Wednesday, May 06, 2015

கந்தளாய்ப் பூதங்களின் கதை


08.06.1786 இல் தம்பலகாமத்தில் இருந்து கந்தளாய் நோக்கிப் பயணமான ஒல்லாந்த ஆளுனர் அக்காலத்தில் தம்பலகாம மக்களிடையே பூதங்கள் தொடர்பாக இருந்த அச்ச உணர்வு பற்றி விபரித்திருக்கிறார். இந்தப் பூதங்களின் கதை சுவாரிசமானது. என்னறிவுக்கு எட்டியவரை இந்தப் பூதங்கள் தொடர்பான நம்பிக்கைகள் 1985 காலப்பகுதிவரை தம்பலகாம மக்களிடையே பரவலாக இருந்தது. பின்வந்த நாட்களில் புதிதாக உருவான இனவன்முறைப் பூதம் இந்தப் கந்தளாய்ப் பூதங்களின் கதைக்களை வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடவைத்துவிட்டது.

நானறிந்த கந்தளாய்ப் பூதங்களின் கதை இதுதான். கந்தளாய்க் குளத்தில் குளக்கோட்டு மன்னனால் திருப்பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது அப்பணிகளுக்கு ஆடகசௌந்தரி என்னும் அரசியின் ஆணைப்படி உதவிக் கொண்டிருந்தவையே இந்த கந்தளாய்ப் பூதங்கள். இவை மனிதர்களால் முடியாத அனைத்து கடின வேலைகளையும் செய்யும் வலிமை பெற்றவையாக இருந்தன. அவை மிகப்பெரிய கருங்கற்களைக் கொண்டு குளத்தின் அணைகளைப் புணரமைத்தன. அத்துடன் குளக்கட்டுக்குத் தேவையான மண்ணை தம்பலகாமம் வயல்பகுதி ஊடாக அவை எடுத்துச் சென்றன. அவ்வாறு எடுத்துச் சென்ற மண்ணை குளக்கட்டில் கொட்டிவிட்டு திரும்பி வருகையில் களைப்பு மிகுதியால் தம்பலகாமப் பகுதியில் இளைப்பாறின, அவ்வாறு இளைப்பாறும் போது அவற்றின் கூடையில் ஒட்டியிருந்த மண்ணால் உருவான திடல்களே இன்று வயல்களுக்கு நடுவே ஊர்களாக உள்ளன. இவ்வாறு நீண்டு செல்கிறது கந்தளாய்ப் பூதங்களின் கதை.

இது இவ்வாறிருக்க குளத்திருப்பணிகள் முடிவடைந்த பின்னர் குளக்கோட்டு மன்னரின் அமைச்சர்கள் மற்றும் அரச பிரதானிகளுக்கு ஒரு முக்கிய பிரச்சனை உருவானது. வேலை முடிந்துவிட்டது இனிப் பூதங்களுக்கு கொடுப்பதற்கு எந்தவேலையும் இருக்கவில்லை. ஆனால் பூதங்களுக்கு நேரத்துக்கு, நேரம் சாப்பாடும் நாள் முழுவதும் வேலையும் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அவை அருகிலுள்ள கிராமங்களுக்குள் புகுந்து மனிதர்களைத் துன்புறுத்தத் தொடங்கிவிடும். அத்துடன் வேலை முடிந்த பிற்பாடு அவற்றுக்கு தொடர்ந்து சாப்பாடு கொடுப்பதும் இயலாத காரியம். இந்தக் காரணங்களால்தான் அமைச்சர்கள் அச்சத்துக்கு உள்ளானார்கள்.



இந்தச் சிக்கலில் இருந்து விடுபடும் வழியொன்றினை ஒரு புத்திசாலி அமைச்சர் கண்டுபிடித்தார். அவர் அங்கிருந்த வீரர்களுக்கு ஒரு பணிப்புரை வழங்கினார். அதன் படி படைவீரர்கள் காட்டுக்குச் சென்று ஒரு குறித்த பெரிய மரங்களை வெட்டி யானையின் உதவியுடன் கந்தளாய்க் குளத்திற்கு அருகிலுள்ள ஆறுகளில் போட்டனர். இந்த மரங்களில் உள்ள விசேடம் என்வென்றால் அவை நீரில் ஊறியதும் அவற்றின்மேற்பரப்பு மிகுந்த வழுவழுப்புத் தன்மை கொண்டதாக மாறிவிடும் என்பதுதான்.

அடுத்தநாள் காலை  பூதங்கள் வழக்கம்போல அதிகளவிலான உணவுகளை உண்டு முடித்த ஆனந்தங்களுடன் குளக்கரைக்கு வந்து அன்றைய பணியினை எதிர்பார்த்திருந்தன. அந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த பிதான அமைச்சர் புதிதாக வெட்டி ஆற்றில் போடப்பட்டிருந்த மரக்குற்றிகளைக் காட்டி அவற்றினை குளக்கரைக்கு கொண்டுவந்து முடித்தால்தான் குளத்திருப்பணி நிறைவு பெறும், அப்போதுதான் மன்னர் மகிழ்வடைவார் இல்லையேல் கடமை நிறைவேற்றாமைக்குரிய தண்டனைகளைத் தருவார் என அழுத்திக் கூறினார்.

வேலை முடிகிறது என்ற ஆனந்தத்தில் ஆற்றுக்குள் பாய்த பூதங்க்களுக்கு ஒரு பெரிய சவால் காத்திருந்தது. அவற்றின் கைவிரல்கள் மனிதர்களைப்போலில்லாது கட்டையானதும் மழுங்கியதும் ஆகும் அதனால் வழவழுக்கும் தன்மை நிறைந்த அந்த மரக்கட்டைகளை அவற்றினால் பற்றிப்பிடிக்க முடியவில்லை. பலமுறை முயற்சித்து கைகளில் காயங்களைத் தேடிக்கொண்ட பூதங்களால் அவற்றைத் தூக்குவற்கான எந்த உபாயத்தினையும் அன்றைய மாலைப்பொழுது வரை கண்டுபிடிக்க முடியவில்லை. மிகவும் சோர்வாகவும் ,களைத்தும் போயிருந்த அவைகள் பயந்தும் போயிருந்தன. குளப்பணி தங்களால் நின்றுபோனதை அரசர் அறிந்தால் கொடிய தண்டனையை அவர் பூதங்களுக்கு வழங்குவார் என்ற அமைச்சரின் எச்சரிக்கை அவற்றினை கூட்டாக ஒரு முடிவெடுக்க வைத்தது.

அதன்படி அவை சொல்லாமல் கொள்ளாமல் மலைகள் நிறைந்த அடர்ந்த காட்டுக்குள் ஓடி ஒளிந்தன. அவ்வாறு அவை ஓடியபோது ஒன்றன் பின் ஒன்றாகச் சென்றதால் அவற்றின் பாதங்கள் பட்ட இடங்களில் இன்றுவரை புற்கள் முளைப்பதில்லை என்ற நம்பிக்கையும் தம்பலகாமத்து மக்களிடையே பலகாலம் நிலைத்திருந்தது. பூதம் சரிந்த வழி புல்லும் முளைக்காது என்ற பழமொழியை 1985 க்கு முன்னர் எங்கள் ஊரில் இருந்த பல கதைசொல்லிகளிடம் இருந்து கேட்டிருக்கிறேன்.

எனக்குக் கதை சொன்னவர்களில் ஒருவர் தான் கந்தளாய்க் காட்டுக்கு வேட்டைக்காகச் சென்ற பொழுது ஒரு குகையைக் கண்டதாகவும் அங்கு ஆளுயர நெற்பொரிகள் காணப்பட்டதாகவும் கூறினார். நிட்சயமாக இது மனிதனால் உண்ணப்பட்டவை அல்ல என்பதை உணர்ந்த அவர் கட்டுத் துவக்குடன் மாலைவரை பூதங்களுக்காக காத்திருந்ததாகவும், பின் பொழுதுபடத் தொடங்கியவுடன் இரவில் பூதங்களுக்குப் பலம் அதிகம் என அறிந்திருந்ததால் தான் திரும்பிவிட்டதாகவும் கூறினார். இப்போது கந்தளாய்ப் பூதங்கள் பற்றிய பயம் மறைந்து கதைசொல்லி வந்த அவர்மீது ஒரு இனம்பியாத மரியாதை மெல்லமெல்ல உருவெடுக்கச் செய்தது. இவ்வாறு இந்தக்கதை இத்துடன் முடியவில்லை. கதைசொல்லிகளின் தனிப்பட்ட திறமைக்கும், அனுபவங்களுக்கும் ஏற்ப அது நீண்டும், பல கிளைக் கதைகளைக் கொண்டதாகவும் இருந்தது.
த.ஜீவராஜ்
மேலும் வாசிக்க...

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

3 comments:

  1. வணக்கம்
    ஐயா.

    கந்தளாய் குளம் பற்றிய வரலாறு படித்திருக்கேன் நீண்ட நாட்களின் பின்பு தங்களின் பதிவு வழி மீட்டுப்பார்க்க ஒரு வாய்ப்பு.. கிடைத்தமைக்கு நன்றி ஐயா. கந்தளாய் குளத்தை கட்டியது குளக்கோட்ட மன்னன் என்ற வரலாறுதான் 2000ம் ஆண்டுக்கு முன்பு படித்தோம் ஆனால் இப்போது வரலாறு மாற்றப்பட்டு 2ம் அக்போ போதி மன்னன் என்று சொல்லப்படுகிறது... எங்கே போகிறது நிலமை...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. Sandrasegarampillai Jayachandren Kamalalosany JayachandrenMay 7, 2015, 4:31:00 AM

    கந்தளாய்ப் பூதங்களின் கதை கூறச் சந்தர்ப்பம் ஏர்படுதிய அன்பர் ஜீவராஜா அவர்களுக்கு நன்றி. ஆண்டு 1945, எனக்கு வயது 10.கணபதிபிள்ளை அப்பா என்று நாங்கள் அழைக்கும் எம்முடன் இருந்த முதிய உறவினர் வயது 75க்கு மேல் இருக்கும்.சிங்கபூரில் தபால் நிலையயதில் வேலை பார்த்தவர். 1928ல் இருந்து எமது தாயார் வீட்டில் வாழ்ந்து வந்தவர், பலபல கர்ண்பரம்ரைக் கதைகளை எனக்கு சொன்னவரர் அவர் கூறிய கதைகளில் இது ஒன்று.

    பூதம் போன வழி. வேலைகள் பூர்த்தியகி விட்டன.கோவில் திருப்பணிகள் முடிந்து விட்டன.பூதங்களுக்கு இனி வேலை இல்லை.அவற்றை இங்கிருந்து அனுப்பியாகவேண்டும். குளக்கோடன் முடிவுசெய்தார். பூதங்களை வரவழைத்தார். தேக்கு மரங்கள் பலவற்றை வெட்டி அதன் பட்டைகளை நீக்கும் படி கூறினார். பட்டைகளள் நீக்கப்ப்ட மரங்களை கந்தளாய்க் குளதினுள் போட்டு விடும்படி கட்டளை இட்டார். பூதங்களும் அப்படியே செய்தன. இரவாகி வி்ட்டது.பூதங்கள் ஓய்வெடுத்தன.சில நட்கள் சென்றன. ஒரு நாள் காலை குளக்கோட்டன் பூதங்கள மீண்டும் அழைத்தார்.குளத்தினுள் போட்ட மர்ங்களை. நீரிலிருந்து எடுத்து தரையில் போடும்படி கூறினார்.பூதங்களுக்கோ கூழங்க கைகள். பூதங்கள் மரங்களை தண்ணீரிலிருந்து எடுக்க எடுக்க மரங்கள் எல்லாம் வழுக்கி வழுக்கி குளத்துக்குள்ளேயே மீண்டும் மீண்டும் விழுந்தன.இராச கட்டளையை மீறிவி்ட்டோமே என்று பூதங்கள் வருந்தின.வயது முதிர்ந்த பூதம் ஒன்று மற்றையப் பூதங்களைப் பர்து "நாம் இராச கட்டளைய மீறிவிட்டோம் இராசாவை நாம் இனிச் சந்திக்க்க கூடாது நாம் எல்லோரும் போய்விடுவோம்" என்றது. எல்லாப் பூதங்களுக்கும் இது சரியெனப்ப்ட்டது. எல்லாப் பூதங்க்ளும் ஒன்றின் பின் ஒன்றாய்ச் செ்ன்றன.பூதங்களுள் ஒரு முடப் பூதமும் இருந்தது. அதனால் மற்றையப் பூதங்கள் போல் வேகமாகச் மற்றையபப் பூடதங்களுடன் அவற்றைத் தொடர்ந்து செல்ல முடியவில்லை.கந்தளாய்க் குளத்திற்கு வந்த குளக்கோட்டு மன்னன் முடப்பூதத்தைப் பார்த்து " வருடா வருடம் உங்களுக்குப் போடும் மடையில் 1000 வெததிலை 1000 பாக்கு 1000 பழம் 1000 பூ இவற்றிற்கு பபதிலாக பாதி வெற்றிலை பாதிப்பாக்கு பாதிப் பழம் தந்தாலும் சந்தோஷமாக அதனை ஏற்று குளடத்தை நீ பாதுகாக்கவேண்டும்" என்று கட்டடளை இட்டு. "எண்ணூழி சென்று நான் வருவேன்." என்றார்.

    ReplyDelete