Tuesday, January 19, 2016

ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் கையளிப்பு - புகைப்படங்கள்


சொய்லியம்ற் தமிழ் மன்றத்தினால் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் தம்பலகாமத்திலுள்ள அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வு தைப்பொங்கல் தினமான 15.01.2016 அன்று மாலை நான்கு மணியளவில் தம்பலகாமத்திலுள்ள புதுக்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி. ஜெயகௌரி ஸ்ரீபதி அவர்கள் யுத்தத்தினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட பிரதேசமான தம்பலகாமம் கல்வி வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. இன்று பெற்றோர், ஆசிரியர், மாணவர்களின் தீவிர முயற்சியால் அது முன்னேற்றகரமான பாதையினை நோக்கிச் செல்கின்றது.

அண்மையில் வெளியான ஐந்தாம் தர புலமைப் பரீட்சையில் தம்பலகாமம் பிரதேசத்தினைச் சேர்ந்த 20 மாணவர்கள் சித்தியெய்தி இருப்பதும் அதிலொரு மாணவன் திருகோணமலை மாவட்டரீதியில் முன்னிலை பெற்றிருப்பதும் மகிழ்ச்சி தரும் செய்திகளாக இருக்கின்றன. எனினும் விவசாயத்தையும் அதனுடன் தொடர்புடைய கூலித் தொழிலையும் நம்பி வாழும் எமது மக்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இன்னும் இருக்கின்றார்கள். இவர்களில் பெற்றோரை இழந்த குறிப்பாக யுத்தத்தின் பின்னால் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த 61 மாணவர்களுக்கு இன்று சொய்லியம்ற் தமிழ் மன்றத்தினால் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. தேவையறிந்து வழங்கப்படும் இவ்வுதவிக்கு பயனாளர்கள் சார்பில் தனது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார் அவர்.அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வைத்திய கலாநிதி  த.ஜீவராஜ் அவர்கள் உரையாற்றினார். அவர் தனது உரையில், சொய்லியம்ற் தமிழ் மன்றம் சுவிட்சிலாந்து நாட்டின் சூரிச் மாநிலத்தில் உள்ள Affoltern am Alibis  எனும் இடத்தினை அண்டியுள்ள சிறிய கிராமங்களில் வாழும் தமிழ் மக்களால் உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பு அங்கு வாழும் அவர்களின் பிள்ளைகளின் கலாசார விழுமியங்களைப் பேணிப் பாதுகாப்பதோடு 2010 முதல் தாயக மக்களின் சமூக நலன் மேம்பாட்டிற்காகவும் செயற்பட்டு வருகின்றது. அந்த அடிப்படையில் அவ்வமைப்பின் செயலாளர் திரு.பா.ஜெயக்குமார் அவர்களின் அயராத முயற்ச்சியினால் பாடசாலை புத்தகப்பை, அப்பியாச புத்தகங்கள், எழுதுகருவி உள்ளிட்ட ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து திரு.இ.முகுந்தன் (உணவு, ஔடத பரிசோதகர்) , திரு.அன்ரனிப்பிள்ளை, திரு.இராமச்சந்திரன் மற்றும் நன்கொடையாளர்களின் உறவினர்களால்  பயனாளிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திரு.தி.ஸ்ரீபதி (திருகோணமலை மாவட்ட பொறுப்பாளர் - கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை) கலாபூசணம் வே.தங்கராசா, Dr.பாலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


நிகழ்வின் இறுதியில் நன்றியுரை தெரிவித்த தம்பலகாமம் சிவசக்திபுரம் அறநெறிப்பாடசாலை நிறுவனர் திரு.வி.விஜேந்திரன் தனது உரையில் நாம் நன்கொடையாளர்களுக்குச் செய்யும் மிகப்பெரிய நன்றி என்னவென்றால் அவர்களது நோக்கம் நிறைவேறும் வண்ணம் எமது மாணவர்கள் கல்வியில் சிறந்த பெறுபெறுகளைப் பெற்று சமூதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வருவதேயாகும் என்றார் அவர். நன்கொடையாளர்களின் உறவினர்களுடனான சிறிய கலந்துரையாடலுடன் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது. 

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment