Tuesday, October 05, 2010

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 14


ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 13


இனி...

தம்பன் கோட்டைப்பயணம் பின்னிரவுப்பொழுதில் புறப்பட்டது.
பிரயாணம் செய்யும் வழி காட்டுப்பாதையாகவும், இராக்காலமாகவும் இருந்ததால், தளபதிக்கு முன்பும் பின்பும் வீரர்கள் பாதுகாப்பாக வர அணிவகுத்தனர்.


வழமைபோல் உதயகுமரன் அதைவிரும்பவில்லை. தன்னைத் தொடர்ந்து சகலரையும் வருமாறு பணித்துவிட்டு தன் வெண்புரவியிலமர்ந்து அந்தக் காட்டு வழியால் முன்னால் குதிரை மீது போய்க் கொண்டிருந்தான்.


அவன் பணித்ததுபோல குதிரைப் படைவீரர்கள் வந்து கொண்டிருந்தனர். அந்த 18 முழப்பாதையில் வெண்ணிலவு எறித்து ஒரு வெள்ளிப்பாதையாகவே மாறிவிட்டது. ஆயினும் வண்டில் வழிக்கு அண்மித்து கிளைபரப்பி நின்ற பெரு விருட்சங்களின் அடிகளில் இருள் சூழ்ந்து நின்றது. மணல் வழிகளில் குதிரைகள் நடந்துவருவதால் பெரிதாக அரவம் எழவில்லை.


எனினும், குதிரையில் ஆட்கள் வருவதையறிந்த ஆட்காட்டிப் பறவைகள் அடிக்கடி கத்திக் கொண்டு பறந்து சென்றன. பின்னிரவின் ஆரம்பம் அது.... கரடிகளின் உறுமல்கள்.... காட்டு யானைகளின் பிளிறல்கள்.... ஒரு விசித்திரமான பின்னணியைக் கொடுத்துக் கொண்டிருந்தன.


சமயங்களில் புலிகளின் கர்ச்சனைகள் அச்சத்தைக் கொடுத்தன. அதைக்கேட்டு குதிரைகளும் தயங்கின. ஆந்தையின் அலறலோடு கலந்து ஒலித்த நரிகளின் ஊளை ஒலி... மனதுக்குக் கிலி கொடுத்தது. அந்தச் சத்தம் இளஞ்செழியனுக்கு நல்லதாகப் படவில்லை. ஏக்கத்தோடு ஒலிப்பதுபோல் இருந்தது. தொடங்கிவிட்ட பயணத்தை நிறுத்தவும் தளபதி விரும்பமாட்டார். இளஞ்செழியனுக்கு சகுனங்களில் கொஞ்சம் நம்பிக்கையுண்டு.


இதைப் போய் தளபதியிடம் கூறினால்... நரிகளின் சுபாவமே அது... நமக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்.என்று ஒதுக்கித்தள்ளிவிடுவான். மூன்றாம் ஜாமம் நெருங்கிக் கொண்டிருந்தது. உதயகுமரனின் மனம் பேதலித்துப் போய் இருந்தது.... தனது கவனத்தையும், அவன் உஷாரையும் இழந்து வெகு நேரமாயிற்று.... இடையே ஒருமுறை அவர்களைத் திரும்பிப் பார்த்தான்... அவர்கள் தூக்கக் கலக்கத்தில் சற்றுப் பின்தங்கியே வந்து கொண்டிருந்தனர்.


அவன் பார்வையைத் திருப்பிக் கொண்டாலும் குறிப்பான ஒன்றிலும் அது குவிந்திருந்ததாகக் காணோம். வெறுமையாக அவன் முன்னால் பார்த்தபடி சென்று கொண்டிருந்தான். உண்மையில் அவனுக்காக அவன் புரவிதான் நடந்து கொண்டிருந்தது. சிந்தனையோ ரங்கநாயகியிலும், தாயிலும், அரசரிலுமாக மாறிமாறி அலைபாய்ந்து கொண்டிருந்தது.


அவர்களுக்கு எதிரேயுள்ள ஒரு காட்டுப் பூமிக்கடியில் ஒரு மலைத்தொடர் உருவாகி, நேர்க்கோடு இழுத்தது போல் பூமிக்குமேல் ஒரு முழம் வரை உயர்ந்தும், சில இடங்களில் பதிந்தும் இருந்தது. இந்த மலைச்சரிவை கல் நெருக்கம் என்றழைத்து வந்தனர். அந்தக் கல் நெருக்கத்தில் ஒரு பாலைமரம் நன்கு கிளைபரப்பி வெட்டப்படாமல் பெரும் மலைபோல் வளர்ந்திருந்தது. அந்தப் பால் நிலவு வேளையிலும் அந்த மரத்தைச் சுற்றிலும் காரிருள் அப்பிக் கிடந்தது. அதன் இருளில் எவர் நின்றாலும் கண்டு கொள்ள முடியாதபடி இருந்தது.


அந்த மரத்தின் கீழ் நின்று, அதன் தாழ்வான கிளையொன்றில் துதிக்கையைப் போட்டபடி கொழுப்பான தனியன் - காட்டுயானை ஒன்று தூங்கிக் கொண்டிருந்தது. உதயகுமரன் அவ்விடத்தை அண்மித்தபோது, ஆள்காட்டிப் பறவை ஒன்று உச்சஸ்தாயியில் கத்திக்கொண்டு பறந்தது. அதன் ஓசையில் விழித்துவிட்ட தனியன், நிலவு வெளிச்சத்தில் குதிரைமீது அமர்ந்து வரும் உதயகுமரனைக் கண்டது. மெல்ல மரத்தைச் சுற்றி ஒரு அடி முன்வைத்தது.


சரியாகக் குதிரை மரத்தண்டை வந்ததும் வேகமாக முன்நகர்ந்த யானையைக் கண்டு குதிரை கனைப்பதற்குள் பாய்ந்து துதிக்கையை நீட்டி உதயகுமரனை அப்படியே உயரத்தூக்கியது. யானையின் துதிக்கையைத் தன் முகத்திற்கெதிரே கண்டபோதுதான் உதயகுமரன் விழிப்படைந்தான். இயல்பாகவே அவனது கை குறுக்காக ஓடி வாளுக்காக நீண்டபோது காலம் கடந்து விட்டது. ஒரு பிளிறலுடன் அவனை அப்படியே அலக்காகத் தூக்கி அவ்விடத்திலேயே நிலத்தில் அறைந்ததுடன் தன் முன்னங்காலால் அவன் வயிற்றிலும் மிதித்துவிட்டு காட்டின் மறு பக்கம் ஓடி மறைந்தது.

யானையின் பயங்கர பிளிறலைக் கேட்ட வீரர்கள் நித்திரைக்கலக்கத்திலேயே குதிரைகளைத் திருப்பி சிறிது தூரம் ஓடிச் சென்று காட்டுக்குள் மறைந்து கொண்டனர்.


சில மணித்துளிகள்வரை யாரும் சத்தம் எழுப்பவில்லை. அரவம் அடங்கி அமைதி நிலவியது. தமது குதிரைகளைக் கடிவாளத்தில் பிடித்தபடி வாளை உருவிக் கொண்டு முன்னேறினர்.


அப்போதுதான் தளபதியின் வெண்குதிரை தனியே, தனது முன்காலால் தரையைத் தட்டி தலையை மேலும் கீழும் அசைத்தபடி நிற்பதைக் கண்டு கிலேசம் கொண்டனர். குதிரையின் அருகில் ஒருவர் கிடப்பது தெரிந்தது. கடவுளே என்று ஓலமிட்டுக் கொண்டு ஓடிவந்து பார்த்தனர்.

தளபதிதான்... தலையால் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. வயிற்றுப் பகுதி இடுப்புப் பட்டியுடன் சேர்ந்து நசுங்கிக் கிடந்தது.


பிரபோ என்று அலறிய இளஞ்செழியன் குனிந்து சுவாசம் வருகிறதா என்று பார்த்தான்.

பிரபு! போய்விட்டீர்களா பிரபு?, என்று அவன் ஓலமிட்டபோது உண்மையைப் புரிந்துகொண்ட வீரர்கள் வாய்விட்டு அலறத் தொடங்கினார்கள். வெகுநேரம் ஆயிற்று அவர்கள் அழுகை நிற்க.தொடரும்......

அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்


ஜீவநதி வலைப்பூவில் வாரம்தோறும் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் எழுதிய ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் ....{ படங்கள் இணையத்தில் இருந்து }
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment