Saturday, May 07, 2016

இன்றைய வீரகேசரி (07.05.2016 ) சங்கமம் பகுதியில் எனது நேர்காணல்... நன்றி திரு.சஞ்சீவன்



01.உங்களைப் பற்றியும் உங்களது இலக்கியப்பின்ணணி பற்றியும் கூறமுடியுமா ?

தம்பலகாமத்தில் பிறந்து தற்போது திருகோணமலையில் வசித்துவரும் நான் மருத்துவராகப் பணிபுரிகிறேன். எழுத்தாளராகவும், நீண்டகாலமாக வீரகேசரி நாளிதழின் நிருபராகவும் கடமையாற்றி மறைந்தவர் எனது அப்பப்பா தம்பலகாமம் க. வேலாயுதம் அவர்கள். அவரது தூண்டுதலினால் சிறுவயதில் வாசிப்பதிலும் பின்னர் எழுதுவதிலும் ஆர்வம் ஏற்பட்டது. தந்தை கலாபூசணம் வே. தங்கராசா அவர்களின் உறுதுணையுடன் அது இன்றுவரை தொடர்கிறது. பாடசாலைக் காலத்தில் போட்டி நிகழ்ச்சிகளுடன் ஆரம்பித்த எழுத்துலகப் பயணம் பின்னர் பத்திரிகைகள், சஞ்சிகைகள், இலக்கிய மலர்கள் என்று நீண்டு செல்கிறது. 

1991 ஆம் ஆண்டில் எனது முதல் ஆக்கம் வீரகேசரிப் பத்திரிகையில் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து மித்திரன் வாரமலர், தினமுரசு, சங்குநாதம், இளவரசி, மலைமுரசு, கலைக்கேசரி, யாழ் மருத்துவபீட ஆண்டிதழான நாடி மற்றும் மாவட்ட, மாகாண இலக்கிய மலர்கள் என்பனவற்றில் எனது ஆக்கங்கள் கவிதை, சிறுகதை, வரலாற்றுக் கட்டுரைகளாக வெளிவந்திருக்கின்றன.

அப்பப்பா, அப்பா ஆகியோரின் படைப்புக்களுடன் எனது ஆக்கங்களையும் சேர்த்து 2008 ஆம் ஆண்டு முதல் www.geevanathy.com எனும் வலைப்பதிவில் பதிவேற்றி வருகிறேன். இலக்கிய வடிவங்களைக் கையாழுவதில் ஆரம்பப் படிநிலையில் இருக்கும் எனக்கு இணையம் பயிற்சிக் களமாக இருக்கிறது. பரந்துபட்ட வாசிப்பனுபவமும், எண்ணங்களை எழுத்தாக்கம் செய்யும் செயன்முறையும் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்குவதோடு மனதினைப் பண்படுத்துவதாகவும் இருக்கிறது.

02. வைத்திய துறையில் இருக்கும் நீங்கள் தொல்லியல், வரலாறு போன்ற முற்றிலும் மாறுபட்ட துறையொன்றில் எவ்வாறு ஆர்வத்துடன் ஈடுபடுகிறீர்கள் ?

வைத்தியம், தொல்லியல் என்பன வெவ்வேறான துறைகளாக இருந்தாலும் அவற்றின் அணுகுமுறைகளின் அடிப்படை அம்சங்கள் பொதுவானவை. தொல்லியல் என்பது ஒரு பிரசித்தி பெற்ற ஐதீகம் என்ற நிலைமாறி இன்றைய நவீனயுகத்தில் அது ஒரு தூய்மையான விஞ்ஞானமாக கருதப்படுகிறது.
ஒரு வைத்தியர் வைத்தியப் பரிசோதனையின் போது எவ்வாறு உரிய முறையில் மருத்துவ ஒழுங்கு விதிகளுக்கு ஏற்ப விதந்துரைக்கப்பட்ட வழிநின்று நோயைக் குணமாக்க முயல்கிறாரோ அதுபோலவே ஒரு தொல்லியலாளனும் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களைப் பற்றிக் கிடைக்கும் ஒழுங்கற்ற தடையங்களை பகுத்தாராய்ந்து தொல்லியல் கோட்பாட்டு நெறிமுறைகளுக்கு அமைவாக துப்புத்துலங்குகின்ற நோக்கில் தர்க்க விஞ்ஞானத்துடன் பயணம் செய்து அவர்களின் வரலாற்றினைப் புரிந்து கொள்ள முயல்கிறான். எனவே ஒத்த தன்மையுள்ள துறையொன்றின் ஆரம்பப் படிநிலையில் ஆர்வத்துடன் ஈடுபடுவது கடினமாக இருக்கவில்லை.

வரலாற்று எழுத்தியலில் இரண்டு படிநிலைகள் இருக்கின்றது. முதன்நிலைத் தரவுகளைச் சேகரித்து பதிவு செய்தல் முதல் படிநிலையாகும். இதனையே நானும் கொட்டியாரப்பற்றினை தனது தேடுதளமாகக் கொண்டு செயற்பட்டுவரும் நண்பன் வைத்திய கலாநிதி ஸதீஸ்குமாரும் செய்துவருகிறோம். எங்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும், மேலதிக வாசிப்புக்கான உதவிகளையும் வரலாற்றாய்வாளர் கலாநிதி கனகசபாபதி சரவணபவன் அவர்கள் செய்துவருகிறார்.

வரலாற்று எழுத்தியலில் இரண்டாவது கட்டம் வரலாற்றினைத் தொகுத்து எழுதுவதாகும். கிடைக்கப்பெறும் முதல்நிலைத் தரவுகளை ஆராய்ந்து, ஒரு ஒழுங்குமுறையில் தொகுத்து அதிலிருக்கும் இடைவெளிகளை ஊகித்து நிரப்பி, நிரூபிக்கக்கூடிய புற ஆதாரங்களோடு இணைத்து வரலாற்றினை எழுதும் செயன்முறை இதுவாகும். எம்மால் சேகரிக்கப்படும் தகவல்களை மதிப்புக்குரிய வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்களிடம் சமர்ப்பிக்கின்றோம். அவற்றினை ஆராய்ந்து வரலாற்றைத் தொகுக்கும் முன்னகர்வுகளை அவர் மேற்கொண்டு வருகிறார். முடியுமான வேளைகளில் கள ஆய்வுகளில் இணைந்து பெருந்தன்மையுடன் எமக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

03. உங்களுடைய ஆவணப்படுத்தல்கள் எவ்வாறு அமைகிறது ?

இன்றைய நவீன உலகில் நுண்வரலாற்று எழுத்தியல் பிரபல்யம் அடைந்துவரும் ஒன்றாக இருக்கின்றது. ஒரு குறிப்பிட்ட சிறிய விடயத்தினை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் மிக நுட்பமான, ஆழமான வரலாற்றுத் தேடுதல் நுண்வரலாறு (Microhistory ) என அழைக்கப்படுகிறது. இந்த அடிப்படையில் எமது ஆவணப்படுத்தலின் மையப் புள்ளியாக தம்பலகாமம் எனும் எமது கிராமம் இருக்கிறது.

இக் கிராமத்தின் இடப்பெயர் ஆய்வு, இயற்கை வளங்கள், குடித்தொகைப்பரம்பல், மக்களின் சமூக ஒழுங்கமைப்பு, வாழ்வு முறை, பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார உற்பத்தி முறைகள், நிர்வாக அமைப்பு, வழிபாட்டு முறைகள், தொன்மங்கள், ஐதீகங்கள், கலை இலக்கியப் பாரம்பரியம், வாய்மொழி மரபுகள் போன்றன தொடர்பில் கிடைக்கும் ஆதாரங்களை ஆவணப்படுத்தும் முயற்சியினை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாதாரங்கள் கல்வெட்டுக்களாக , தொல்பொருட்களாக, ஓலைச் சுவடிகளாக, வாய்மொழிக் காவியங்களாக என்று பல வடிவங்களில் எமக்குக் கிடைக்கிறது.

தம்பலகாமம் தொடர்பான ஆவணப்படுத்தலின் கணிசமான பகுதியினை அமரர் தம்பலகாமம் க.வேலாயுதம் அவர்கள் ஏலவே நிறைவேற்றி இருக்கிறார். அவர் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து தொடரும் முகமாக வழிபாட்டு முறைகள், பண்பாட்டு அம்சங்கள், கலை இலக்கியப் பாரம்பரியம் போன்ற விடையங்களில் கலாபூசணம் வே.தங்கராசா அவர்களும், இடப்பெயர் ஆய்வு, தொல்லியல், குடித்தொகைப் பரம்பல் போன்ற விடையங்களில் நானும் கவனம் செலுத்தி வருகிறோம்.

04. இவ்வாறான ஆவணப்படுத்தல்கள் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது எனக் கூறமுடியுமா ?

உதாரணமாக இடப்பெயர் ஆய்வு தொடர்பான சில கட்டுரைகளில் ‘இலங்கையில் காலனித்துவ ஆட்சி ஏற்பட்ட போது ‘Tamanatota’ எனும் புராதான சிங்களக் கிராமத்தினை தமிழ் மக்கள் ஆக்கிரமித்து அதனைத் ‘தம்பலகாமம்’ எனப் பெயர் மாற்றிக் கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டினைக் காணக்கூடியதாக இருக்கும். இவ்வாறான வரலாற்றுத் திரிபுகளின் பின்னாலுள்ள அரசியலைப் புரிந்துகொள்ள முறையான ஆவணப்படுத்தல்கள் அவசியமானதாகிறது.

‘தம்பலகாமம்’ என்ற பெயர் இன்றைக்குச் சுமார் எண்ணுறு வருடங்களுக்கு முன்பாகவே வழக்கில் இருந்துவரும் ஊர்ப்பெயர் . இதனைப் பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்களால் வெளிப்படுத்தப்பட்ட ‘தம்பலகாமம் கல்வெட்டு’ ஆதாரப்படுத்துகிறது. 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியினைச் சேர்ந்த இக்கல்வெட்டில் ‘தம்பலகாம ஊர்’ எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தம்பலகாமம் என்ற ஊரின் பெயர் காலத்துக்குக் காலம் இங்கு மேலாதிக்கம் செலுத்திய ஆட்சியாளர்களாலும், இலக்கிய விற்பனர்களாலும் மாற்றப்பட்டதை அறியக்கூடியதாக உள்ளது.

இலங்கையில் ஐரோப்பியரின் ஆதிக்கம் ஏற்படுவதற்கு முன்னால் இப்பிரதேசத்தில் சுதந்திரச் தமிழ்ச்சிற்றரசாக இயங்கிய வன்னிபங்கள் இப்பிரதேசத்தின் பெயரினை ‘தம்பலகாமப் பற்று’ எனப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். பின்னர் அந்நியர் ஆதிக்கத்தின் கீழ் வன்னிபங்களின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டு அவர்கள் நிர்வாகிகளாகச் செயற்பட்ட காலத்திலும் அப்பெயரையே பாவித்திருக்கிறார்கள். இலங்கை சுதந்திரமடைந்த காலம் வரை வன்னிபங்களின் முக்கிய ஆவணங்களில் அப்பெயர் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. தம்பலகாமப் பற்று என்பது இன்றைய தம்பலகாமப் பிரதேசத்துடன் கிண்ணியா, ஆலங்கேணி, கந்தளாய் போன்ற இடங்களை உள்ளடக்கிய பரந்த பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.

1658 ஆம் ஆண்டு காலப்பகுதியில் போர்த்துக்கீசர் இலங்கைமீதான ஆதிக்கத்தினை இழந்தவேளையில் கண்டி இராட்சியம் திருகோணமலை மீது தனது மேலாதிக்கத்தினைச் செலுத்தியது. அக்காலப்பகுதியில் கண்டி இராட்சியத்தில் பல மாகாணங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று ‘தம்பன் கடவை’. தம்பன் கடவையின் துறைமுக நகரமாக தம்பலகாமம் சில காலம் செயற்பட வேண்டி இருந்தது. கடல்வழி வணிகத்திற்கும், போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்பட்ட திருகோணமலையின் பகுதிகளில் ஒன்றாக தம்பலகாம குடாக்கடல் முக்கியத்துவம் பெற்றிருந்தமை இதற்கான காரணமாகும். கண்டி அரசின் மேலாதிக்கம் காரணமாக இப்பகுதி அவர்களால்  ‘Tamanatota’ என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து வந்த ஒல்லாந்தர், பிரித்தானியர் மேலாதிக்கத்தின் போது இப்பிரதேசம் Tampalagam, Tamblegam போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டிருக்கிறது.

ஊரின் பெயர் ஆட்சியாளர்களால் மட்டுமல்ல அங்கு வாழ்ந்த அறிஞர்கள், இலக்கிய வாதிகள், சமூக அமைப்புக்கள் என்பனவற்றாலும் மாற்றம் பெறுவதுண்டு. அந்தவகையில் 17 ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற இலக்கியங்கள் இவ்வூரின் பெயரினை பின்வருமாறு பதிவு செய்கிறது. திரிகோணாசலப் புராணத்தின் இருபதாவது அத்தியாயம் ‘தம்பை நகர்’ என்றும் வெருகல் ஸ்ரீ சித்திர வேலாயுதர் காதல் அதனை ‘தம்பலகமம்’ என்றும் பதிவு செய்திருக்கிறது.

2014 ஆம் ஆண்டுக் குடித்தொகை கணக்கெடுப்புகளின்படி 17153 முஸ்லீம்களும் 7785 சிங்களவர்களும் 6232 தமிழர்களுமாக 31170 பேர் வாழ்கின்ற இப்பிரதேசம் இன்று தம்பலகமுவ (Thambalagamuwa )  என்று அழைக்கப்படுகிறது. இப்பெயர் மாற்றம் சில தசாப்தங்களுக்கு முன்னால் செய்யப்பட்டு இன்றுவரை அரச நிர்வாக ஆவணங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்பிரதேசத்தில் அடங்கியிருக்கும் 12 கிராம சேவையாளர் பிரிவுகளில் ஒரு கிராமத்தில் புராதானமான ‘தம்பலகாமம்’ என்ற பெயர் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

‘தம்பலகாமம்’ என்று பெயர் கொண்டு அழைக்கப்படும் இச்சிற்றூரின் மையத்தில் வரலாற்றுப் புகழ் கொண்ட ஆதிகோணநாயகர் ஆலயம் அமைந்திருக்கிறது. நாட்டில் புதிதுபுதிதாக தோன்றிவரும் புத்தர் சிலை அவ்வாலயத்தின் வாசல் வரை வந்துவிட்ட காலகட்டத்தில் நாம் வாழ்ந்துவருகிறோம். எனவே ஆவணப்படுத்தல்கள் அவசியமானதாகவும், இன்றியமையாதவொன்றாகவும் இருக்கிறது.

05. ஆவணப்படுத்தல் தவிர்ந்து வேறென்ன முயற்சிகளில் ஈடுபடுகிறீர்கள்?

எனது வலைப்பதிவினூடாக தொடர்புகொள்ளும் நன்கொடையாளர்களை எமது பிரதேசத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட தேவை நிறைந்த இடங்களை நோக்கி அழைத்துச் செல்லும் இணைப்பாளராக சிறியளவில் செயற்பட்டு வருகிறேன். இம்முயற்சிக்கு எனது உறவினர்களும், நண்பர்களும் உதவி வருகிறார்கள். இதன் மூலம் பாடசாலை மாணவர்களும், விளையாட்டுக் கழகங்களும் மற்றும் அறநெறி பாடசாலைகளும் நன்மையடைந்து வருகின்றன. நன்கொடையாளர்கள் நன்றிக்குரியவர்கள்.

நேர்காணல் - திரு.சஞ்சீவன்




இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. வணக்கம்

    பத்திரிக்கையில் தங்களின் நேர்காணல் வந்தது மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் sir.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete