Saturday, November 02, 2019

1854ல் களவுபோன மரகத இரத்தினம் பதித்த முக்கோணப் பதக்கம்


தம்பலகாமம் தொடர்பிலான பல்வேறு தகவல்கள் திருக்கோணாசல வைபவம் எனும் நூலின் மூலம் நமக்குக் கிடைக்கிறது. 1889 ஆம் ஆண்டளவில் திருகோணமலை திரு.வே.அகிலேசபிள்ளை அவர்களால் எழுதப்பட்டு 1950 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட திருக்கோணாசல வைபவம் எனும் இந்நூல் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயத்தில் இருந்து 1854ல் களவுபோன மரகத  இரத்தினம் பதித்த முக்கோணப் பதக்கம் பற்றிச் சொல்கிறது.

தம்பலகாமம் எனும் ஊர்ப்பெயரினை ஆதாரப்படுத்தும் ஆவணங்களைத்தேடி அலைந்த எனக்கு இந்நூல் ஒரு அரிய பொக்கிசமாகத் தெரிகிறது. திரு.வே. அகிலேசபிள்ளை அவர்கள் தஷ்ணகைலாய புராணம், திருகோணமலைப் புராணம், திருக்கரசைப் புராணம், கம்பசாத்திரம், பெரியவளமைப் பத்ததி, கோணேசர் கல்வெட்டு போன்ற நூல்களைக் கற்றுணர்ந்து அதனைப் பலரும் அறியவேண்டும் என்ற ஆவலில் உரைநடையாக திருக்கோணாசல வைபவம் என்ற நூலாக்கித் தந்திருக்கிறார். தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம் தொடர்பில் அவர் தரும் தகவல்கள் முக்கியமானவை. அந்நூலில் நளச்சக்கரவர்த்தி சரித்திரம் என்ற பகுதி 1854ல் களவுபோன மரகத  இரத்தினம் பதித்த முக்கோணப் பதக்கம் பற்றிய குறிப்பிருக்கிறது.


நளச்சக்கரவர்த்தி சரித்திரம்

நிடத நாட்டில் இருந்து அரசு செய்த நளச்சக்கரவர்த்தி திருக்கோணசலத்தின் பெருமைகளைக் கேள்வியுற்று வந்து பாவநாச தீர்த்தத்தில் வந்து மூழ்கி கோணைநாயகரையுந் தேவியையும் தரிசனஞ் செய்து விலைமதித்தற்கரிய மரகத  இரத்தினம் பதித்த ஒரு முக்கோணப் பதக்கமுஞ் சாத்தி இன்னுமனேக திரவியங்களும் அறைமுதலில் இருப்பாக வைத்து செப்பேட்டிலும் கருகுலக்கணக்கிலும் பதிப்பித்து பின்பு கோணைநாயகரிடம் விடைபெற்றுக் கொண்டு நிடததேசத்துக்குப் போனார்.

நளச்சக்கரவர்த்தி கொடுத்த முக்கோணப் பதக்கம் 1854ல் தம்பலகமம் கோணைநாயகர் கோயிலில் இருந்து பின்பு களவுபோய்விட்டது. அப்பதக்கத்தின் பிற்பக்கத்தில் நளச் சக்கரவர்த்தி உபயமெனப் பெயர் வெட்டப்பட்டிருந்தது.


இவ்வாறு நளச்சக்கரவர்த்தி சரித்திரம் என்ற பகுதியில் விலைமதிப்பற்ற மரகதரத்தினம் பதித்த ஒரு முக்கோணப் பதக்கம் தொடர்பில் அவர்  பதிவு செய்திருக்கிறார்.

1854 இல் களவுபோன பதக்கம் ஒன்றைப்பற்றி திரு.வே.அகிலேசபிள்ளை அவர்கள் 1889 இல் ஆவணப்படுத்துகிறார். இங்கு குறிக்கப்படும் நளச்சக்கரவர்த்தியினை மகாபாரதத்தில் வரும் கிளைக்கதையொன்றின் நாயகனோடு தொடர்புபடுத்திக் குழப்பிக் கொள்ளாமல் இக்கூற்றின் வரலாற்று அடிப்படையினை எதிர்காலத்தில் விரிவாக ஆராய வேண்டியது அவசியமானதாகும். நளன் என்ற குறுநில மன்னன் அல்லது அரச பிரதிநிதி வழங்கிய நன்கொடை பின்னாளில் ஓலைச்சுவடிகளைப் பிரதிபண்ணும் பண்டிதர்களினால் நளச்சக்கரவர்த்தியின் கதையுடன் தொடர்புபடுத்தப்பட்டதா எனச்சந்தேகம் கொள்ளவேண்டி இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து வரும் குறிப்பும் முக்கியமானது. குறித்த நளச்சக்கரவர்த்தி திருக்கோணேச்சரத்துக்கு வழங்கிய பொன்களஞ்சு 80211 பொன்நகை களஞ்சு 2048 என திருக்கோணேச்சர நிதி ஏடான பெரிய வளமைப் பத்ததியில் பதியப்பட்டிருப்பது கனகசுந்தரப் பெருமாளின் வாக்குமூலமாக இந்நூலில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது கருத்தில்கொள்ளத்தக்கது.

தேடத்தேட நம்மூர்களில் விடைகாணப்படாத பல இரகசியங்கள் இன்னும் ஆராயப்படாமல் இருப்பதுபற்றி அறியமுடிகிறது.

புராதன தம்பலகாமம் ஆதி கோணநாயகர் ஆலய உட்பறச் சுவரில் வரையப்பட்டிருந்த சித்திரங்கள். 


நட்புடன் ஜீவன்.
admin@geevanathy.com

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments: