Tuesday, May 27, 2014

அது போதும்

koneswaram

சிற்றம்பலத்தில் நடம் புரியும்
சிவனே உன்றன் திருத் தாள்கள்
பற்றித் தொழுதேன் பயம் நீக்கிப்
பாப இருளைப் போக்கிவிடு.
கற்றைக் குழலில் பிறை சூடிக்
கங்கை மானைத் தரித்தோனே!
முற்றும் துறந்த முனிவர்களும்
முழுதும் உணரார் உன் பெருமை.


உற்றார் போல உடனிருந்து
உலுத்தர் செய்யும் கொடுமைகளை
நெற்றிக் கண்ணால் அழல் சிந்தி
நீறாய் எரித்துப் பொசிக்கி விடு
வற்றாத் தயையை வாய்மைதனை
வழங்கு இறiவா வையகத்தில்
குற்றச் செயல்கள் புரியாத
குணத்தைச் சிறப்பைத் தந்தருள் செய்.

முன்னைப் பிறவி பல எடுத்தும்
முடியா திந்தத் தீவினையை
என்ன செய்வேன்? மேலோர்கள்
இதயத் துறையும் ஈஸ்வரனே!
இன்னல் அகன்று இருள் நீங்கி
இடர்பாடற்ற ஓர் நிலையில்
உன்னைத் தினமும் தொழுதேற்றி
உருகும் மனதைத் தந்தருள் செய்.

உலகை ஆக்கும் உன் செயல்கள்
உணரத் தக்க தொன்றல்ல!
மலையும் கடலும் வான் வெளியும்
மருவும் இந்த வையகத்தில்
அலைபோல் தோன்றும் உயிரினங்கள்
அனைத்தும் வாழ வழி வகுத்தாய்
கலையின் வடிவே!கண்ணுதலே
கருணை செய்ய வேண்டுமையா.

பொங்கும் அரவும் கொன்றை மலர்
புனையும் சிவந்த சடை முடியில்
கங்கை அணிந்து பிறைசூடி
கையில் சூலம் தனை ஏந்தி
எங்கும் நிறைந்த பிரானாக
ஈசன் அகிலம் உய்வு பெற
மங்கை உமையாள் ஒருபாக
வடிவம் கொண்ட பேரிறைவா!

முன்னம் செய்த தீவினைகள்
முழுதும் வந்து மோதுவதால்
மனுவாய்ப் பிறந்தும் மற்று முயிர்
வடிவம் கொண்டு பிறந்துழலும்
அநீத நெறியில் சிக்காமல்
அன்பே நிறைந்த அற நெறியில்
தினமும் உன்றன் திரு நாமம்
தியானம் செய்ய அருள் புரிவாய்!.

கண்ணுக் கினிய காட்சிகளை
காணும் மகிழ்வால் சிவநாமம்
எண்ணாச் சிறுமை எனை விட்டு
இல்லா தொழிய அருள் புரிவாய்.
மண்ணில பிறந்து பின் மாயும்
மாளாத் துயரில் மூழ்காமல்
உன்னில் கலந்து உய்வு பெற
உதவி செய்தால் அது போதும்.

தம்பலகாமம் க.வேலாயுதம்.
நன்றி ஆத்மஜோதி.(16.10.1980.)

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment