Thursday, March 28, 2013

வீரசிங்கம் விதானையார்

அட்வகேற்


‘அட்வகேற்’ ஆனந்தன்  காலை ஆராதனைகளை முடித்துக்கொண்டு தன் அலுவலகத்திற்குள் நுளைந்து தன்னைச் சந்திக்க வந்திருக்கும் வாடிக்கையாளர்களை ஒவ்வொருவராக அழைத்து அவர்களது பிரச்சனைகளை அலசி ஆராயத் தொடங்கினார்.


யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர் திருகோணமலை மாவட்ட நீதி மன்றத்தில் ‘சிவில்’ வழக்குகளை பொறுப்பேற்று நடத்திவந்தார். அவர் பொறுப்பேற்ற வழக்குகள் அபார வெற்றிகளைப் பெற்று அவருக்குப் பெரும் புகழையும் பொருளையும் தேடித்தந்தன. அவர் வாடிக்கையாளர்களும் பெருகினர். இதற்கு வசதியாக அவர் ஒரு வீட்டை வாடகைக்காக அமர்த்திக் கொண்டார். வழக்குகள் தொடர்பாக தன்னை நாடிவரும் வாடிக்கையாளர்களைச் சந்திப்பதற்கும் சாட்சியங்களை நெறிப்படுத்துவதற்கும் இது அவருக்குப் பெருந்துணையாக இருந்தது.

வழக்குகளுக்காக அவர் வாடிக்கையாளர்கள் அயல் கிராமங்களான தம்பலகாமம், ஆலங்கேணி, மூதூர் ,கட்டைபறிச்சான் ,நிலாவெளி போன்ற இடங்களிலிருந்து வருவார்கள். அவர்களில் தங்கவசதியற்று கஸ்டப்படுகிறவர்களுக்கு தனது வாடகை வீட்டிலேயே தங்க அனுமதிப்பார். அவருடைய இந்த அணுகுமுறை வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. அதனால் அவரை எல்லோரும் விரும்பி தங்கள் வழக்குகளுக்கு அழைக்கத் தொடங்கினார்கள்.

தம்பலகாமத்தின் பெரும் புள்ளிகளில் ஒருவரான வீரசிங்கம் விதானையாரின் மனைவியின் காணிவழக்கொன்றும் அவரிடம் வந்திருந்தது. அன்று அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவும் இருந்தது. வீரசிங்கம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலிருந்து பொலிஸ் விதானாகக் கடமையாற்றி வருபவர். அவர் இந்தப் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டதே ஒரு பெரிய அதிசயமாகும்.  நிறையப் பேர் இந்தப்பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர்;. தம்பலகாமம் கிராமக் கோட்டு மண்டபத்தில் இதற்கான தெரிவு வன்னிபம் தலைமையில் இடம்பெற்றது. வந்திருந்தவர்களில் கல்வியில் மிகக் குறைந்த தகுதியுடையவரான வீரசிங்கம் விதானையாரே அப்பதவிக்குத் தெரிவுசெய்யப்பட்டார். இதற்கு அவருடைய தோற்றமும் ஆழுமையுமே காரணமாக இருந்தது. இதைவிட தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயிலில் கங்காணமாக உயர்பதவியும் வகித்து வந்தார்.

“வாருங்கோ வீரசிங்கம் விதானையார்” என்று அவரை அன்புடன் அழைத்தார் அட்வகேற் ஆனந்தன்.

“வணக்கம் ஐயா” என்று சொல்லிக்கொண்டே அறைக்குள் நுளைந்த விதானையார் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவாறே தன் மனைவியையும் அமருமாறு கண்சாடை காட்டினார்.

அன்று விசாரணைக்கு எடுபடவிருந்த வீரசிங்கம் விதானையாரின் மனைவியின் வயற்காணி தொடர்பான வழக்குக் கொப்பி அட்வகேற் ஆனந்தன் கரங்களிலிருந்தது. அதை முழுமையாக வாசித்துப் புரிந்து கொண்ட உணர்வும் அவர் முகத்தில் மிளிர்ந்தது.

தம்பலகாமம்

“அம்மா நான் கேட்கும் கேள்விகளுக்கு ஒழிவு மறைவு இன்றி பதில் சொல்ல வேண்டும்.” என்ற பீடிகையுடன் தன் கேள்விக்கணைகளை வீசத்தொடங்கினார் அட்வகேற் ஆனந்தன்.

“எவ்வளவுகாலமாக இந்தக்காணி உங்கள் சொந்தமாக இருந்தது என்று சொல்ல முடியுமா?”என்றார் ஆனந்தன்.

“இருபது வருசகாலமாக இந்தவயல் என் பெயரில்தான் உள்ளது ஐயா.வயல் தூரம் என்பதால் கிண்ணியாவிலுள்ள கணேசன்தான் இந்த வயலைச் செய்து வருகிறார்”

“எவ்வளவு காலமாக இந்தக்காணியை குத்தகைக்கு விட்டிருக்கிறீர்கள்?”

“ஐயா எனக்குத் தெரிந்த வரையில் ஒரு பத்துப் பதினைந்து வருசமாவது இந்த வயலை அந்த கணேசன்தான் செய்து வருகிறார்”

“அப்படியா? ஒழுங்காக காணியாயம் தருகிறாரா?”

“இல்லை ஐயா. என்ற காணிக்கு இந்த ஆள் சரியாக காணியாயம் தாற தில்லை. பக்கத்தில உள்ள என்ர சித்தப்பாவின்ர காணிக்கு ஒழுங்கா காணியாயம் கிடைக்குது. அந்த வயலையும் இந்த ஆள்தான் குத்தகைக்கு செய்றான்.”

“பயிர்செய்கைக் குழுவிடம் காணியாயம் தொடர்பாக முறைப்பாடு செய்திருக்கிறீர்காளா?”

“இல்லை ஐயா” என்றார் விதானையாரின் மனைவியார்.

“இந்த இடத்திலதான் நீங்கள் பிழை செய்திருக்கிறீர்கள். காணிமசோதா சட்டப்பிரகாரம் காணியாயம் கிடைக்காமல் போனாலோ அல்லது குறைவாக கிடைத்தாலோ உடனடியாக பயிர்செய்கைக்குழுவிடம் முறையிட்டிருக்க வேண்டும். இல்லாது போனால் செய்கைக் காரரை மாற்றமுடியாது.” என்று உதடுகளைப் பிதுக்கினார் அட்வகேற் ஆனந்தன்.

அவர் சிந்தனைகள் தாம் பொறுப்பேற்றுக் கொண்ட அந்த வழக்கைப் பற்றியே சுழன்று கொண்டிருந்தது. சிறிது நேரமாக ஆழ்ந்து எதையோசிந்தித்துக் கொண்டிருந்தவர் திடுக்கிட்டு எழுந்தவாறு “மிஸ்டர் வீரசிங்கம் இந்த வழக்கை வெல்ல ஒரு வழியிருக்கிறது. ஆனால் நீங்களும் பக்கத்துக் காணிக்காரர்களும் ஒரு பொய்யைச் சொல்ல வேண்டியிருக்கும்”என்று ஒரு குண்டைத்தூக்கிப் போட்டார்.

“நானா?” என்று கேட்டார் வீரசிங்கம் விதானையார்.

“என் மனைவி சொத்தை வேண்டாம் என்று சொல்லித்தானே திருமணத்துக்கே சம்மதித்தேன். நீங்கள் குறிப்பிடும் வயல் எங்கேயிருக்கிறது என்பது கூட எனக்குத் தெரியாதே! அப்படியிருக்கும் பொழுது கோட்டிலேறி பொய் சொல்லலாமா? இப்படியான ஒரு தர்மசங்கடமான காரியத்தை என்னால் ஒருகாலும் செய்யமுடியாது” என்று உறுதியாகக் கூறினார் வீரசிங்கம் விதானையார்.

அவரது முகத்தில் ஜொலித்த சத்தியபூர்வமான உறுதியான நிலையை நன்கு அறிந்தகொண்ட அட்வகேற் ஆனந்தனால் மேலும் எதுவும் கேட்கமுடியாமல் போய்விட்டது. அவருக்கு முன்பும் இதுபோன்ற அனுபவம் ஒன்று ஏற்பட்டது ஞாபகத்திற்கு வந்தது.

வீரசிங்கம் விதானையாரின் காணிகள் தொடர்பான பல உறுதிகளை எழுதும் சந்தர்ப்பம் ஒன்று அவருக்குக் கிடைத்திருந்தது. அப்பொழுதுதான் அந்த அனுபவத்தை அவர் பெறக்கூடியதாக இருந்தது. தனது உழைப்பினூடாக வாங்கப்பட்ட பல காணிகளுக்கு அவர் உறுதி எழுதினார். எல்லாக்காணிகளின் உறுதிகளிலும் தனது பெயரையும் தனது தம்பி தங்கையின் பெயரையும் அவர் சேர்த்துக் கொள்வதில் உறுதியாக இருந்தார்.

“விதானையார் உங்கள் உழைப்பில் வாங்கிய காணிகளுக்கு ஏன் உங்கள் தம்பி தங்கையின் பெயரையும் சேர்த்துக் கொள்கிறீர்கள்?” என அட்வகேற் வினவிய போது ஒரு புன்சிரிப்பை உதிர்த்தவாறு அவர் சொன்னார்.

“ஐயா ஒரு குடும்பத்தில அப்பா இறந்திட்டா மூத்த பையன்தானே அந்தக் கடமைகளை ஏத்துக்கணும். அதைத்தான் நானும் செய்யிறன். என்னைவிட வேறுயாரையா அந்தப்பிள்ளைகளுக்கு கொடுக்கப் போறாங்க. நீங்க சொல்றதும் ஒரு வகையில வாஸ்த்தவம்தான். ஆனா அப்படி போலியா இருக்க என்னால முடியாது ஐயா.” என்றார் வீரசிங்கம் விதானையார்.

எண்ண அலைகளிலிருந்து மீண்ட அட்வகேற் ஆனந்தன் ‘இந்த யுகத்திலும் இப்படி ஒரு மனிதனா?’ என எண்ணியவாறே வெளியே பார்வையை வீசினார். வீரசிங்கம்  விதானையாரும் அவரது தர்ம பத்தினியும் அட்வகேற் ஆனந்தனின் வீட்டை விட்டு வெளியேறும் காட்சி தெரிந்தது.

வே. தங்கராசா

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

4 comments:

  1. மண்வாசனையோடு கூடிய கதை. உண்மைக் கதையா?

    ReplyDelete
  2. உண்மையும் ஒரளவு கலந்த கதை.

    ReplyDelete
  3. விதானைமார் பற்றி பூர்வீகத்தை அறிய ஆவல் உதவ முடியுமா?

    ReplyDelete
  4. விதானைமார் பற்றிய விபரங்கள் அறிய ஆவல் உதவ முடியுமா

    ReplyDelete