Tuesday, February 20, 2024

சிவப்புக் குல்லாயும், குட்டி நூலகமும்


இடப்பெயர்வுக்கு முன்பு எங்களுடைய வீட்டில் கடைசி அறை என்று அழைக்கப்பட்ட சிறிய அறையில் அப்பா ஒரு குட்டி நூலகத்தை உருவாக்கி இருந்தார். நாவல்கள், சிறுகதைகள்,  கவிதைகள், தத்துவ நூல்கள், இலக்கண நூல்கள், சஞ்சிகைகள் அன்று அவருக்குப் பிடித்தமானவற்றையெல்லாம் தேடிச் சேகரித்திருந்தவர் சிறுவர்களுக்கான நூல்களுக்காக தனியான பகுதி ஒன்றையே வைத்திருந்தார்.

எங்களுடைய சிறுபிராயம் அந்த நூல்களோடு சேர்ந்து வளர்ந்து வந்தது. இடப்பெயர்வின் பின் மீள்குடியமர்விற்காக நாங்கள் திரும்பி ஊருக்கு வந்த பொழுது எங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய விடயம் அந்தக் குட்டி நூலகத்தின் அழிவுதான்.


புதிய வீடு கட்டுவதற்காக எங்கள் பெற்றோர் சேகரித்து வைத்திருந்த தளபாடங்கள், வீட்டிலிருந்த பெருமதியான பொருட்கள் கடைசியில் நிலைகள், கதவுகள், ஜன்னல்கள் என்று எல்லாம் களவு போனதன் பின்னர் வந்தவர்களாக இருக்க வேண்டும். அவர்களைப் பொறுத்தவரையில் வீட்டில் பெருமதியானவை எல்லாம் களவு போய்விட வெறும் நூல்கள் அடுக்கி இருந்த  இறாக்கை மட்டும் கை படாமல் தப்பித்திருப்பதை பார்த்திருக்கிறார்கள். அது அவர்களுக்கு அதன் மேல் கடுமையான கோபத்தை உருவாக்கி இருக்க வேண்டும். 

ஏமாற்றமும், கோபமும் கொண்ட அவர்கள் நூல்கள் அனைத்தையும் வீட்டின்  முற்றத்தில் வீசி எறிந்திருந்தார்கள். வெயிலிலும் மழையிலும் கிடந்து ஒரு அறிவுக் களஞ்சியமே அழிந்து போயிருந்தது. நூல்கள் அடக்கிய இறாக்கைகளை இழுத்துச் செல்லும் போது வீட்டுக்குள் விழுந்த இரு நூல்கள் அந்தக் குட்டி நூலகத்தின் சாட்சியங்களாக இன்றும் இருக்கிறது.


அம்மாவின் இழப்பின் பின்னர் வீட்டினை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்த பொழுது தங்கைதான்  கவலையுடன் ஒளிந்திருந்த அந்த இரு நூல்களையும் இனம் காட்டினாள். 

நீண்ட நாட்களின் பின் சிவப்புக் குல்லாய்ச் சிறுமியோடு நானும் காட்டு வழியே நடந்து சென்றேன். நோய்வாய்ப்பட்டிருந்த அவளது பாட்டியின் வீட்டிற்குள் செல்லும்பொழுதே கட்டிலில் படுத்திருப்பது யார் என்பதைப் புரிந்து கொண்டேன். போர்வைக்கு வெளியே நீண்டிருந்த  ரோமம் நிறைந்திருந்த கால்களும், நீண்ட கூர்மையான நகங்கள் கொண்ட விரல்களும்  ஒளிந்திருப்பது யார் என்பதை புரிய வைத்தது. கொடுப்புக்குள் சிரித்தவாறே நானும், சிறுமியும் பாட்டியின் கட்டிலின் தலைப் பக்கமாகச் சென்று 

ஏன் பாட்டி உனது குரல் கரகரப்பாக இருக்கிறது? 

ஏன் பாட்டி உனது உடம்பில் ரோமங்கள் வளர்ந்திருக்கிறது?

ஏன் பாட்டி உன்னுடைய நகங்கள் இவ்வளவு நீளமாகவும், கூர்மையாகவும் இருக்கிறது?

என்று ஒவ்வொன்றாக கேட்டுக் கொண்டே இருந்தோம். பல வருடங்களுக்கு முன் நாங்கள் படித்த அதே வசனங்களை பதிலாகச் சொல்லிக் கொண்டிருந்தது போர்வைக்குள் ஒளிந்திருந்த மிருகம்.


நட்புடன் ஜீவன்.


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment