Tuesday, December 08, 2009

வீடு - ஞாபகச்சிதறல்


புலம் பெயர்ந்தவர்கள், இந்திய ஏதிலி முகாம்களில் இருப்பவர்கள் , எங்கென்றும் தெரியாமல் காணாமல் போனவர்கள் , நாடுகடக்கையில் சிறைப்பட்டுப் போனவர்கள் என்று நீண்டு செல்லும் வகைப்பாடுகளில் நாங்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களாக கருதப்படுகிறோம். பெயரில் இத்தனை பிரிவுகளிருந்தாலும் ஒருவகையில் நாங்களனைவரும் வீட்டில் இருந்து பிரிக்கப்பட்டவர்கள் என்னும் வகைப்பாட்டில் வருபவர்கள்.

இடம்பெயர்ந்து பதினேழு வருடங்களுக்குப்பின் திருத்தப்பட்ட எமது வீட்டின் முன்றலில், இரவில் நிலவொளியில் குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்திருந்து நினைவுகளை மீட்டோம். இனப்பிரச்சனை , எதிர்காலம் , சமகாலப்பிரச்சனைகள் , இலக்கியச் சொல்லாடல்கள் என்றெல்லாம் தீர்ந்துபோய் தனியே வீட்டில் வந்து நின்றது.

வீடு...வீடு ..வீட்டைப்பற்றியே பேச்சாக இருந்தது. சிறுவயதில் அதுவொரு பெரிய உலகமாக இருந்தது. நாங்கள் அதிலிருந்து மெல்ல மெல்ல வெளிவரவில்லை. திடீரெனப்பிரிக்கப்பட்டோம். ஒருவேளை அதன்மீதுகொண்ட அதீத அன்புக்கு அதுதான் காரணமோ தெரியவில்லை.

நடுநிசி கடந்த அந்த இரவு இன்றும் நெஞ்சில் இருக்கிறது. பிறந்துவளர்ந்த அந்த வீட்டை விட்டு ஊர்விட்டோடிய அவலத்தின் ஒவ்வொரு கணமும் நினைவிருக்கிறது. நான் பன்னிரு வயதில் பாவித்த சிறியரக துவிச்சக்கர வண்டியின் கைபிடிகள் இரண்டிலும் பசளைப் பையில் சமையலுக்குரிய முக்கிய பொருட்கள் கட்டப்பட்டிருந்தது. பின்னிருக்கையை வானொலிப்பெட்டி நிறைத்திருந்தது. வண்டியை உருட்டி நடக்கையில் பாரத்தின் பழு தெரியாமல் பார்த்துக்கொண்டது உயிர் வாழ்தல் பற்றிய பயம்.

குழந்தைகள் ,முதியவர் என எந்தப்பாகுபாடும் இல்லாமல் குளிர் நிறைந்த அந்த இரவில் கைக்குக் கிடைத்த துணிகளால் எங்களை மூடிக்கொண்டு தெருவில் நடந்துகொண்டிருந்தோம். துப்பாக்கி வேட்டுக்களாலும் , எறிகணை வீச்சுக்களாலும் நிறைந்திருந்தது வானம். அழுகுரல்களுக்கும் , ஓலங்களுக்குமிடையில் தெளிவாக கேட்டுக்கொண்டிருந்தது ' எப்படியாவது தப்பிப் போயிடணும்' என்ற என் ஆழ்மன ஏக்கம்.

அதிகாலை நேரம் பயணத்தின் பாதைகளைக் களைப்பும் , தேங்கியிருந்த நித்திரையும் மூடியது. சாதாரணமாக மரத்துக்குக்கீழ்நின்று விளையாடினால் பேசும் அம்மாவும் அப்பாவும் ஒரு மரத்தின் கீழ் துணிவிரித்து எங்களை நடுவில் விட்டு இருகரையிலும் படுத்துக் கொண்டது ஆச்சரியம் தந்தது. நேரம் செல்லச்செல்ல அங்கிருந்த மரங்களுக்குக் கீழுள்ள இடங்களுக்கான போட்டியும் கூடிச் சென்றது. துணிபோர்த்து நடுங்கிக்கொண்டே வந்த ஒவ்வொரு உருவங்களும் இடம் பிடித்துப் படுத்துக்கொண்டன.

காலைநேரம் திடுக்கிட்டு விழித்துக்கொண்டபோது எனக்குமுன்னமே விழித்துக் கொண்டவர்கள் அவசரத்தில் விட்டுவந்த உறவுகள் ,உடமைகள் தொடர்பில் அழுது கொண்டிருந்தார்கள். திரும்பிக் காலடியில் சுருண்டு படுத்திருந்த எங்கள் வீட்டுநாயினைப் பார்த்தபோது மனத்துக்குள் பெரும் குற்றவுணர்வு தோன்றியது .அவசர அவசரமாக ஓடிவரும் போது எங்களால் தனித்துவிடப்பட்ட நாய் இப்போது தானாகவந்து சேர்ந்திருந்தது.

விட்டுவந்தது மட்டுமல்ல அந்த நிமிடம்வரை அது பற்றி எந்த உணர்வுமில்லாமல் இருந்திருக்கிறேன் என்று நினைக்கையில் பெரும் அவமானமாக இருந்தது. உயிர் பிரிதல் பற்றிய பயம் உறவுகள்மீது கொண்ட பற்றுக்களில் எவ்வளவு பிளவுகளை உருவாக்கிவிடுகிறது என்பது அப்போது புரிந்தது.

இப்படித்தான் ஆரம்பித்தது எங்கள் உயிர்காத்தலுக்கான ஓட்டம். இதில் எத்தனையோ இழப்புக்கள் ,வலிகள் ,வேதனைகள் . இவைஅனைத்தையும் தாண்டி எந்தவூர் சென்றாலும் தட்டிவிட முடியாதபடி ஒட்டி இருந்து வருகிறது வீட்டைப் பற்றிய நினைவுகள்.

வேலைவாய்ப்புக்காக ,வசதிக்காக ,உயர்கல்விக்காக என்று எத்தனையோ காரணங்களுக்காக உலகில் மனிதர்கள் தங்கள் சொந்தவீட்டைவிட்டு பிரிந்து செல்கிறார்கள். ஆனால் வன்முறை காரணமாக தம் சொந்த வீட்டை விட்டு வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டவர்களின் துயரம் தனியானதாக ,தணியாததாக இருக்கிறது.

மருத்துவபீட விடுமுறையின் போது யாழில் உள்ள பத்திரிகையொன்றில் வெளிவந்த என் கவிதையை ( சிறைவைக்கப்பட்ட வீடு ) நான் திரும்பியவுடன் பத்திரமாக எனக்குத் தந்த நண்பன் கலங்கிய கண்களுடன் தனது சிறுபிராயத்தில் சொந்த ஊரான காங்கேசன்துறையில் இருந்து பிரிக்கப்பட்ட நாளை நினைவுகூர்ந்தபோது தொண்டைக்குழி வரண்டு வார்த்தைகள்வர சிரமப்பட்டது இருவருக்கும். இன்றுவரை உயர்பாதுகாப்பு வலயத்துள் சிறையிருக்கிறது அவர்வீடு.

நாங்கள் படிக்கும்போது ஒருவீட்டில் மதிய உணவுக்கு ஒழுங்கு செய்திருந்தோம். உணவுதயாரிப்பவரின் கணவர் மிதிவெடி மூலம் காலையிழந்தவர். அவர் தனது சொந்தவீட்டைப் பார்க்கப்போனபோதுதான் இந்த அனர்த்தத்துக்குள்ளாக வேண்டியிருந்தது என அறிந்திருந்தேன். தற்செயலாக அவரும்,நானும் அவரது சொந்த வளவில் சந்திக்கநேர்ந்தபோதுதான் பார்த்தேன். அங்கு வீடு என்றொன்றே இல்லை. சில சுவர்களும் எஞ்சியிருக்கும் கதவின் சில நிலைகளும் அங்கு வீடொன்று இருந்ததை ஆதாரப்படுத்தி இருந்தது.

அண்மையில் இடம்பெயர்ந்து பின் சொந்தவூர் திரும்பிய உறவொன்று தன் சொந்த வீட்டைப்போய்ப்பார்த்துவிட்டு வந்தபின் ஒடுங்கிப்போய் சுவரோடு ஒட்டியிருந்தது இன்னும் கண்ணுக்குள் இருக்கிறது. இப்படி நீண்டுகொண்டு போகிறது வீட்டை பிரிதவர்கள் பற்றிய நினைவலைகள்.

தெருவில் பயணிக்கும்போது கண்ணில் படும் வன்முறை நிமிர்த்தம் உடைந்த எந்த வீடும் , அதிலிருந்தவர்களின் வேதனைகளை ஞாபகப்படுத்தும் அதேவேளை , விரைவில் வீட்டில் இருந்து பிரிக்கப்பட்டவர்கள் அனைவரும் மீள்திரும்ப வேண்டும்மென மனம் ஏங்குவதைத் தவிர்க்கமுடியவில்லை.

த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

3 comments:

  1. உண்மைதான் அண்ணா! உயிர்பிரிதலின் பயம் எம்மை எத்தனை தூரம்வரை கொண்டுசென்றாலும் எம் உணர்வோடு பின்னிப்பிணைந்த வீடுமட்டும் மறப்பது இல்லை.
    நீங்களாவது இப்போது உங்கள் சொந்த ஊரிற்கு சென்று வாழ்கிறீர்கள்/வாழக்கூடியதாக இருக்கிறது. ஆனால் எங்களால் இன்னும் முடியவில்லை.
    ஆம் எனது ஊர் பிறப்பாள் ஆலங்கேணியாக இருந்தாலும் இரண்டு வயது முதலே வளர்ந்ததும் வாழ்ந்ததும் 'உப்பாறு' எனும் ஊர். அறிந்து இருப்பீர்கள் 'கொட்டியாரக்குடா' என்ற கங்கையின் கடல்சங்கமம் அமைந்த அதே ஊர்தான். திருகோணமலை துறைமுகத்தின் பின்பக்கமாக அமைந்த ஊர் அது. கடல் வளம்,தென்னை வளம், மரமுந்திரிகை தோட்டங்கள் ,சற்று பின்னால் தோட்ட மண்ணும் வயல் நிலமுமாக அமைந்த அற்புத ஊர் அண்ணா அது!
    சுற்றிவர தென்னையும்,முந்திரியும் நிற்க நடுவே வீடு. முன்னால் 100 அல்லது 200 மீற்றர் தூரத்தில் பிரதான வீதியும் கடற்கரையும். அந்த வீதிதான் இப்போது எல்லோராலும் பேசப்படுகிற 'கிண்ணியா- மூதூர் வீதி'. அதாவது உப்பாற்றுக்குல் நுழைந்து செல்லும்போது கடல் ஊருக்குல் வரும் ஒரு பகுதி உண்டு.அதை 'முறிஞ்சாறு' என்பார்கள்.அது இப்போது தற்காலிகமாக இல்லை என்று நினைக்குறேன்.அதை கடந்ததும் எமது வீடு வரும்.
    அருமையான சூழல் அண்ணா!சில நேரம் நிலவொளியில் கடற்கரையில் தூண்டில் போடும் அப்பாவோடு அருமையாய் கழியும் இரவுகள். இப்போது வீடும் இல்லை அப்பாவும் இல்லை. வீட்டு முற்றத்தில் இருக்கும் கிணறு மட்டும்தான் இப்போதும் இருக்குறது.அவ்வழியால் சென்றுவரும் சந்தர்ப்பம் கிடைத்தால் அவதானியுங்கள்.
    இவற்றைவிடவும் உங்கள் ஆக்கத்தால் என் மனதை தொட்ட இன்னுமொரு விடயம் எமது வீட்டுச் செல்லப்பிராணி 'ஜுலி' எங்கின்ற பெயரை உடைய நாய். 1990 களின் (எனக்கு வயது 8) இடப்பெயர்வில் கங்கைதுறை, இறாக்குழி,கண்டல்காடு,மணலாறு,சலப்பையாறு என்று ஊர்கள் காடுகள் தோறும் அலைந்து இறுதியாக உங்கள் ஊர்வந்தோம். அதுவரைகும் அதுவும் எங்கலோடுதான். 'ஷெல்'க்கு பயந்து குழிகலுக்குல் நாங்கள் பதுங்கும்போது அதுவும் பதுங்கும். கடைசியில் தம்பலகாம பாடசாலையில் இருந்து எங்களை 'கிலர்ப்பன்பேர்க' என்ற முகாமிற்கு ஏற்றியபோது அதைப்பிரிய வேண்டி ஏற்பட்டது.
    மிகவும் நன்றி அண்ணா! அன்மைக்காலமகாக உங்கள் வலைப்பூ ஊடாக எமது பலய, பசுமயான, கசப்பான அனுபவங்கள் எல்லாவற்றையும் அசைபோடக்கூடியதாக இருக்கிறது. இது கொஞ்சம் நீண்டு விட்டாலும் மிக நீண்ட நாட்களாக எனது மனதில் இருந்ததை என்னைப்போல உணர்வுள்ள உங்களிடமும், உங்களின் ஊடாக மற்றவருடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. இதை ஏற்பீர்கள் என நம்புகிறேன்.

    நன்றி
    -திருமலை விக்னா-

    ReplyDelete
  2. நீண்ட நாட்களின் பின்னரான என் பகிர்வு. மனதினை நெகிழ வைத்தது எழுத்துக்களுடன் கலந்த உண்மை நிலை.இன்னும் எத்தனையோ மக்களின் ஆதங்கமும் வேதனையும் இன்றும் தமது சொந்த
    வாழ்விடங்களின் மீது தான்.

    ReplyDelete
  3. வலைமனை.இதுவும் நமக்கொரு வீடு. நம் சிந்தனைக் குழந்தைகள் பிறந்து தவழ்கிற வீடு. நட்புக்கள் வருகிற வீடு. ஏதோ காரணத்தால் ஒரு நாள் நம் வலை மனைக்கு வர முடியாவிட்டால் என்னமோ தொலைச்சா மாதிரி இருக்கில்ல.

    பரம்பரையா வாழ்ந்து, நாம விளையாடி, வளர்ந்து நம் விருப்பத்தில் எங்கயோ பிழைப்புன்னு போனாலே வீடு கவனம் வந்திச்சோ எல்லாத்தையும் கடாசிட்டு வந்து ஒரு ஒரு செங்கல்லா தொட்டுத் தடவி, ஒரு ஒரு செடியா பார்த்து பேசி கொஞ்சி, நம் மண்ணின் சில்லிப்பில் கால் பதிய நிக்கமாட்டமான்னு ஏங்கிப் போகுமில்லையா?

    அது மறுக்கப்பட்ட ஒரு இதயத்தின் வலி. ஆறுதல் சொல்ல முடியாத வலி. அதை விட ஆயிரம் வீடு வாங்கினாலும் அத்தனையும் கொடுத்து விடுகிறேன். இடிந்து சிதிலமானாலும் பரவாயில்லை. அந்த மண் எனக்கு வேண்டும் என என்றும் வலிக்கும் வலி. ஜீவ நதியில் ஜீவராஜ் வீடு என்ற இடுகையில் அந்த வலியை நாம் உணர வைக்கிறார். வலைச்சரத்துக்காக நான் தேடியதில் கிடைத்த இன்னோரு வைரம் இவர் எழுத்து.

    http://blogintamil.blogspot.com/2010/01/blog-post_08.html

    ReplyDelete