Thursday, December 03, 2009

தாமரைத்தீவான்

தாமரைத்தீவான்
'தீர்த்த நாளான இன்று
ஒரு நூல் கோர்த்தநாளானது '

1981 ஆம் ஆண்டு தீர்த்தக் கரையில் அமரர் தம்பலகாமம் . க. வேலாயுதம் அவர்களால் பாடப்பட்ட தம்பலகாமம் ஆதி கோணநாயகர் கோயில் வரலாறு என்ற நூல் வெளியீட்டின் போது தாமரைத்தீவான் அவர்களால் பாடப்பட்ட பாவின் முதலிரு வரிகளிவை. இந்நிகழ்வின் போது நான் சிறுபிராயத்தவனாகையால் பின்னாளில் அப்பாடலை அப்பா வைத்திருந்த ஒலிப்பதிவில் இருந்தே கேட்டேன்.தமிழ் அவர் நாவில் தவழும் விதமே அலாதியானது. அக்கவிவரிகள் இன்றும் எனக்கு அவர்குரலில் ஞாபகம் இருக்கிறது.
அவரது உருவுக்கு ஏற்றபடி பொடிப்புலவன் என்னும் புனைப்பெயரையும் கொண்டிருக்குமிவர் தமிழுக்குக் கிடைத்த பெருஞ்சொத்து. செம்மையும், தூய்மையும் நிறைந்த மரபுக்கவிதைகளுக்குச் சொந்தக்காரர். நாடறிந்த கவிஞர்.

சோமநாதர் - இராசேந்திரம் என்னும் இயற்பெயருடைய தாமரைத்தீவான் திருகோணமலை கிண்ணியாவிலுள்ள ஈச்சந்தீவு,தாமரைவில்லை பிறப்பிடமாகக் கொண்டவர். 24.07.1932 இல் பிறந்த இவரொரு ஓய்வு பெற்ற அதிபர். 1952 களில் இலக்கிய ஆக்கங்களில் ஈடுபாடு கொண்ட இவரது முதற் பாடல் 1956 இல் வெள்ளைப்பூனை என்னும் தலைப்பில் சுதந்திரனில் வெளிவந்தது. அதைத்தொடர்ந்து அவரது படைப்புக்கள் வீரகேசரி, தினகரன் ,சுடர் ,சிந்தாமணி, சூடாமணி, தாகம் ,சர்வதேச தமிழர் ,தமிழ்உலகம் முதலான இதழ்களில் வெளிவந்தது.
திருமலை மாவட்டத்தில் பல கவியரங்குகளின் நாயகனாக விளங்கிய, இயல்பாகப் பழகும் தன்மைகொண்ட இவர் ஆரவாரமின்றி சமூக சீர்திருத்தக் கருத்துக்களை தனதாக்கங்களில் விதைத்துச் செல்பவர்.

பிள்ளைமொழி (1992) , கீறல்கள்(1992), கட்டுரைப் பத்து(1997), போரும் பெயர்வும்(1999), ஐம்பாலைம்பது(2001) , வள்ளுவர் அந்தாதி(2002), முப்பத்திரண்டு(2004), சிறுவிருந்து(2004), சோமம்(2005), என் பா நூறு(2005), ஐந்தொகை(2005), இணைப்பு(2008) , அன்பழைப்பு என்பன இதுவரை வெளிவந்த இவரது நூல்களாகும். இன்னும் பல நூலுருவாக்கம் பெறக்காத்திருக்கின்றன என அண்மையில் சந்தித்தபோது கூறினார்.

பல பாராட்டுக்களுக்கும் ,விருதுகளுக்கும் சொந்தக்காரரான இவருக்கு கலாபூஷணம் விருது 2005 இல் வழங்கப்பட்டது.

த.ஜீவராஜ்
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

3 comments:

 1. vickneswarananthanDec 3, 2009, 7:20:00 PM

  நன்றி அண்ணா உங்கள் ஞாபகமூட்டலிற்கு!
  உண்மையிலேயே இவரது கவிதை எல்லோரையும் வயது வேறுபாடின்றி ஈர்க்கும் தன்மை உடையது. நானும் மிக சிறியவனாக இருந்த காலத்தில் அதிகமாக கேட்டிருக்கிறேன்.ஆலங்கேணியில் நடக்கும் எந்த கலை நிகழ்வாக இருந்தாலும் இவரது பேச்சு இருக்கும். பேச்சே கவிதையாகத்தான் இருக்கும். அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் வணக்கம் சொல்வதில் இருந்து விடைபெறுவது வரைக்கும் கவிதையாகவே பேச்சு அமையும்.ஒருவகையில் அவருடைய ஈர்ப்புத்தான் என்னையும் கவிதை எழுதத்தூண்டியது. எனக்கு மட்டுமல்ல அனேகமாக எமது ஊரைச்சார்ந்த கவிதை எழுதக்கூடிய அனேகமானவர்களுக்கு இவர்தான் மானசீக குருவாக இருப்பார் என்று நினைக்கிறேன். பாடசாலை நிகழ்ச்சியில் இவர் பேசவந்தாலே சிறுவர்கள் எல்லோருக்கும் ஒரே சந்தோசம்தான். பசுமையான நினைவாக இருக்கிறது அண்ணா இவரின் நினைவுகள்.

  ReplyDelete
 2. தனிமதிFeb 18, 2010, 5:31:00 PM

  காலம் கண்டு கொள்ளத் தவறியதாக வருத்தப்படுவதை விட கவிஞர்களை இனங் கண்டு கொண்டு அதற்கு மதிப்பளித்து அவரை கெளரவிக்கும் முகமாக பதிவிலிடும் தங்களுக்கு மீண்டும் நன்றிகள் ஜீவா.

  ReplyDelete
 3. நட்போடு விஜிFeb 18, 2010, 5:40:00 PM

  சொன்னா நம்ப மாட்டீங்க ரெண்டு நாளைக்கு முன்னர் தான் இவரைப்பற்றிக் கதைத்தோம்.

  திருக்குறள் போட்டிக்கு இவர் பல காலம் நீதிபதியாகக் கடமை ஆற்றியவர்.
  அவரது மெல்லிய தோற்றத்துக்கும் குரலுக்கும் ரொம்ப வித்தியாசம்...
  நயமாகப்பேசுவதில் வல்லவர்.

  ReplyDelete