Thursday, November 28, 2013

திருகோணமலையிற் சோழர்கள் - பகுதி - 1

இராஜராஜ சோழனின் சிலை ( பிரகதீஸ்வரர் கோவில்)

முதலாம் இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்திகளில் ஒன்று '' கொல்லமும், கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும்...''  என்று சோழர் ஆட்சியில் ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்ட இடங்களில் இலங்கை  ஈழமான மும்முடிச் சோழ மண்டலம் என்ற பிரிவில் அடங்கி இருந்ததைக் குறிப்பிடுகிறது.
இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற பெயரால் ஆட்சியின் தொடக்க காலத்தில் அழைக்கப்பட்ட முதலாம் இராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். 'சோழ மரபினரின் பொற்காலம்'  என்பதோடல்லாமல்  தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலம் என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் இயற்பெயர் "அருண்மொழிவர்மன்". இவனது முப்பதாண்டு ஆட்சிக்காலத்தில் சோழப்பேரரசு ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம், வணிகம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்டது.

இராஜராஜ சோழனின் மகன் முதலாம் இராசேந்திர சோழன் (கி.பி.1012-1044). இராஜராஜ சோழன் தன்னுடைய ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே இராசேந்திர சோழனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டித் தன் ஆட்சிப் பொறுப்புக்களை அவனுடன் பங்கிட்டுக்கொண்டான். இராஜேந்திரன் இளவரசனாக இருந்த பொழுதே சோழர் படைகளுக்குத் தலைமை வகித்தவன். வேங்கி, கங்கை மண்டலங்களுக்கு மகா தண்ட நாயகனாக நியமிக்கப்பட்டவன்.  'கங்கை கொண்ட சோழன்' எனற விருதுப்பெயர் கொண்ட இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு இலங்கை, மாலைதீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் - மலேசியா) சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது.

முதலாம் இராஜராஜன் கி.பி 993 இல் இலங்கையின் மீது படையெடுத்து நாட்டின் வட பகுதியைக் கைப்பற்றிக் கொண்டான். அப்போது தலைநகரமாக இருந்த அனுராதபுரத்தைக் கைவிட்டுப் பொலன்னறுவையை ஜனநாதமங்கலம்  எனப் பெயர்மாற்றி  தலைநகரம் ஆக்கினான்.

இதன் பின்னர் கி.பி 1017-1018 ஆம் ஆண்டில்,முதலாம் இராசேந்திர சோழன் பராந்தக சோழன் காலத்திலேயே தேடப்பட்டுக் கண்டறிய முடியாமல் போன பாண்டிய அரசர்களால் சிங்கள அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் மணிமுடியையும், செங்கோலையும் கைப்பற்றுவதற்காக இலங்கையின் தென்பகுதியான ருகுணு இராச்சியத்தை தன் படைகளை அனுப்பிக் கைப்பற்றினான். இதன் மூலம் முழு இலங்கையையும் சோழர் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தான். இதைத் தொடர்ந்து சோழ நாட்டு மண்டலங்களில் ஒன்றாக மாறிய இலங்கை 'மும்முடிச் சோழ மண்டலம்' எனப் பெயர் பெற்றது.

இராஜேந்திர சோழன் காலத்தில் சோழநாடு
இராஜேந்திர சோழன் காலத்தில் சோழநாடு

ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்த சோழப்பேரரசின் பகுதிகள் கீழ்வருமாறு அமைந்தஇருந்தது.

1. சோழ மண்டலம்
2. இராசராசப் பாண்டி மண்டலம்
3. ஜெயங்கொண்ட சோழ மண்டலம் (தொண்டைநாடு)
4. மும்முடிச் சோழமண்டலம் (இலங்கை)
5. முடிகொண்ட மண்டலம் (கங்கபாடி நாடு)
6. நிகரிலிச் சோழமண்டலம் (நுளம்பாடி,பல்லாரிப்பகுதிகள்)
7. அதிராஜராஜ சோழமண்டலம் (கொங்கு)
8. மலைமண்டலம் (கேரளம்)
9. வேங்கை மண்டலம் (கீழைச் சாளுக்கியம்)

ஒவ்வொரு மண்டலமும் ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. வளநாடு பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. நாடு பல கிராமங்களைக் கொண்டிருந்தது. எனவே சோழ அரசின் மிகச்சிறிய பிரிவு கிராமமாக இருந்தது.

