Saturday, January 10, 2009

என் கல்விக்கூடங்கள் -1, தம்பலகாமம்..


பாடசாலை நாட்கள் பற்றிய நினைவுகள் எப்போதுமே சுவாரஸ்யமானவை, திரும்பிப்பார்க்கையில் எப்போதுமே உற்சாகம் தருபவை. எனது ஆரம்பப் பாடசாலை தம்பலகாமம் சாரதா வித்தியாலயம் என்றாலும் அதற்கு முன்பே பாடசாலைக்கும் எனக்குமான உறவு ஆரம்பித்திருந்தது. இது எல்லா வாத்தியார்களின் பிள்ளைகளுக்கும் வாய்த்திருக்கும் என நினைக்கிறேன். அப்படி அப்பாவுடன் நான் சென்றபாடசாலைகள் பாலம்போட்டாறு சித்திவிநாயகர், முன்மாதிரித்திடல்அ.த.க பாடசாலை என்பனவாகும். 

எனது முதலாம் ஆண்டு சாரதா வித்தியாலயத்தில் ஆரம்பமானது. அழுது, அடம்பிடித்து ஆரம்பித்து வைக்கவேண்டிய அவசியம் ஏதும் இருக்கவில்லை. ஏனெனில் பாடசாலை எனக்கொன்றும் புதிதல்லவே. இருவருடக் கல்விக்குப் பின்னர் தம்பலகாமம் மகாவித்தியாலயத்துக்கு மாறினேன்.




(சாரதா வித்தியாலயத்தில் இருந்து பார்க்கையில் தெரியும் ஆதிகோணேஸ்வரர் ஆலயக்கோபுரம்.)

ஆண்டு இரண்டில் இருந்து 8ம் ஆண்டுவரை மகாவிததியாலயத்தில் கல்விகற்றேன். படிப்பு, விளையாட்டு, கலைவிழாக்கள் என்று கழிந்த சந்தோசகாலங்களுக்கு 1985 ஆவணி,1987 என அடுத்தடுத்து வந்த இரு இடப்பெயர்வுகள் முற்றுப்புள்ளி வைத்தது. அதிலிருந்து 1990ம் ஆண்டுவரை இடப்பெயர்ந்த இடங்களிலிருந்த பாடசாலைகளில் எல்லாம் இடைக்கிடை படித்ததாக ஞாபகம்.

1990இல் மீண்டும் ஊர்திரும்பியபோது, சொந்த ஊரில் 6000 பேரைக்கொண்டு அமைக்கப்பட்ட அகதிமுகாமாக மகாவித்தியாலயம் மாறியது வாழ்வில் மறக்கமுடியாத கொடுமை. சொந்த ஊரில் படித்த பாடசாலையில் பொலித்தீன் பைகளுடன் சீனி, அரிசி, பருப்புக்காக வரிசையில் நின்ற ஞாபகங்கள் வந்து போகிறது. வாழ்வின் மிகமோசமான காலப்பகுதி அது. அப்போது தற்காலிகமாக ஆதிகோணேஸ்வரர் ஆலயத்திலுள்ள வாகைமரத்தின் கீழ் எங்கள் படிப்புக்கள் தொடர்ந்தது. இரண்டு வருடங்கள் அந்த முகாம் இயங்கியது அந்த நாட்கள் மிகக் கொடுமையானவை. வரும் நாட்களில் ஆறுதலாக மீளும் நினைவுகளை எழுத்துருவாக்கலாம் என்றிருக்கிறேன்.






தம்பலகாமத்தில் நான் படித்த இருபாடசாலைகளையும் விட ஒருமுக்கியமான பாடசாலை அது அதிபர், ஆசிரியர் இல்லாது வாழ்க்கை அனுபவங்களைப் பாடமாகச் சொல்லித்தந்த வயல்வெளிகள்.

எங்களது நேரங்களைப் பகுதிநேர வகுப்புக்கள் ஆக்கிரமிக்காத காலம். பாடசாலை முடிந்த்தும் வயல் வேலைக்குப் போன பொன்னான நேரங்கள், வயல் என்றால் என் படங்களில் நீங்கள் பார்ப்பதல்ல ஊருக்கு வெளியே பார்க்கும் திசையெல்லாம் பச்சைப்பசேலென வியாபித்திருக்கும் பெரியதொரு வெளி. அங்குதான் தனிமையில் நான் வாசித்த, கண்ட, கேட்டவையாவற்றையும் எனக்குள்ளே அசைபோடப்பழகிக்கொண்டேன். இயற்கையை ரசிக்கப்பழகியதும் பின் அதனோடு ஒன்றித்துப்போனதும் இங்குதான் நிகழ்ந்தது.






த.ஜீவராஜ்
2009



இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

14 comments:

  1. படங்களுடன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கும் விதம் அருமை.

    ReplyDelete
  2. நன்றி ராமலக்ஷ்மி அவர்களே

    ReplyDelete
  3. பச்சைப் பசேலேன்ற வயல் வெளிகளும் பசுமை நிறைந்த பழைய பாடசாலை ஞாபகங்களும் எல்லோர் வாழ்விலும் இருந்த போதிலும் அதனுள் அனுபவித்த வேதனைகள் மனதைப் பிழிகின்றது. இழப்பின் அருமை பெரிதாகத் தெரிகின்றது. இருந்த போதிலும் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் உடைய உங்களால் இந்தப் பாடசாலைகள் பெருமையடைகின்றன என்பதே உண்மை. எத்தனை பாடசாலைகளுக்கு இப்படி ஓர் கெளரவம் கிடைக்கும்?

    ReplyDelete
  4. Sutharsshan PonniahMay 10, 2009, 5:34:00 PM

    பள்ளிக்கூடம் சார்ந்து சந்தோஷமான எண்ணங்களும், பதிவுகளும் மட்டும் இல்லை.....வலியும் சொல்லமுடியாத தவிப்பும், தோல்வி குறித்த பயமும். அவமானப்படுத்தப்படும் வகுப்பறைகளும் காலங்காலமாக நம்மை தொடர்ந்தே வருகின்றன!!!
    ஒரு புதிய முறை அமுலாகும்போது அனுபவமின்மை, போதுமான தயாரிப்பின்மை, தேவையான கருவிகள், உபகரணங்கள் இன்மை, போன்ற பல்வேறு குறைபாடுகள் வழி மறிக்கும். செக்குமாட்டு தடத்தை விட்டு வேறுபாதையில் பயணிப்பது சிரமமாயிருக்கும், காலிடறும்.........

    ஆயினும் இந்த இடையூறுகளை எதிர் கொள்ளாமல் புதுமையாக்கங்கள் ஒருபோதும் இல் லை. பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்போராடுவது முற்போக்கானது, தேவையானது. பிரச்சனைகளிலிருந்து தப்பியோட போராடுவது, வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாகும்.


    உனது ஆக்கம் நன்றாக இருந்தது.

    ReplyDelete
  5. நன்றி Renuka Srinivasan
    உங்கள் கருத்துரைகளுக்கு..

    ReplyDelete
  6. ///வலியும் சொல்லமுடியாத தவிப்பும், தோல்வி குறித்த பயமும். அவமானப்படுத்தப்படும் வகுப்பறைகளும் காலங்காலமாக நம்மை தொடர்ந்தே வருகின்றன!!!///


    வணக்கம் சுதர்சன்
    உங்கள் பகிர்விர்க்கு நன்றிகள்...

    ReplyDelete
  7. என்னுடைய பாடசாலை யாழ்பாணம் பரியோவான் கல்லூரி.கொழும்பில் கூட அத்தகைய அழகிய பாடசலையை நான் பார்த்ததில்லை.உங்ளது பாடசாலை போல் கழனிகளும் தோப்பும் சூழஇல்லாவிட்டாலும் அதன் கட்டடங்கள் கட்டப்பட்ட பழைய ஆங்கிலேயப்பாணி அழகானது.இதைப்படித்தவுடன் எனது பாடசாலைப்புகைப்படங்களையும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை வருகிறது. ஒவ்வொருமுறையாழ்பாணம் போகும்போதும் புகைப்படம் எடுக்கவேண்டும் என்ற நினைவுடனே போவேன்..ஆனால் ஆளில்லாத் தெருவும் திசைக்கொன்றாக தெறித்துப்போன நண்பர்களின் நினைவும் புதுமுகங்களும் நண்பர்களில் மூச்சுக்காற்றில்லத சூழலும் தூண்டும்; மெல்லிய கவலையுணர்வில் பாடசாலைக்குள்போகவே மனம் வருவதில்லை.

    ReplyDelete
  8. நன்றி ஜீவன்!
    பல நினைவுகளை மீளக் கொணர்ந்தது உங்கள் படங்கள். நீங்கள் சொன்னது போலவே அந்தப்பாடசாலைகள் மட்டுமல்ல, வயல்வெளிகளுமே கற்கைக் கூடங்கள்தான். நானும் அனுபவித்திருக்கின்றேன். நீங்கள் கறிப்பிட்ட வாகை மரம், வயல்வெளி, பாடசாலை எல்லாவற்றுக்கும் பின்னால் எனக்கு எண்ணற்ற கதைகள் உண்டு. பொழுதுகள் வரும் போது பேசலாம்.
    நீங்கள் காட்சிக்குத் தந்த படங்களின் இடங்களில் என்னோடு வாழ்ந்தவர்கள் பற்றி கிழே உள்ள இணைப்புக்களில் பதிவு செய்துள்ளேன். நேரம் வரும் போது பாருங்கள் நன்றி
    http://malainaadaan.blogspot.com/2006/06/1.html

    http://maruthanizal.blogspot.com/2006/12/3.html

    http://malainaadaan.blogspot.com/2006/09/blog-post_115833572425095874.html

    ReplyDelete
  9. நன்றி cherankrish

    //அதன் கட்டடங்கள் கட்டப்பட்ட பழைய ஆங்கிலேயப்பாணி அழகானது.//

    உண்மை,யாழில் இருந்தபோது பார்த்திருக்கின்றேன்....

    ReplyDelete
  10. //அந்தப்பாடசாலைகள் மட்டுமல்ல, வயல்வெளிகளுமே கற்கைக் கூடங்கள்தான். //

    நன்றி மலைநாடான் அவர்களே

    //நேரம் வரும் போது பாருங்கள் //

    நிட்சயமாக...

    ReplyDelete
  11. அது எனக்கும் சொந்தம் நண்பரே

    ReplyDelete
  12. அது எனக்கும் சொந்தம் நண்பரே

    ReplyDelete
  13. பாடசாலைகள் எல்லா இடமும் ஒரே மாதிரித்தான் கட்டி இருந்திருக்கிறார்கள். அதே மேசை, நாற்காலிகள்.. :)
    //எல்லா வாத்தியார்களின் பிள்ளைகளுக்கும் வாய்த்திருக்கும்..// :)) ஆமோதிக்கிறேன். :)
    பச்சைப் பசேல் என்றிருக்கின்றது உங்கள் கிராமத்தின் படங்கள், அழகு.

    ReplyDelete