Tuesday, March 17, 2009

நெஞ்சு நோகாத நாட்களில்லை......

 கவிதை
காலனை உதைத்த முக்கண் கடவுளின் குமாரனான
வேலனின் பெயரை வைத்தால் விடிவெனக்குண்டென் றெண்ணிச்
சீலத்தில் சிறந்த பெற்றோர் சிந்தித்துப் பெயரிட்டார்கள்
வேலையும் கிடைக்கவில்லை, விடிவையும் கண்டேனில்லை


கற்றது தமிழ்தான் கொஞ்சம் கசடறக் கற்றேனில்லை
மற்றுள்ள மொழிகளை மனமொன்றிப் படிக்கவில்லை
உற்றவோர் அறிவுத்தரம் ஒன்றுக்கும் போதாதாக
வற்றிய நிலையில் புத்தி மளுக்கமே என்னில் மிஞ்சும்

கதை,கவி எழுதவென்று கற்பனை உலகுள் சென்றால்
சிதைவுறும் மேகக் கூட்டம் திக்கொன்றாய்த் திரிதல் போல
உதவாத கற்பனைகள் , உருப்படா யோசனைகள்
விதவிதமாய்த் தோன்றும் விரக்தியே மனதில் சூழும்

வேலனென்றழைக்கப் பெற்றோர் விரும்பிய குறிக்கோள் என்ன?
உலகியல் வாழ்வில் சிக்கி உணர்வினில் ஆசை சேர்த்து
சிலகாலம் வாழ்ந்திறக்கும் சிறுமையில் மயங்காதே யென்று
புலப்படத் தெய்வப்பெயரை பொருத்தம் என்றெண்ணிணாரோ?

பெற்றோரின் வழிகாட்டலைப் பேதையேன் உணர்ந்திடாமல்
கற்றலால் இறைவன் தாளைக் கருத்தினில் பதிந்திடாத
குற்றமும் குறைவுமுள்ள குறுகிய மனத்தோனாக
நிற்றலை நினைத்து நெஞ்சு நோகாத நாட்களில்லை.

 கவிதை

தம்பலகாமம்.க.வேலாயுதம்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment