Sunday, March 08, 2009

‘ரங்கநாயகியின் காதலன்’ அணிந்துரை

Thampalakamam
முழு நிலவிற்கு மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கின்ற செயல் இது என்றே எனக்குப் படுகின்றது. முற்றிலும் பொருத்தமான முறையில், பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷம் என்று வருணிக்கப்பட்டுள்ள தம்பலகாமம் வேலாயுதம் ஐயா எந்தளவுக்கு மண்ணின் மைந்தனாக வாழ்ந்தார் என்பதை அவரது எழுத்துலக வாழ்க்கை தெளிவாகக் காட்டுகின்றது.

இதனை முன்னிட்டே அவர் வடகிழக்கு மாகாண தமிழ்மொழித்தின விழாவின்போது அதன் சிறப்பு மலர் கவின்தமிழ் 2004இல்
குறிப்பிடப்பட்டு பாராட்டப்படவும் செய்தார். ஈழத்து இலக்கியச் சோலையும் தன் பங்கிற்கு 2004இல் நூல்வெளியீட்டு விழாவொன்றின்போது அவரை கௌரவித்து பெருமைப் படுத்தியமையும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளே.

நாம் வாழுகின்ற இந்த சமகாலப் பிரச்சினைகளுக்குள் எமது மண்ணின் பெருமைகள் சூழ்ச்சிகளின் ஓட்டத்தில் மழுங்கடிக்கப்படவும், மறைத்து மறக்கடிக்கப்படவும் செய்ய முயற்சிகள் எத்தணித்துப் பாய்கின்ற சூழலில், பழம்பெரும் வரலாற்றைக் கொண்ட தம்பலகாமம் மண்ணின் பெருமைகளை சரித்திர ஆதாரங்களுடன் கற்பனை வடிவங்களினூடாக நிலைநிறுத்தும் வேலாயுதம் ஐயாவின் அரு முயற்சிதான் இந்த ரங்கநாயகியின் காதலன் குறுநாவல்!

இதில் தம்பலகாமத்தின் பெருமைக்குரிய குடமுருட்டி ஆறு தொடக்கம் உதயனை யானை போட்ட கல் வரையிலான சரித்திர முக்கியத்துவங் கொண்ட வரலாற்றை எதிர்காலச் சந்ததிக்கு எழுதி வைத்து இருக்கின்றார். எழுதி வைத்திருக்கின்றார் என்பதை விட ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றார் என்றே கூற வேண்டும். இதற்காக அவருக்கும், அவரை மீள வெளிப்படுத்தி, பொருத்தமான காலகட்டத்தில் இக்குறுநாவலை அரங்கேற்றியமைக்காக ஈழத்து இலக்கியச் சோலையின் சித்தி அமரசிங்கம் ஐயா அவர்களுக்கும் தம்பலகாமம் நன்றிக் கடன்பட்டுள்ளது.

இசையில் ஈடுபாடும், ஆர்வமும், ஆற்றலும் கொண்ட அவர் தன்னைப் புறத்தெறிந்து பாத்திரங்களைப் படைத்தமை பாத்திரங்களுக்கும், கதைக்கும் தக்க பின்புலத்தைக் கொடுக்கின்றது என்றே கூறவேண்டும். அதுமட்டுமல்ல இதன் கதாபாத்திரங்களுக்கும் ஒரு அசல் தன்மையையும் கொடுக்கின்றது. சுதேசவைத்தியத்தில் இவருக்கிருந்த பரிச்சயமும் அங்கங்கே வெளிப்படவே செய்கின்றது.

அரசன் ஆண்டவனாக கருதப்பட்ட அரசியல் வரலாற்றுக் காலத்தில், அவன் சாதாரண குடிமகனுடன் ஒன்றிணைவதைத் தடுக்க தடுப்புக்கள் உருவாக்கப்பட்டிருந்த காலகட்டத்தில், நாட்டுக்காகவும் குடிக்காகவும் அர்ப்பணிக்கப்படுவதுதான் அரச குலத்தவரது கடமை என்று வலியுறுத்தப்பட்டிருந்த காலகட்டத்தில் சாதாரண குடிமகன் முதற்கொண்டு அரச குடும்பத்தவரது தனிமனித ஆசைகள், உணர்வுகள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டது என்பது உதயன் மூலமும், ரங்கநாயகி மூலமும் நாவலில் ஞாபகப்படுத்தப் படுகின்றன.

ஒரு பெண்ணானவள் சுதந்திரமுள்ளவளாக வாழவேண்டும், வளர்த்தெடுக்கப்படவேண்டும் என்கின்ற தனது சிந்தனை வேலாயுதம் ஐயா ரங்கநாயகி மூலம் நடைமுறைப்படுத்திப் பார்க்கின்றார்.

எப்படியெல்லாமோ வரலாறு படைத்து வாழ்ந்திருந்த நாம்- எம் வாழ்வையே வரலாறாக்கியிருந்த நாம் - சரித்திரம் மீளப்பாயும் இக்காலகட்டத்தில் இத்தகைய நாவல்களின் மூலம் எமது கடந்த காலத்தை ஒருமுறை மீளப்பார்த்து நெஞ்சில் உரம் பெறவேண்டியது காலத்தின் தேவை! அதற்குத் தகுந்த ஒரு வரலாற்றுக் காவியமாக ரங்கநாயகியின் காதலன் குறுநாவலை எடுத்துக் கொள்ளலாம்.

இங்கே இன்னுமொரு கருத்தொற்றுமையைக் குறிப்பிடுவது அவசியம் என்றே எனக்குப் படுகின்றது. திருகோணமலை மண்ணின் மூலை முடுக்குகளையெல்லாம் அலசி ஆராய்ந்து அதன் அருமை பெருமைகளையெல்லாம் ஆவணப்படுத்தி - அரங்கேற்றி - வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்கிற கலாவிநோதன் சித்தி அமரசிங்கம் அவர்களது வேணவாவும், எழுத்தாளர் தம்பலகாமத்து வேலாயுதம் அவர்களது ~மண்ணை வரலாற்றில் பதித்து விடும்| ஆசையும் இந்தக் குறுநாவல் மூலம் ஒன்றிணைக்கின்றன. தம்பலகாமம் வேலாயுதம் ஐயா மட்டுமல்ல அவரது ஆக்கங்களும்கூட காலம் காலமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷமே!

ஆனந்தா AG.இராஜேந்திரம்
மட்டக்களப்பு
04.12.2004

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment