Monday, May 05, 2014

தம்பலகாமத்து அண்ணாவிமார்கள் பற்றிய ஒரு ஞாபகமீட்டல்…….


திருகோணமலையின் கலை, இலக்கிய பாரம்பரியம் பற்றிய ஆய்வுகளும் அவற்றின் வரலாற்றாதாரங்கள் பற்றிய தேடல்களும் அதிகரித்திருக்கும் இக்காலகட்டத்தில் திருகோணமலையிலுள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற கிராமங்களில் ஒன்றான தம்பலகாமத்தில் இன்று முற்றும் முழுதாக மறக்கப்பட்டுவிட்ட அண்ணாவிமார்களின் காலத்தினை மீட்டுப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஈழத்தமிழர்களின் கலைகளில் இன்றியமையாத கூறாக நாட்டுக்கூத்து காணப்படுகிறது. இதுவரை கிடைக்கப் பெற்ற நாட்டுக் கூத்துக்களில் மிகப் பழமையானதாக ‘மார்க்கண்டன் நாடகம்’ ‘வாளபிமன் நாடகம்’ என்பன காணப்படுகின்றன. இவற்றை எழுதிய வட்டுக்கோட்டை கணபதி ஐயரின் காலம் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியாகும்.

திருகோணமலையின் நாட்டுக்கூத்து வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட முதல் ஆவணமாகக் கருதப்படுவது கூத்துக்குரிய பல பண்புகளைக் கொண்ட’கண்டி அரசன்’ நாடகமாகும். இந்நாடகம் திரு.அகிலேசபிள்ளை பிள்ளை (1853 1910) அவர்களால் 1887 ஆம் ஆண்டளவில் எழுதிமுடிக்கப்பட்டதாகும். ‘கண்டி அரசன்’ நாடகத்துடன் தொடங்கும் திருகோணமலைப் பிரதேச நாட்டுக்கூத்துப் பாரம்பரியம் அவரைத் தொடர்ந்து வந்த புகழ்பெற்ற அண்ணாவியார்களாலும் , நாடகக் கலைஞர்களாலும் இன்றுவரை முன்னெடுத்துச் செல்லப் படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

ஈழத்தமிழரின் புராதான கலை இலக்கிய மரபுகளைத் தன்னகத்தே கொண்டமைந்த பழம்பெருமை மிக்க ஊர் தம்பலகாமம். தம்பலகாமம் ஸ்ரீ வீரக்கோன் முதலியார் அவர்களால் 17ஆம் நூற்றாண்டளவில் எழுதப்பட்ட ‘வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் காதல்’ என்னும் நூல் ஈழத்திலக்கிய வரலாற்றில் தனித்துவம் கொண்டதாகும்.

தம்பலகாமத்தில் இயல், இசை, நாடகம் என்னும் அரிய கலைகளுடன் ஆயுள் வேத வைத்தியக்கலையும் இணைந்து வளர்ந்து வந்ததைக் காணக்கூடியதாக உள்ளது. தம்பலகாமத்து அண்ணாவிமார்களில் பலர் பிரபல சுதேச வைத்தியர்களாக விளங்கியதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இவர்கள் தம்பலகாமத்தில் உழவுவேலைகள் முடிந்து வயல்கயெல்லாம் விதைத்தபின்பு விவசாயிகள் ஓய்வாக இருக்கும் காலத்தில் அவர்களைக் கவரும் வகையில் சங்கீதக்கச்சேரிகளை நடத்தியும், நாடகங்கள், கூத்துக்களைப் பழக்கி மேடையேற்றியும் தாங்களும் பாத்திரங்கள் ஏற்று நடித்தும் மக்களைப் பெரிதும் கவர்ந்தனர்.

நாயன்மார் திடல்

தம்பலகாமம் மத்தியிலுள்ள கள்ளிமேட்டு ஆலையடி முன்றலிலும், வர்ணமேடு சமயம்மாள் கோயில் முன்றலிலும், கோவில்குடியிருப்பு மைதானத்திலும் நாட்டுக் கூத்துக்கள் அரங்கேற்றப்பட்டன. எனினும் நீண்டகாலமாக கள்ளிமேட்டு ஆலய முன்றலே அதிக நாட்டுக் கூத்துக்கள் அரங்கேறிய களமாக இருந்து வந்திருக்கிறது. இங்கு இடம்பெறும் நாட்டுக் கூத்துக்களுக்கான ஒத்திகைகள் நாயன்மார்திடல், சிப்பித்திடல் , கூட்டாம்புளி , கரைச்சைத்திடல் போன்ற இடங்களில் இடம்பெற்று வந்திருக்கின்றன.

நாட்டுக் கூத்துக்களுக்கான ஒத்திகைகளுக்கான கொட்டில்களை நாடகக் கலைஞர்களே அமைத்தனர் என்றும் அதற்கு ஏற்படும் செலவுகளை தினம் ஒரு கலைஞர் பொறுப்பேற்றுக் கொண்டனர் எனவும் அறியக் கூடியதாக உள்ளது. சில நாட்டுக்கூத்து ஒத்திகைகள் சுமார் ஒருவருடகாலத்திற்கும் இடம்பெற்றதுண்டாம். கள்ளிமேடு ஆலயடி முன்றலில் ஒருநாள் விட்டு மறுநாள் மேடையேறும் நாட்டுக் கூத்துக்களைப் பார்க்க திருகோணமலை நகரிலிருந்தும், ஆலங்கேணி, கட்டைபறிச்சான், சேனையூர், சம்பூர் , சல்லி போன்ற இடங்களிலிருந்தும் வாகனங்களிலும், மாட்டுவண்டில்களிலும் இரசிகர்கள் ஒன்று கூடுவது வழக்கம். இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது தம்பலகாமத்து உறவுகளின் வீடுகளில் தங்கியிருந்து நாட்டுக் கூத்துக்கள் முடியும் வரை பார்த்து இரசிப்பார்களாம்.


பச்சை வயல்களுக்கிடையே தென்னந்தோப்புக்கள் திடல் திடலாக அமைந்து காட்சியளிக்கும் தம்பலகாமத்தில் வயல்வேலைகள் எல்லாம் நிறைவுபெற்று விவசாயிகள் ஓய்வாக இருக்கும் காலத்தில் நடைபெறும் நாட்டுக்கூத்துகளுக்கான பயிற்சிகள் இடம்பெறும் நி கழ்வுகள் கண்கொள்ளாக்காட்சிகளாகும் என வயது முதிர்ந்த பெரியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த ஒத்திகைகளைக் காணவும் மக்கள் திரளும் நிகழ்வுகள் அக்கால வழக்கமாக இருந்தது. சலங்கை ஒலிகளும், தாளவாத்திய இசைகளும், கலைஞர்களின் ஒத்திகைகளும் இணைந்து ஒலித்த காலமது .


நாட்டுக்கூத்துக் கலைஞர்களுடன் அவர்களது இரசிகர்கள் கொண்டிருந்த நெருக்கம் பலகாலம் நீடித்திருந்தது. அத்தோடு நாட்டுக் கூத்தில் முக்கிய பாத்திரமேற்று நடித்த நடிகர்களின் இயற்பெயர்கள் மறைந்து அவர்கள் நாட்டுக் கூத்தில் ஏற்று நடித்த பாத்திரங்களின் பெயர்களே நிலைபெற்றுப் போனதும் இதற்கு ஒரு நல்ல உதாரணம். பெரும்பாலான நாடகங்கள் இலவசமாகவே மேடையேற்றப்பட்டதாக அறியமுடிகிறது. நாடக முடிவில் அண்ணாவிமாருக்கும் நடிகர்கர்களுக்கும் வேட்டி ,சால்வை ,பணம் ஆகியவற்றை அன்பளிப்பு செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது. பின்நாட்களில் நாட்டுக்கூத்துக்களுக்காக கட்டணங்கள் அறவிட்டபொழுது அனுமதிச் சீட்டுக்கள் கோயில்குடியிருப்பில் விற்பனை செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தம்பலகாமத்தில் பிரபலியமாக விளங்கிய அண்ணாவிமார்கள் அயல் கிராமமான ஆலங்கேணிக்குச் சென்று ஆர்வமுள்ள இளைஞர்களைத் திரட்டி கூத்துப் பழக்கி மேடையேற்றியதும் வரலாறாகும். இவ்வாறு இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் 1900---1960 ஆண்டு காலப்பகுதியில் தம்பலகாமத்தில் சிறந்து விளங்கிய அண்ணாவிமார்களின் விபரங்கள் பின்வருமாறு.
1 திரு. கந்தப்பர் அண்ணாவியார்
2 திரு. கணபதிப்பிள்ளை அண்ணாவியார்
3 திரு. வேலுப்பிள்ளை அண்ணாவியார்
4 திரு.காளியப்பு முருகுப்பிள்ளை அண்ணாவியார்
5 திரு.சின்னத்துரை அண்ணாவியார்
6 திரு.வடிவேல் சிவப்பிரகாசம் அண்ணாவியார்

திரு.கந்தப்பர் அண்ணாவியார்

தம்பலகாமம் கள்ளிமேட்டைச் சேர்ந்த திரு. கந்தப்பர் அண்ணாவியார் நாட்டுக்கூத்து, இலக்கியம், கர்நாடக சங்கீதம் ஆகிய கலைகளோடு சுதேச வைத்தியத்தியக் கலையையும் முறையாகக் கற்றுத் தேர்ந்தவர். இவரிடம் இதிகாச, புராண ஏடுகளும், சித்த வைத்தியம் தொடர்பான ஏடுகளும் நிறையவே இருந்தன. இவரின் நெறியாழ்கையில் கள்ளிமேட்டு ‘ஆலயடி வேள்வி வளாக’ முன்றலில் மேடையேறிய ‘விலாசம்’ நாடகம் பெரும் வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. இந்நாடகத்தில் முக்கிய பாத்திரமேற்று நடித்த அவரது மகனான கணபதிப்பிள்ளை அண்ணாவியாருக்கும் பெரும் புகழைத் தேடித்தந்தது. திரு.கந்தப்பர் அண்ணாவியார் தமது காலத்தில் சிறந்த கலைஞராகவும், சுதேச வைத்தியராகவும் சிறந்து விளங்கினார்.


திரு. கந்தப்பர் கணபதிப்பிள்ளை அண்ணாவியார்.

கணபதிப்பிள்ளை அண்ணாவியார்

1900 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் கந்தப்பர் அண்ணாவியார் அவர்களுக்கு மகனாகப் பிறந்தார். தனது தந்தையிடம் இருந்து கர்நாடக சங்கீதம், இதிகாச புராணங்கள், சுதேச வைத்திய வாகடங்கள், கூத்துக்கலை ஆகியவற்றை முறையாகக் கற்றுக்கொண்டார். தனது தந்தையாரின் விலாசம் என்னும் நாடகத்தில் முக்கிய பாத்திரமேற்று நடித்ததின் மூலம் கலையுலகில் பிரவேசித்த இவர் தனது தந்தையாரின் வழிகாட்டலைப் பின்பற்றி நாடகங்களைப் பழக்கி மேடையேற்றத் தொடங்கினார்.


1924 ஆம் ஆண்டு தம்பலகாமம் கள்ளிமேட்டு ஆலயடி வேள்வி வளாகத்தில் மேடையேறிய “கோவலன் சரித்திரம்’ இவரது முதல் நாடகமாகும். இதனைத் தொடர்ந்து ‘சகுந்தலா’ ‘சிறுத்தொண்டர் சரிதம்’ ‘அசுவகுமார்’ ‘லலிதாங்கி’ போன்ற நாடகங்கள் மேடையேற்றப்பட்டு பலரது பாராட்டுதலையும் , இரசிகப் பெருமக்களின் அமோக வரவேற்பையும் பெற்றன.

1921 ஆம் ஆண்டுகாலப் பகுதியில் திருகோணமலை, தம்பலகாமம் ஆகிய இடங்களில் கச்சேரி செய்வதற்காக வந்து தங்கிய இந்தியக் கலைஞர்களான மதார் சாகிப், சின்னையா சாய்வு ஆகியவர்களிடம் ஆர்மோனியத்தை முறையாகக் கற்றுக் கொண்டார். பின்நாட்களில் திருகோணமலை மாவட்டத்திலேயே சிறந்த ஆர்மோனியக் கலைஞராக இவர் திகழ்ந்ததற்கு இதுவே அடிப்படைக் காரணமாக இருந்தது எனலாம். பல்துறைக் கலைஞராக விளங்கிய கணபதிப்பிள்ளை அண்ணாவியார் சிறந்த சுதேச வைத்தியராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது, அவரிடம் வைத்தியம் செய்து சுகமான நோயாளிகள் பல பரிசுப்பொருட்களைக் கொடுத்து மகிழ்ந்ததை அவரது பரம்பரையினர் இன்றும் நினைவு கூருவது வழக்கம்.


திரு.வேலுப்பிள்ளை அண்ணாவியார். (1900----1955)


தம்பலகாமம் நாயன்மார்திடலில் புகழ்பெற்ற சித்த வைத்தியராக விளங்கிய திரு.பத்தினியர் என்பவருக்கு மகனாகப் பிறந்த திரு. வேலுப்பிள்ளை அண்ணாவியார் சிறந்த நடிகருமாவார். ‘ஸ்ரீ விக்கிரம சிங்கன்’ ‘நளதமயந்தி’ ‘மயில்ராவணன்’ ‘பவளக்கொடி’ போன்ற நாடகங்களைத் தொடர்ந்து மேடையேற்றிய இவர் தான் நடித்த நாடகமொன்றில் ‘யமன்’ பாத்திரத்தில் தோன்றி இரசிகர்கள் அனைவரையும் பிரமிக்க வைத்தார். இதனால் பின்னாட்களில் இவர் செல்லமாக ‘யமன்’ என்றே அழைக்கப்பட்டார்.


கள்ளிமேட்டில் உள்ள ஆலயடிவேள்வி வளாகத்திலும் கோயில்குடியிருப்பிலும் பலதரமான நாடகங்கள் இவரால் மேடையேற்றப்பட்டன. இந்தியக் கலைஞர்களான ஆர்மோனிய வித்துவான் சின்னையா சாய்வு, மிருதங்க வித்தவான் மதறிசா , பிற்பாட்டுக்காறர் கரீம்பாய் மற்றும், வேல்நாயக்கர் , எஸ்.ஆர்..கமலம் போன்றோர்களின் தொடர்பால் பல்துறைகளிலும் தேர்ச்சிபெறும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. நினைத்தவுடன் ஒரு நாடகத்தை ஒத்திக்கை இல்லாமல் மேடையேற்றும் அபார ஆற்றல்கொண்ட இவர் சிறந்த சித்த வைத்தியருமாவார்.


திரு.காளியப்பு முருகுப்பிள்ளை அண்ணாவியார்.

தம்பலகாமம் கள்ளிமேட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு.காளியப்பு முருகுப்பிள்ளை அண்ணாவியார் சிறந்த பாடகராக விளங்கினார். இவரது இசைக்கச்சேரிகள் திருகோணமலை ,நிலாவெளி ,சம்பூர் ,கட்டைபறிச்சான், சேனையூர் ,பாலம்போட்டாறு போன்ற இடங்களில் இடம்பெற்று மக்களின் பேராதரவைப் பெற்றது. வாய்ப்பாட்டுக் கலைஞராக விளங்கிய இவர் சிறந்த ஆர்மோனியக் கலைஞராகவும் விளங்கினார்..


திரு.வடிவேல் சிவப்பிரகாசம் அண்ணாவியார்.


தம்பலகாமம் கள்ளிமேட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு.வடிவேல் சிவப்பிரகாசம் அண்ணாவியார் 1917 ஆம் ஆண்டு பிறந்தவர். கள்ளிமேட்டிலுள்ள வெள்ளைப்பிள்ளையார் ஆலய முதற் பூசகராகக் கடமையாற்றிய இவர் இனிய குரல்வளமும் , நன்றாககப் பாடக்கூடிய ஆற்றலும் பெற்றவர். சிறந்த நாடக இயக்குனராகிய இவர் தயாரித்த நாடகங்கள் கள்ளிமேடு ஆலயடி வளாகத்தில் மேடையேற்றப்பட்டன. ’ஹரிச்சந்ரா’ ‘சந்திரமதி’ போன்ற நாடகங்கள் நல்ல வரவேற்பையும் பெற்றன. நாடக இயக்கம் ஒப்பனை என்பவற்றோடு தன்னால் தயாரிக்கப்படும் நாடகங்களில் முக்கிய பாத்திர மேற்று நடிக்கவும் செய்தார்.

எந்த நேரமும் சுறுசுறுப்பாகவும் புன்னகை ததும்பும் முகத்தோடும் காணப்படும் இவர் 1954ஆம் ஆண்டு தன் குடும்பத்தாருடன் முள்ளிப்பொத்தானைக்கு இடம் பெயர்ந்தாலும் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் தம்பலகாமம் ஆதி கோணநாயகர் ஆலயத்திற்கு வந்து பஜனை செய்யத்தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


திரு.சின்னத்துரை அண்ணாவியார்.

தம்பலகாமம் சிப்பித்திடலில் வாழ்ந்த சின்னத்தம்பி அண்ணாவியாரைப் பற்றி பெரிதும் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆர்மோனியம் நன்கு வாசிக்கத்தெரிந்த இவர் நாடகங்களை நெறிப்படுத்தி மேடையேறிறினார் எனினும் அவை பற்றிய விபரங்களை அறிய முடியாதுள்ளது.

சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக சிறப்புடன் விளங்கிய தம்பலகாமத்து அண்ணாவிமார்களின் காலம் 10.07.1995ல் திரு.வடிவேல் சிவப்பிரகாசம் அண்ணாவியார் அவர்கள் இவ்வுலகைவிட்டு பிரிந்ததைத் தொடர்ந்து நிறைவு க்கு வந்தது. காலவோட்டத்தில் இனவன்முறை, இடப்பெயர்வு, இயற்கை அனர்த்தங்கள் என்ற அலைக்கழிவுகளைத் தொடர்ந்து மீள்குடியேற்றம், வாழ்வாதாரப் பிரச்சினைகள் என்ற சூழல்களுக்குள் சிக்கித் தவிக்கும் இக்காலகட்டத்தில் அண்ணாவிமார்களின் காலம் பற்றிய மீட்டுப்பார்ப்புகள் தம்பலகாமத்தில் அருகிப்போய்விட்டது. அவர்கள் தொடர்பான விபரங்களைப் பெறுவதும் சேகரிப்பதும் இன்றைய காலகட்டத்தில் கடினகாரியமாக உள்ளது.

தம்பலகாமத்தில் அண்ணாவிமார்களின் காலம் முற்றுப் பெற்றாலும் அவர்களைத் தொடர்ந்து நாடக முன்னெடுப்புகள் பலராலும் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களான திருமதி.சீதாலட்சுமி ஆசிரியை ,கவிஞர் திரு.பத்மநாதன் ஆசிரியர் , தம்பலகாமத்தைச் சேர்ந்த கலாபூசணம் வயலின் மேதை திரு.சோமசுந்தரம், தம்பிலுவில் திரு.கண்ணமுத்து ஆசிரியர் , சட்டத்தரணி திரு.சிவகாலன் ,ஆசிரியைகளான திருமதி.கெங்காம்பிகை , திருமதி.கமலா , நாடக விற்பனர் திரு.வீரசிங்கம் போன்றோர்களால் நல்ல நாடகங்கள் நெறிப்படுத்தி மேடையேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


1960 களில் தம்பலகாமம் மகாவித்தியாலயத்தில் ஆசிரியர்களாகக் கடமையாற்றிய கலைப்புலமை மிக்கவர்களால் மீண்டும் நாடகங்களுக்கான புத்துயிர் கொடுக்கப்பட்டது. இவர்களின் முயற்ச்சியால் மேடையேற்றப்பட்ட ‘இராஜராஜசோழன்’ ‘சாம்பிராட் அசோகன்’ ‘வீரபாண்டிய கட்டப்பொம்மன்’ ‘சோக்கரடீஸ்’ போன்ற நாடகங்கள் பலராலும் பாராட்டப்பட்டவை. இக்காலப் பகுதியில் மட்டக்களப்பைச் சேர்ந்த நாடகக் கலைஞர் திரு.வீரசிங்கம் தம்பலகாமம் வந்து நாயன்மார்திடல் வேள்வி வளாக முன்றலில் ‘தூக்குத்தூக்கி’ ‘சுமதி எங்கே?’ போன்ற சமூக நாடகங்களை மேடையேற்றினார். இந்நாடகங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.

இதன் பின்னர் பாடசாலைகளில் இடம்பெறும் கலை நிகழ்ச்சிகளில் மட்டுமே நாடகங்கள் மேடையேற்றப்பட்டு வந்தன. பழமையில் அண்ணாவிமார்களால் வளர்க்கப்பட்ட அந்த அரிய கலை தம்பலகாமத்தில் அருகிவிட்டதென்றே சொல்லவேண்டும். எனினும் காலவோட்டத்தில் கலையின் வடிவம் மாறி தம்பலகாமத்து இளைஞர்களால் ‘தமிழ்க் குறும்படங்கள்’தயாரிக்கும் முயற்சிகள் பாராட்டக் கூடியவகையில் வளர்ச்சி பெற்று வருவது மகிழ்சிக்குரிய விடயமாகும்.


இந்தவகையில் 2012 ஆம் ஆண்டில் சர்வதேச குறும்படப் போட்டியில் முதற்பரிசைத் தட்டிக்கொண்ட சுசீதனின் ‘அடிவானம் , 2008 இல் மனித உரிமை தினத்திற்காக நடத்தப்பட்ட போட்டியில் முதல் இடத்தைப் பெற்றுக் கொண்ட திருமதி பாலசாமுண்டேஸ்வரி கௌரிதரனின் ‘வஞ்சகக் கடத்தல்' ஜனார்த்தனின் இயக்கத்தில் உருவாகிய ‘கடந்த பயணம்’ , பிரசாத்தின் இயக்கத்தில் உருவாகிய ‘தாய்’ போன்ற குறும்படங்களைக் குறிப்பிடலாம். மேலும் பல இளைஞர்கள் இம்முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக அறியக் கூடியதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

காலவோட்டத்தில் மறக்கப்பட்டு விட்டாலும் பல்தகமை கொண்ட அண்ணாவியார்கள் தம்பலகாமத்தில் வாழ்ந்த காலம் கலைகளின் பொற்காலம் எனத்துணிந்து கூறலாம்.

ஆவணப்படுத்தலுக்காக வைத்திய கலாநிதி த.  ஜீவராஜ்.
ஊசாத்துணை
01. தம்பலகாமத்தின் கலைப்பாரம்பரியம் ----- தம்பலகாமம். வே.தங்கராசா (www.geevanathy.com)
02. நாடகக்கலை அருகி, அழியும் நிலை -----– தம்பலகாமம். க.வேலாயுதம்
03. திருகோணமலையின் நாடக முன்னோடிகள் –--- திருமலை நவம் – திருகோணமலைப் பிரதேச நாடக அரங்கப்பாரம்பரியம் 1994
04. ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி - க. சொக்கலிங்கம் 1977


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. Dear Dr
    T have to thank you for the documentation and it will be very helpful to our generation One day our people will realize our people and their services. I have personally seen some of these dramas in Thamplalakamam. It is really nice piece of work to jet to know our people and their culture. Thanks a lot
    Kernipiththan

    ReplyDelete
  2. கோணமாமலை சிவாலய வழிபாட்டு நடைமுறைகளையும் பின்பற்றப்படும் நிருவாக முறைமைகள் பற்றியும் கூறலாமே, அறிய ஆவல், நன்றி

    ReplyDelete