரலாற்றில் திருகோணமலை
வரலாற்றில் திருகோணமலை
வரலாற்றில் திருகோணமலை
வரலாற்றில் திருகோணமலை
வரலாற்றில் திருகோணமலை
வரலாற்றில் திருகோணமலை

த.ஜீவராஜ்
வரலாற்றில் திருகோணமலை

 பயணம் தொடரும்............
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

6 comments:

 1. அருமையான பதிவு!
  பொதுவாக, இப்படிப்பட்ட பதிவுகளை யாரும் அவ்வளவாகப் படங்களுடன் வெளியிடுவதில்லை. ஆனால், கல்வெட்டிலிருந்து படியெடுக்கும் முறைகள் பற்றிய விளக்கமான இத்தனை படங்களுடன் நீங்கள் இதை எழுதியிருப்பது சிறப்பு! நன்றி!

  ReplyDelete
 2. வணக்கம்
  ஐயா.

  தங்களின் தேடல் முயற்சி மூலம் தமிழ்ர்கள்ளுடைய வரலாற்றுப்பொக்கிஷம் என்றென்றும் பாதுகாக்கப்படும் அறிய முடியாத ஆதாரங்களை அறிய முடிகிறது. பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. சிறப்பு....
  புதிய தகவல் படங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.. தொடருங்கள்..

  ReplyDelete
 4. சிறப்பான பதிவு தொடருங்கள்...நன்றி

  ReplyDelete
 5. அகழ்வாராய்ச்சியின் பகுதியாகக் கொள்ளப்படத்தக்க இவ்வாய்வும் எனக்கு மிகவும் பிடித்தமானதொன்று.பணி தொடர வாழ்த்துக்கள் நண்பா.

  ReplyDelete