Thursday, August 14, 2014

இருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்லபூபால வன்னிபத்தின் உயில் - 5

vanniyar

திருகோணமலையின் கொட்டியாரப்பற்றில் அடங்கியிருக்கும் இயற்கை வனப்பு நிறைந்த ஒரு ஊர் மேன்காமம். அங்கு சுமார் 120 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு உறுதி அண்மையில் எமக்குக் கிடைக்கப்பெற்றது. 05.06.1893 ஆந் திகதியிடப்பட்ட அவ்வுயில்  கொட்டியாரப்பற்று மேன்காமத்தில் வசித்த இருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்ல பூபால வன்னிபத்தினால்  தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் தொழும்புகள் பற்றி ஒரு நியமன உறுதி முடித்துக் கொடுக்கப்பட்டதைச் சொல்கிறது. திருகோணமலைப் பிராந்திய தமிழர்களின் வரலாற்றாதாரங்களில் இது ஒரு முக்கிய ஆவணமாகும். மேற்குறித்த உயிலின் அடிப்படையிலும், கிடைக்கும் ஏனைய சான்றாதாரங்களின் துணைகொண்டும் வன்னிபங்களின் காலத்து திருகோணமலைப் பிரதேசத்தின் வழமைகளை ஆராயமுயல்கிறது இக்கட்டுரை.


இந்த ஆவணத்தின் முக்கியத்துவத்தினை அறிந்துகொள்வதற்கு கீழ்வரும் தலைப்புகளிலான சுருக்கமான தேடல்கள் உதவிபுரியும் அதேவேளை அவை வன்னிபச் சிற்றரசுளின் காலத்தில் இருந்த சமூக நிலைகளை விளங்கிக் கொள்வதற்கு துணைபுரிவதாகவும் இருக்குமெனலாம். இந்த அடிப்பையில்

01வரலாற்றுக்கால தமிழ்ச் சிற்றரசுகள் - வன்னிபத்தின் உயில் - 1
02வன்னி அரசர் அல்லது வன்னிபம் - வன்னிபத்தின் உயில் - 2
03திருகோணமலை வன்னிபங்கள் - வன்னிபத்தின் உயில் - 3
04திருகோணமலை வன்னிபங்களும் அதன் தேசவழமைகளும் - வன்னிபத்தின் உயில் - 4
என்பனவற்றினை தனித்தனியே ஆராய்ந்திருந்தோம்.

மேற்கூறிய அனைத்து ஆதாரங்களும் திருகோணமலைப் பிராந்தியத்தில் நிலவி வந்த வன்னிபங்களின் சுயாட்சி முறைக்கு ஆதாரங்களாகின்றன. இவை தவிர வன்னிபங்கள் தொடர்பான பல ஓலைச்சுவடிகளும், காணி உறுதிகளும் பண்டைய காலந்தொட்டு தம்பலகாமத்திலுள்ள ஆதிகோணநாயகர் ஆலயத் தொழும்பாளர்களிடம் தலைமுறை தலைமுறையாக பேணிப்பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தம்பலகாமம் தொடர்பான வரலாற்றுத் தேடலில் ஈடுபட்டிருந்தபொழுது எனது முன்னைநாள் ஆங்கில ஆசான் திரு.இந்திரசூரியன் அவர்களிடம் இருந்து ஒரு உயில் கிடைக்கப்பெற்றது. இது திருகோணமலை வன்னிபங்கள் தொடர்பான வரலாற்றாதாரங்களில் முக்கியம் பெற்றதாக இருந்தது. ஓலைச்சுவடிகளும் மற்றும் கல்வெட்டு வரலாற்றாதாரங்களும் கிடைகுமெனச் சல்லடைபோட்டுத் தேடி சலிப்படைந்திருந்த ஒரு நாளில் இந்த வரலாற்றுப் பொக்கிசம் எமது கைக்குக் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


‘திரு வேதபுராண காவியங்களின் பிரகாரம் தெஷிணகயிலாய, திருகயிலம்பதியாகிய திருகோணமலையில் எழுந்தருளியிருக்கும் எங்கடவுளாகிய சிவபெருமான் கோணநாயகனை வணங்கி, தற்காலம் திரு.கொட்டியாபுரப்பற்று மேன்காமத்தில் வசிக்கும் இருமரபுத்துய்ய எதிர்வீரசிங்க நல்ல பூபால வன்னிபனாகிய நான் திரு.தம்பலகாமம் கோணநாயகர் கோயிற் கருமங்களைப் பற்றி பராமரிப்புத் தத்துவ நியமன உறுதி முடித்துக் கொடுத்த விபரம்’

என்று தொடங்குகிறது ஙஉஏ0 என்று தமிழில் இலக்கமிடப்பட்ட 1893 ஆம் ஆண்டு ஆனி மாதம் 14 ஆந்திகதி எழுதப்பட்ட மேன்காமம் வன்னிபத்தின் உயில். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணத்தில் கவனிக்கத்தக்கதாக பல விடையங்கள் உள்ளன.

1. புராணகாவியங்களின் அடிப்படையில் திருகோணமலை இவ்வுயில் எழுதப்பட்ட காலப்பகுதியில்
(1)தெஷிணகைலாயம்
(2) திருக்கயிலம்பதி
என்ற பெயர்களால் அழைக்கப்பட்டதை ஆதாரப்படுத்துகிறது.

2. திருகோணமலைப் பிராந்தியத்தில் உள்ள ஊர்களை அடையாளப்படுத்தும் பொழுது அவற்றின் முன்னால் ‘திரு’ என்ற அடைமொழி சேர்க்கப்படும் வழக்கம் இருந்ததை இது உறுதிப்படுத்துகிறது. அதாவது கொட்டியாரப்பற்று , தம்பலகாமம் ஆகிய இரு ஊர்களின் பெயர்களும் திரு.கொட்டியாரப்பற்று, திரு.தம்பலகாமம் என விளிக்கப்பட்டிருந்தது கவனிக்கத் தக்கது. இந்த வழமை மிக அண்மைக்காலம் வரை வழக்கிலிருந்தது குறிப்பிடத்தக்கது.

‘புறோநோட்டு’ என்பது சிலநூற்றாண்டுகளுக்கு முன்னால் பணக்கொடுக்கல் வாங்குதல்களின் பொழுது கடன் கொடுப்பவர் கடன்பெறுபவரிடம் இருந்து எழுதியெடுக்கும் கடன் பத்திரமாகும். இதில் ஒருவரை அடையாளப்படுத்த ‘திருகோணமலைப் பிரதேசத்தினைச் சேர்ந்த தம்பலகாம்ப்பற்று ஆலங்கேணியில் வசிக்கும்’ என்று விபரிப்பதற்குப் பதிலாக ‘திரு.தம்.ஆலங்கேணில் வசிக்கும்’ என்று எழுதும் வழக்கம் இருந்தது. இதே முறையே காணி உறுதிப் பத்திரங்களிலும் பின்பற்றப்பட்டு வந்தது.

3. மூன்றாவதும் ஆவணப்படுத்தலில் அதிமுக்கியத்துவம் கொண்டதுமான விடையம்; திருகோணமலை கொட்டியாபுரப்பற்றின் மேன்காமத்தில் 1893ஆம் ஆண்டில் வசித்த இருமரபுத்துய்ய எதிர்வீரசிங்க நல்ல பூபாலவன்னிபம் இந்த நியமன உறுதியை முடித்துக்கொடுத்ததும், அவர் தம்பலகாமம் கோணநாயகர் கோயில் தொழும்பாளர்கள் மீது கொண்டிருந்த அதிகாரமுமாகும். இவற்றை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள மேற்படி உயிலின் மற்றுமொரு வாசகம் உதவுகிறது. அந்த வாசகம் பின்வருமாறு அமைந்துள்ளது.

திருகோணமலையை ஆண்ட வன்னிபங்கள் பற்றிய வரலாற்றாதாரங்கள்

“ இந்தப்பிரகாரம் நான் பூர்வீகம் தொடக்கம் பரம்பரையாக நடந்துவந்த இந்த தேசவழக்கப்படி எனக்குள்ள சொந்த உரித்தைக் கொண்டும், மேற்கூறிய கோயில் கூட்டத்தில் எனக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தைக் கொண்டும் இந்த நியமனப் பத்திர உறுதியை முடித்துக் கொடுக்கிறேன்”
என எழுதப்பட்டுள்ளது.

இதிலுள்ள ஆரம்ப வாசகம் நம்மை மீண்டும் கோணேசர் கல்வெட்டுக் கூறும் குளக்கோட்டன் வகுத்த தேசவளமைகளை நோக்கி இழத்துச் செல்கிறது. குளக்கோட்டு மன்னன் திருகோணமலைப் பிரதேசத்ததை நிர்வகிக்க வன்னிமைகளை நியமித்து அதிகாரங்களை வழங்கினான். இவ்வதிகாரங்கள் குடிமக்களுக்குத் தொண்டு செய்யவும், கோணேசர் ஆலய வழிபாடுகள் குறைவின்றித் தொடர்வதை நிட்சயிக்கும் வகையிலும் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது.

கோணேஸ்வரருக்கு தொண்டு செய்யும் தொழும்பாளர்களுக்கு உரிமை பரம்பரையாக வழங்கப்பட்டிருந்தது. தொழும்பு செய்யும் பணிக்கு ஏற்ப விளைநிலங்கள் மானியமாக வழங்கப்பட்டிருந்தன. இவர்களுக்கிடையே பிணக்குகள் ஏற்படும் பொழுது அவற்றினைத் தீர்த்து வழிபாடு தடங்கலின்றி ஒழுங்காக நடைபெறச் செய்யவேண்டியது வன்னிபத்தின் தலையாய கடமையாக இருந்தது. எனவே வன்னிபத்தின் ‘நான் பூர்வீகம் தொடக்கம் பரம்பரையாக நடந்து வந்த இத்தேச வழக்கப்படி எனக்குள்ள சொந்த உருத்தைக் கொண்டு’ என்று விளிப்பது குளக்கோட்டன் வகுத்த தேசவழமைகளை ஆதாரப்படுத்துகிறது.


குளக்கோட்டு மன்னன் திருக்கோணேஸ்வர ஆலயத் திருப்பணிகள் செய்தபின் திருகோணமலை, கட்டுக்குளப்பற்று ஆகிய இரு பிரிவுகளுக்கு வன்னிபங்களை ஆட்சி அதிபர்களாக நியமித்தான் என்பதனை கோணேசர் கல்வெட்டு ஆதாரப்படுத்துகிறது. திருகோணமலைப் பிராந்தியத்தில் இருந்த சாசன வழக்காறுகளின் பொருள் மரபினை அடிப்படையாகக் கொண்டு பல ஆதாரபூர்வமான வரலாற்றுச் செய்திகளை பிரதிபலிக்கின்ற நூலாகவே கோணேசர் கல்வெட்டு அமைந்திருக்கிறது என்பதற்கு இந்நியமன உறுதியும் ஒரு ஆதார ஆவணமாகிறது.

இந்த உயிலில் இன்னுமொரு விடையம்; வன்னிபத்தால் ஆதாரப்படுத்தப்படுகிறது. ‘கந்தளாய்க்குளம், மாகாமம், ஆலையடி முதலிய இடங்களில் உள்ள வேள்விகளையும், கிராமசாந்திகளையும் வழமைப்பிரகாரம் ஒழுங்காக நடப்பிக்கவும் என்று வன்னிபத்தின் கட்டளையாக அக்கூட்டத்தில் முன்வைக்கப்படுகிறது. இங்கு குறிப்பிடப்படும் வேள்வி, கிராமசாந்தி என்பன தம்பலகாமம் ஆதி கோணநாயகர் ஆலயத்தின் வெளிச்சுற்று வழிபாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.


தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயிலில் இருபிரிவுகளாக அமைந்த வழிபாட்டுமுறை பண்டைய காலந்தொட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. கோயிலில் இடம்பெறும் நித்தியபூசை, அபிஷேகம் , திருவிழா என்பன உருவவழிபாட்டைச் சார்ந்ததாகும். கள்ளிமேட்டு ஆலையடியில் நடைபெறும் பத்தினித்தேவி திருவிழா, மாகாமத்தில் இடம்பெறும் மூர்க்கமாதா வேள்வி, கந்தளாய்க் குளத்து மகாவேள்வி , நாயன்மார்திடல் மடை வைபவம் என்பன அருவ வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டனவாகும்.
Displaying Thampalakamam 3.jpg

இவ்விரண்டு வழிபாடுகளும் சீராக இடம்பெற வேறுவேறான விதிமுறைகளும், ஊழியம் புரியும் தொழும்பாளர்களும் உள்ளனர். இவற்றில் அருவவழிபாட்டுக் கிரிகைகளை மேற்கொள்ள ‘கட்டாடியார்’ என்றழைக்கப்படும் பூசகர்களும் உள்ளனர். அருவ உருவ வழிபாடுகள் தவறாமல் செய்யப்படின் துன்பமுற்றுமக்கள் சுகமாக வாழ்வர் என்ற கோணேசர் கல்வெட்டின் கருத்தையே வன்னிபம் கூட்டத்தாரிடம் வலியுறுத்துகிறார் என்பது தெளிவாகிறது.


“சொல்லுற்ற சீர்க் குளக்கோட்டு மன்னன் சொற்படி சொல்லெனவே”

முன்னே குளக்கோட்டு மன்னன் கூறியபடியே கூறுவீராக என்று ஒருவர் கேட்க அதற்கிசைந்து கவிராசவரோதயரால் பாடப்பட்ட கோணேசர் கல்வெட்டில் வன்னிபம் தொடர்பாக சொல்லப்பட்டிருக்கும் பல வழமைகளை ஆதாரப்படுத்தும் பெறுமதிமிக்க (இற்றைக்குச் சுமார் 120 வருடங்களுக்கு முந்திய ) ஆவணமாக இந்நியமன உயில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு பழமையான இலக்கியங்களையும் ஆவணங்களையும் அக்கறையுடன் தேடிப் பாதுகாக்கப்பட வேண்டியதின் அவசியத்தை இவ்வுறுதி உணர்த்துகிறது.

மிகவும் உருக்குலைந்த நிலையில் கிடைக்கப்பெற்ற இந்நியமன உயிலின் பிரதி சில மாதங்களுக்கு முன் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் திரு.சி.பத்மநாதன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. வரும் நாட்களில் இந்நியமன உயில் தொடர்பிலான மேலும்பல ஆதாரங்கள் வெளிப்படுத்தப்படும் என்பதில் ஐயமில்லை. அத்துடன் பண்டைய கோணேசர் கல்வெட்டுப் போன்ற நூல்களை அறிவியல் சார்ந்து அணுகவேண்டியதின் அவசியத்தை இது உணர்த்துவதாகவும் உள்ளது.

த.ஜீவராஜ்
முற்றும்.


மேலும் வாசிக்க

வரலாற்றுக்கால தமிழ்ச் சிற்றரசுகள் - வன்னிபத்தின் உயில் - 1
வன்னி அரசர் அல்லது வன்னிபம் - வன்னிபத்தின் உயில் - 2
திருகோணமலை வன்னிபங்கள் - வன்னிபத்தின் உயில் - 3
திருகோணமலை வன்னிபங்களும் அதன் தேசவழமைகளும் - வன்னிபத்தின் உயில் - 4


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

 1. வணக்கம்
  ஐயா
  வாலாற்றுச்சுவடுகளின் தேடல் தொடர்கிறது. என்பதை கேட்கும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது அறியாத ஆதாரங்களை முன்வைத்து பதிவை அறிமுகம் செய்துள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி தேடல் தொடரத் தொடர நானும் தங்களின் பதிவு வழி தொடர்ந்துகொண்டு இருப்பேன்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. மிக்க நன்றி

  ReplyDelete