Wednesday, March 11, 2009

கோவிந்தபிள்ளை வல்லிபுரம் சோமசுந்தரம்


ரங்கநாயகியின் காதலன் குறுநாவல்
சமர்ப்பணம்
தம்பலகாமம் தந்த திருக்கோணமலையின் வயலின் இசைக் கலைஞர்
சங்கீத பூஷணம் வல்லிபுரம் சோமசுந்தரம் 

திருக்கோணமலை மாவட்டத்தின் இசைத்துறையில் குறிப்பாக வயலின் வாத்திய இசையில் வறட்சியை போக்கிய தம்பலகாமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட திருகோணமலையின் முதல் வயலின் இசைக்கலைஞன் திரு. வல்லிபுரம் சோமசுந்தரம் என்றால் அது தம்பலகாம மண்ணுக்கே பெருமை.

இவர் வயலின் கலைஞராக திருகோணமலையில் கால்பதிக்குமுன் இங்கு நடைபெற்ற கதாப்பிரசங்கம், இசைக்கச்சேரிகள், போன்ற இசைநிகழ்ச்சிகளுக்கு வெளிமாவட்டங்களில் இருந்துதான் பக்கவாத்தியக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டிருந்தார்கள். சோமசுந்தரம் அவர்களின் வருகைக்குப்பின் இந்த வறட்சி நீக்கப்பட்டுள்ளதென்றால் அது மறுக்கப்படவோ, மறைக்கப்படவோ முடியாததொன்றாகும்.
வல்லிபுரம், ராஜாத்தி அம்மையார் தம்பதிகட்கு 1928ஆம் ஆண்டு மாசிமாதம் 17ஆம் திகதி பிறந்தார். இவருக்கு ஐந்து சகோதரர்கள். சிறுவயதிலேயே தந்தையை இழந்த இவர், சிறிய தந்தையரான கோவிந்தபிள்ளை, சிறியதாய் துளசி அம்மாள் என்போரின் ஆதரவில் வளர்ந்தார்.

திரு. சோமசுந்தரம் அவர்கள் தன் ஆரம்பக்கல்வியை யாழ், கொழும்புத்துறையிலும், பின் திருகோணமலை அனுராதபுரச் சந்திப் பாடசாலையிலும் (இன்றைய தி/ விபுலானந்தா கல்லூரி, தம்பலகாமம் மகாவித்தியாலத்திலும் கற்று சிரேஷ்ரதராதரப் பரீட்சையில் சித்தியடைந்தார்.

அதன்பின் 1952இல் இந்தியா சென்று,அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் சேர்ந்தார். சித்தூர் சுப்பிரமணியம்பிள்ளை அவர்களின் தலைமையின் கீழ் பேராசிரியர் கும்பகோணம் ராஜமாணிக்கம் போன்றோரின் கற்பித்தலில் தன் இசைப்பயிற்சியைப் பெற்றுக் கொண்டார். 1955ஆம் ஆண்டுவரை இசைகற்று சங்கீதபூஷணப் பட்டத்தோடு தன் தாய்மண்ணை வந்தடைந்தார்.

என்னதான் அவர் படித்துப்பட்டம் பெற்றபோதும் அவரிடத்தே உள்ள விளையாட்டுத்தனமும் பொறுப்பின்மையும் அவரைவிட்டுப் போகவில்லை. பட்டம் பெற்றும் ஒருவருடம் வீணே கழிந்தது. இவரை ஆசிரியர் சேவையில் சேர்த்துவிட இவரது சிறியதந்தை வேலுப்பிள்ளை பெரிதும் பாடுபட்டார்.

1957 தை 1ஆம் திகதி தம்பலகாமம் வித்தியாலயத்தில் தற்காலிக ஆசிரியராக நியமனம் பெற்றார். அதன்பின் 1958- தை-20இல் மட்.தமிழ் பயிற்சிக் கலாசாலையில் சேர்க்கப்பட்டார். பயிற்சியை முடித்துக் கொண்டு அதேவருடம் மார்கழி 31இல் வெளியேறினார். அதன் பின் உதவி ஆசிரியராக, பதுளை எற்றன்பிற்றிய அரசாங்க தமிழ் கலவன் பாடசாலை, பசறை மத்திய கல்லூரி, தம்பலகாமம் புதுக்குடியிருப்பு தமிழ் கலவன் பாடசாலை, திருகோணமலை மெதடிஸ்மிசன் பெண்கள் ஆங்கிலப் பாடசாலை, திருகோணமலை ஸ்ரீ இராமகிருஷ்ணமிசன் இந்துக் கல்லூரி, மீண்டும் தம்பலகாமப் புதுக்குடியிருப்பு தமிழ் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் கடமையாற்றினார்.

இந்தக் காலப்பகுதியில் இவர் தட்சணகான சபையில் வயலின் இசை ஆசிரியராகக் கடமையாற்றியதோடு, திருகோணமலை மாவட்டத்தின் இசை நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கு கொண்டு திருகோணமலையின் இசைவளர்ச்சிக்குத் தன் வயலின் இசையால் மன நிறைவான பங்களிப்பைச் செய்துள்ளார்.

இசைத்துறையில் மட்டுமன்றி இலக்கியத்திலும் இவருக்கு ஈடுபாடு இருப்பதாக அறியக் கிடக்கிறது. இவர் முருகன்மேல் நிறைந்த பக்தி கொண்டவர். சோமசுந்தரர் தனது, தாய்மாமன் பளனியப்பன் மாரிமுத்துவின் மகள் விஜயலக்ஷ்மியை 01.09.1958இல் திருமணம் செய்து கொண்டார். விஜயலெட்சிமியின் தாயார் யாழ்ப்பாண வதிரியைச் சேர்ந்த தாமோதரப்பிள்ளை விசாலாட்சி அம்மையாவார்.

தன் மனைவியின் குரல் இனிமையைக் கண்டு, மனைவிக்கு இசையைக் கற்றுக்கொடுக்கத் தவறவில்லை. இவர்களது தாம்பத்தியத்தின்பயனாய், நித்தியலட்சுமி, பங்கயலட்சுமி, நிமலேந்திரன், விமலேந்திரன், திவ்ஜலட்சுமி ஆகிய ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்.

தம்பலகாமத்தின் சூழலில் வாழ்ந்த இவர் சிறந்த வேட்டைக்காரனாகவும் இருந்தார். அதில் பெருமகிழ்வும் கொண்டார். 1968ஆம் ஆண்டு சித்திரை மாதம் 2ஆம் நாள் வேட்டைக்குச் சென்ற இவரை, காலன் சர்ப்ப ரூபத்தில் வேட்டை ஆடிவிட்டான்.

இவரது, மரணத்தைக் கூறப்புகுந்த ஒருவர் சங்கீதபூஷணம் சங்கராபரணத்தால் மரணமடைந்தார் என்று, வேதனையோடு சங்கீத பாஷையில் குறிப்பிட்டுள்ளார்.


கலாவினோதன் கலாபூஷணம்,
த. சித்திஅமரசிங்கம்
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment