Monday, October 19, 2015

Dr.ஸதீஸ்குமாரின் நூல் வெளியீட்டு நிகழ்வு - புகைப்படங்கள்


வைத்தியகலாநிதி அருமைநாதன் ஸதீஸ்குமார் அவர்கள் எழுதிய “அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய வரலாறும் மகிமையும்” என்ற நூலின் வெளியீட்டுவிழா 12.10.2015, திங்கட்கிழமை மாலை 3.00 மணியளவில் சம்பூர் பத்திரகாளி அம்பாள் ஆலய முன்றலில் கவிஞர்.க.யோகானந்தம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவின் முதன்மை விருந்தினராக சைவஞானபானு, செஞ்சொற் செல்வர், கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திரு.நடராசா பிரதீபன் அவர்களும், வரலாற்று ஆய்வாளர் கலாநிதி திரு.கனகசபாபதி சரவணபவன் அவர்களும், சிறப்பு விருந்தினராக கதாசிரியர் திரு.கனகசபை தேவகடாச்சம் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

கவிஞர் க.யோகானந்தம் அவர்கள் தமது தலைமையுரையில் “ வைத்திய கலாநிதி திரு.அருமைநாதன் ஸதீஸ்குமார் அவர்கள் காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு ஒரு அருமையான நூலை எமக்கு ஆக்கித் தந்துள்ளார்” எனக் குறிப்பிட்டார். ஆசியுரையை கலாபூசணமும் சைவப்புலவருமாகிய கொட்டியாரப்பற்று இந்துசமய அபிவிருத்தி ஒன்றியப் பொதுச்செயலாளர் திரு.அருளம்பலம் குகராசா வழங்க, அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.துரை கிருபைராஜா வாழ்த்துரை வழங்கினார். “ எதிர்காலத்தில் எமது பரிபாலனசபை நூல்கள் வெளியிடுவோருக்கு கடனுதவிகள் வழங்கி ஊக்குவிக்கும்” என பார்வையாளர்களின் கரகோசத்திற்கு மத்தியில் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து முதன்மை விருந்தினரிடமிருந்து சேனையூர் ஸ்ரீ நாகம்பாள் ஆலய பிரதம அர்ச்சகரும், கவிஞருமாகிய கலாபூசணம் சிவஸ்ரீ அ.அரசரத்தினம் பெற்றுக்கொண்டார். நூல் அறிமுகவுரையை கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் திரு.சரா..புவனேஸ்வரன் ஆற்றினார். அவர் தமது உரையில் அருள்மிகு பத்திரகாளி அம்பாளின் அற்புதங்களை கேட்போர் மெய்சிலிர்க்கும் வகையில் எடுத்துக் கூறினார்.

நூல் நயவுரையை சேனையூர் மத்திய கல்லூரி அதிபரும், ஆற்றல்மிக்க கவிஞருமாகிய திரு.இரா.இரத்தினசிங்கம் ஆற்றினார். “ மிகச்சிறந்த வரலாற்றுப் பொக்கிசமொன்றின் நயவுரையை ஆற்றும் பேறு தனக்குக் கிடைத்திருப்பதாகவும் இதற்காக நூல் ஆசிரியருக்கு தான் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாவும்” எடுத்துரைத்தார்.

அகில இலங்கை.இந்துமாமன்ற உபதலைவரும், யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலயத் தலைவரும், சைவஞானபானு,  செஞ்சொற் செல்வரும்,முதன்மை விருந்தினருமாகிய கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்கள் தமது உரையில் “வைத்திய கலாநிதியாகிய திரு.ஸதீஸ்குமார் அவர்கள் தனது வைத்திய கடமைகளை செவ்வனே செய்து கொண்டு தனக்குக் கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்தி இவ்வரிய நூலை எமக்கும் எமது சந்ததியினருக்கும் அளித்துள்ளமையை வெகுவாகப் பாராட்டுகிறேன்”எனக் கூறினார்.

கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்ட திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திரு.நடராசா பிரதீபன் அவர்கள் பேசும் பொழுது “ இத்தகைய அரிய நூலை ஒரு வைத்திய கலாநிதி ஆக்கித் தந்துள்ளார் என்பதை அறியும் பொழுது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. தமக்குக் கிடைக்கும் குறுகிய நேர ஓய்வையும் சமூகத்திற்காகத் தியாகம் செய்யும் அவரது உயரிய நோக்கைப் பாராடடுகிறேன்” என்றார்.

கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்ட வரலாற்று ஆய்வாளர் கலாநிதி திரு. கனகசபாபதி சரவணபவன் அவர்கள் ‘வரலாற்று ஆய்வு தொடர்பான முக்கியத்துவம் நிறைந்த விடயங்களை சுருக்கமாக சுவைபட எடுத்துக் கூறியதுடன், இத்துறையில் ஈடுபடும் வைத்திய கலாநிதி திரு.ஸதீஸ்குமாரை வெகுவாகப் பாராட்டினார்

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ‘பாதிக்கபட்ட மாணவர்களின் கல்விக்காக’ அரும்பணியாற்றும் கதாசிரியர் தேவகடாட்சம் அவர்கள் ‘நூலாசிரியரின் அரும்பணியை பெரிதும் பாராட்டினார்’ நூலாசிரியரின் ஏற்புரை நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவேறியது.

செய்தியாக்கம் - கலாபூசணம் .வே. தங்கராசா 
 புகைப்படங்கள் - ஜீவன்


மேலும் வாசிக்க
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment