Wednesday, May 13, 2015

மாயனின் ‘அவனும் அதுவும்’ (சிறுகதைத் தொகுப்பு)


ஈழத்து இலக்கிய உலகில் தடம்பதிக்கும் இளம் தலைமுறை எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராக ‘மாயன்’ என்னும் புனைப்பெயருக்குள் ஒழிந்து கொண்டிருக்கும் திரு.இரா.ஸ்ரீஞானேஸ்வரன் காணப்படுகிறார். இலக்கியத்துறை மீது மிகுந்த ஆர்வம் காட்டுகின்ற இவர் பத்திரிகைத்துறையில் தனது பங்களிப்பைச் சிறப்பாக செய்துவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையிலிருந்து வெளிவரும் ‘மலைமுரசு’ பத்திரிகையின் ஆசிரியராகிய இவர் 1999 முதல் 2012 வரை தான் எழுதிய எட்டுச் சிறுகதைகளைத் தொகுத்து ‘அவனும், அதுவும்’ என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். அண்மையில் இந்நூலைப் படிக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிட்டியது.

இச்சிறுகதைத் தொகுதியில் எட்டுக் கதைகள் அடங்கியுள்ளன. ‘அவனும் அதுவும்’ ‘ஒரு புயலின் பிறப்பு’ ‘நசுங்கல்’ ‘நிறங்களற்ற கனவுகள்’ ‘ஊமையின் பாடல்’ ‘சபிக்கப்பட்ட நாயின் சாவு’ ‘பரிநிர்வாணம்’ ‘அஞ்ஞாத வாசம்’ ஆகியவை அவைகள்.


கிளிநொச்சி பரவிப்பாஞ்சானைத் தாயகமாகக் கொண்ட இவர் திரு.இராமநாதன், திருமதி நாகமணி ஆகியோர்களின் புதல்வர். முதுமாணி பட்டயக் முகாமைக்கணக்காளர், மலைமுரசின் ஆசிரியர், திருகோணமலை முத்தமிழ்ச் சங்க செயற்பாட்டாளர், திருகோணமலை திரைப்படச்சங்கத் தலைவர் எனப் பல தளங்களில் இயங்கிவருபவர்.


இவர் எழுதிய முதலாவது சிறுகதை ‘சிறகு’ வடக்குகிழக்கு மாகாண பரிசினைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ‘சரிநிகர் சஞ்சுதன்’ என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். நாடகங்களை நெறிப்படுத்துவதிலும்,  நடிப்பதிலும் வல்லமை பெற்றவர். இவர் இயக்கிய நாடகங்கள் மாகாணமட்டத்தில் முதலாவது இடத்தையும், தேசிய மட்டத்தில் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது. 40 கவியரங்குகளுக்கு மேல் கலந்து கொண்ட ஒரு நல்ல கவிஞன்.

ஒரு சிறுகதையின் உருவம், உள்ளடக்கம், மொழிநடை பற்றி பல்வேறு கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அச்சிறுகதை வாசகனின் மனத்தில் விதைக்கும் உணர்வே அச்சிறுகதையின் தரத்தை நிர்ணயிக்கும் அளவுகோலாக அமைந்து விடுகிறது. இக்கருத்தின் அடிப்படையில் இச்சிறுகதைத் தொகுப்பில் அமைந்துள்ள எட்டுக் கதைகளுமே வெவ்வேறு வகையில் நமது மன உணர்வுகளைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இதற்கு ‘மாயனின்’ மொழி நடையே பெரிதும் உதவி செய்துள்ளது எனத் துணிந்து கூறலாம்.சிறுகதை சிறப்பாக அமைவதற்கு மொழி ஆழுமை மிகவும் தேவையான ஒன்றாகும். ‘அவனும், அதுவும்’ சிறுகதைத் தொகுப்பில் மொழிநடை மிகச் சிறப்பாகவே கையாளப்பட்டுள்ளது என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
‘காலத்தின் கண்ணாடி இலக்கியம்’ என்பார்கள். ஈழத்திலும், வியட்நாமிலும் நடந்த போர் அவலங்களை, உள உணர்வுகளை உள்ளம் உருக்கும் வகையில் எடுத்துக் கூறுகின்றன இத் தொகுப்பில் அமைந்துள்ள எட்டுக் கதைகளும்.


இத்தொகுப்பிலுள்ள முதலாவது கதையான ‘அவனும் அதுவும்’ வியட்னாமிய கிராமம் ஒன்றின் போர்க்கால சூழலை வெகுசிறபப்பாக எடுத்துச் சொல்லுகிறது. வன்செயலின் விளைவு எத்தகைய கொடுமையானது என்பதை இக்கதை மூலம் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. மிக இயல்பான நடையில் கவித்துவம் நிறைந்த சிறுசிறு சொற்களால் இக்கதையை வளர்த்துச் செல்லும் மாயனின் பாணி கதைக்கு மெருகூட்டுகிறது.

‘ நிறங்களற்ற கனவுகள்’ யாழ்ப்பாண மண்வாசனை நிறைந்த கதை. தன்னுடைய ஆசைகளை தனது குடும்பத்தோரின் தேவைகளுக்காக தனக்குள்ளாகவே எரித்துக் கொண்டு தியாகம் செய்கிறான் ராம். அவனுடைய தியாக உள்ளம் நம்மை பிரமிப்படையச் செய்கிறது.


ஒரு புயலின் பிறப்பில் வரும் சிறுவனும், அவன் சிந்தனைகளும் யதார்த்த பூர்வமானவை. சபிக்கப்பட்ட நாயின் சாவு யுத்தகாலத்தின் கோரத்தை அப்படியே யதார்த்த பூர்வமாக சொல்லும் அருமையான படைப்பு.

இதயத்தைப் பிழிந்தெடுக்கும் வகையில் ஏழ்மையின் கோரத்தை , வாழ வழியில்லாமல் ஒரு பெண் எடுக்கும் முடிவைச் சொல்கிறது ‘பரிநிர்வாணம்’. வாழ்க்கையில் சகிக்க முடியாத அளவு துன்பங்களை அனுபவித்த ஒரு பெண் எடுக்கும் முடிவை நாசுக்காகக் அது கூறுகிறது. குடும்ப வாழ்க்கையில் வெறுப்புக்களை சம்பாதித்த தந்தை இறந்ததை விடுதலை உணர்வாய்க் கருதும் ஒரு போர்வீரனின் மனதை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது ‘அஞ்ஞாதவாசம்’.

சமூகத்தில் பரவிக்கிடக்கும் எண்ணக் கருக்களைப் பயன்படுத்தி தனது ஆற்றல் மிக்க மொழி நடையால் அவற்றை சிறுகதைகளாகச் செதுக்கித் தந்திருக்கிறார் திரு.மாயன் அவர்கள். தொடர்ந்தும் அவர் இம்முயற்சிகளில் ஈடுபட்டு சமூக நலன் சார்ந்த எண்ணக்கருத்துகளை முயன்று எடுத்து மேலும் நல்ல சிறுகதைகளை தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு தருவார், தரவேண்டும் என வாழ்த்துவோம்.            
கலாபூசணம் வே.தங்கராசா


மேலும் வாசிக்க...
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

 1. சிறுகதை மட்டுமல்ல
  எல்லாப் படைப்புகளுமே
  வாசகனின் உள்ளத்தை
  நிறைவடையச் செய்யும் போது தான்
  வெற்றி பெறுகிறது!
  சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  ReplyDelete