மண்டலங்கள் அரசகுமாரர்கள் அல்லது அரசனின் நெருங்கிய உறவினர்களின் பொறுப்பில் இருந்தன. இப்பதவியில் அமர்த்தப்பட்டவர்கள் மண்டலங்களின் பாதுகாப்பு, ஒழுங்கு ஆகியவற்றைப் பராமரிப்பதுடன், கீழுள்ள நிர்வாகப் பிரிவுகளின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதையும் கடமையாகக் கொண்டிருந்தனர். மேற்படி நிர்வாக முறைகள் சோழர்களால் கைப்பற்றப்பட்ட நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

சோழர்களின் இலங்கை மீதான படையெடுப்பு பொருளாதாரக் காரணங்களுக்காகவும், தமிழகத்தில் தமது ஆட்சியைப் பலப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. எனினும் அவை இலங்கையில் உருவாக்கிய தாக்கம் வரலாற்றாசிரியர் திரு.கிங்ஸ்லி.டி.சில்வா பார்வையில் கீழ்வருமாறு இருக்கிறது.

''சோழராட்சியின் தவிர்க்கமுடியாத தாக்கம் என்னவெனில், இலங்கை மதத்துறையிலும் ,பண்பாட்டுத்துறையிலும் இந்து மரபுகளும், வழமைகளும், திராவிடக் கட்டடக்கலையும், தமிழ் மொழியும் ஊடுருவி  மிகப்பலமான வளர்ச்சி பெற்றதேயாகும்'' என்கிறார்.

இலங்கை முழுவதையும் ஆண்ட சோழர்களின் செல்வாக்குப்பெற்ற பிரதேசமாக திருகோணமலை இருந்ததை வரலாற்றாதாரங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. எனவே திருகோணமலையில் சோழர்கள் பற்றிய விரிவான ஆராய்தல் அவசியமாகிறது.

திருகோணமலையில் சோழர்கள்
திருக்கோணேஸ்வரம்
திருக்கோணேஸ்வரம்

சுமார் 95,000 சோழப்படையினரைக் கொண்டிருந்த ஈழமான மும்முடிச் சோழ மண்டலத்தில் ஜனநாதமங்கலம் என்கின்ற பொலநறுவை தலைநகரமாக இருந்தபோதிலும் திருகோணமலை, கந்தளாய், பதவியா ஆகிய மூன்று நகரங்களை இணைக்கும் முக்கோணப் பகுதியே அவர்களுடைய வணிக , பண்பாட்டுக் கலாச்சார செயற்பாடுகள் நிறைந்த பகுதியாக இருந்தது.

திருகோணமலைத் துறைமுகம் பண்டைக்காலத்திலேயே புகழ்பெற்றிருந்ததோடு தமிழக வணிகர்களுக்கு பயனுள்ள துறைமுகமாகவும் விளங்கிது. அதேவேளை தென்கிழக்காசியப் பிரதேசத்தில் திருகோணமலைத் துறைமுகத்தின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்திருந்த சோழர்கள் தமது கடாரம், ஸ்ரீ விஜயம் நோக்கிய படையெடுப்புகளுக்கு ஒரு தளமாக இதனைப் பயன்படுதுவதன் மூலம் வங்காள விரிகுடாவில் தமது வணிக ஆதிக்கத்தை நிலைநிறுத்த முனைந்தனர்.

மேற்கூறிய காரணங்களோடு திருகோணமலையில் இருந்த  ஆதிக்குடிகளின் அரசுகள் சிற்றரசுகளாக் காணப்பட்டதே அன்றி ஒரு இராட்சியமாக உருவாகி இருக்காமையும், இந்து சமுத்திரத்தின் இரு பக்கங்களிலும் ஒரே பண்பாட்டுடைய மக்கள் வாழ்ந்தமையும் திருகோணமலையில் சோழர்கள் தங்களது பலமான நிர்வாக அலகுகளை நிறுவுவதற்குக் காரணங்களாக அமைந்தது எனலாம்.

எனைய மாவட்டங்களை விட அதிகளவில் கிடைத்த சோழர்கள் தொடர்பான தொல்லியல் சான்றுகளும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் வரலாற்றுத் தகவல்களும் இதையே நமக்கு உணர்த்தி நிற்கின்றன. இவற்றோடு  ஈழமான மும்முடிச் சோழ மண்டலத்தின் அதிகாரங்களைக் கவனிக்க அனுப்பப்பட்ட பிரதிநிதியான சோழ இலங்கேஸ்வரன் பற்றிய இரு கல்லவெட்டுக்களின் ஆதாரங்களும் திருகோணமலையின் கந்தளாய், மானாங்கேணி ஆகிய இடங்களில் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

சோழர் ஆட்சியில் ஒவ்வொரு மண்டலமும் ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன எனப்பார்த்தோம். அதன் அடிப்படையில் ஈழமான மும்முடிச் சோழ மண்டலத்தில் இதுவரை ஆறு வளநாடுகளே அடையாளங் காணப்பட்டுள்ளன. அவற்றுள் அருண்மொழித்தேவ வளநாடு   (மாதோட்டமான இராஜராஜபுரம் ) ,நிகரிலிச் சோழ வளநாடு என்பவை தவிர்த்து மிகுதி நான்கு வளநாடுகளும் திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவையாவன,

1. இராஜேந்திர சோழவளநாடு - திருகோணமலையும் ,கந்தளாயும் உள்ளடங்கிய பகுதி. இது மும்முடிச் சோழ வளநாடு, இராஜவிச்சாதிர வளநாடு என்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டது.
2. விக்கிரம சோழ வளநாடு என்னும் கணக்கன் கொட்டியாரம் ( மூதூரின் ஒரு பகுதி)
3. இராஜராஜ வளநாடு என்னும் மாப்பிசும்பு கொட்டியாரம் ( மூதூரின் மற்றொரு பகுதி )
4. இராஜேந்திர சிங்க வளநாடு - மானவத்துளா அல்லது வீரபரகேசரி வளநாடு என்றழைக்கப்பட்ட இப்பிரதேசமே பின்னாட்களில் கட்டுக்குளம் பற்று என வழங்கப்பட்டது. இங்குதான் இராஜராஜப் பெரும்பள்ளி இருக்கிறது.
த.ஜீவராஜ்

தொடர இருப்பது .... இராஜேந்திர சோழவளநாடு 
புகைப்படங்கள் )


மேலும் வாசிக்க
சோழ இலங்கேஸ்வரன் காலத்து திருகோணமலை மானங்கேணிச் சாசனம் -  புகைப்படங்கள் 
சோழ இலங்கேஸ்வரனும், மச்சகேஸ்வரமும் - புகைப்படங்கள் 
திருகோணமலையில் சோழர்களின் மெய்க்கீர்த்திகள் - புகைப்படங்கள் ஆதாரங்கள்

1.  சோழர்கள் - K.A. நீலகண்ட சாஸ்திரி  2012
2. இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பேராசிரியர்.சி.பத்மநாதன்.2006.
3. வரலாற்றுத் திருகோணமலை - கனகசபாபதி சரவணபவன் 2003
4. தமிழ் விக்கிப்பீடியா

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

8 comments:

 1. வணக்கம்

  வரலாற்றுப்பதிவு மிக அருமையாக உள்ளது.. GAQ இல் ஒரு பாடம் படித்த மாதிரி மிக அருமையாக எழுதியுள்ளிர்கள் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்........

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. Really very useful... waiting for next issue

  ReplyDelete
 3. சிறப்பான தகவல்கள்.... தொடர்கிறேன்...

  ReplyDelete
 4. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
 5. வணக்கம்
  வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 6. மிக்க நன்றி தங்கள் கருத்துரைகளுக்கு.

  ReplyDelete
 7. தங்களுடைய படைப்புக்கள் அருமையாக உள்ளன. காலத்தின் தேவை கருதி இவை அனைத்துமே பாதுகாக்கப்பட வேண்டும். நன்றி.

  ReplyDelete
 8. We're a bunch of volunteers and starting a
  new scheme in our community. Your website offered us with valuable information to
  work on. You have done an impressive process and our entire group can be grateful to you.

  ReplyDelete