Sunday, August 16, 2009

ஊரெல்லை - சில ஞாபகமீட்புக்கள்







படங்களில் நீங்கள் காண்பது தம்பலகாமத்தின் எல்லைப்பிரதேசம். திடல்களாகக் காணப்பட்ட ஊர்மனைகள் முடிவடைந்து, ஒருசில தனித்த வீடுகளுடன், பசுமைநிறைந்த வயல்வெளிகளும் மறைந்துபோக சதுப்பு நிலவெளிகளாகக் காணப்படுகிறது எங்கள் ஊரெல்லை.

நன்றாக ஞாபகம் இருக்கிறது 1990ம் ஆண்டு வைகாசிப் பொங்கலுக்கு அடுத்த நாள் நள்ளிரவு முதன்முதலாக இந்த எல்லையைத் தாண்டி அகதிகளானோம்.

1985 முதல் பலமுறை உயிர்காக்க பாதுகாப்பான இடமாக நாங்கள் கருதிய ஐயனார் கோயில்த் தீவிற்கு மூட்டை முடிச்சுக்களுடன் ஓடுவதும், சிலநாட்களின் பின் மீளத்திரும்பி வருவதுமாக இருந்து வந்தோம்.

ஆனால் இது அவ்வாறிருக்கவில்லை. வழக்கம் போலில்லாமல் உயிர்குடிக்கும் வேட்டுச் சத்தங்களும், எறிகணைவீச்சுக்களும் ஆரம்பித்தபோதே மிகச் செறிவாக இருந்தமையால் நீண்ட மனப்போராட்டத்துக்குப் பின் ஊர்விட்டகலுவதாக முடிவெடுக்கப் பட்டது.

அப்போது எனக்கு 12 வயது. இருந்தும் பயம்எதுவும் இருக்கவில்லை. மூட்டைமுடிச்சுக்களுடன் அடிக்கடி ஓடுவது பழக்கமாகிப்போயிருந்தது.

நள்ளிரவில் ஆரம்பித்த அந்த மிகக் கடுமையான நடைப்பயணம் அதிகாலை 4 மணிக்கு சூரங்கல் எனும் இடத்துக்குச் சென்றடைந்ததைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறைவுக்கு வந்தது.

அதிகளவில் சிறுவர்களைக் கொண்டிருந்த குடும்பங்களே முதலில் இடம் பெயர்ந்தன. அதனால் ஊரில் நிறையப்பேர் எஞ்சியிருந்தார்கள். அன்றைய ஊரின் நாட்குறிப்பு உதிரத்தால் எழுதப்பட்டதை பின்னர் அறிந்து கொண்டோம்.

படமெடுப்பதற்காக தரித்துநின்ற சில நிமிடங்களில் அனைத்து ஞாபகங்களும் அலையலையாய் வந்துபோனது.

சூரங்கல் பிரதேசத்தில் நாங்களாகவே களிமண்ணில் கல்லறுத்து, தென்னோலை வேய்ந்த குடிசை அமைத்திருந்தோம். மழைநிறைந்த ஒருநாளில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஈரமூறிய பாயில் காய்ச்சலில் கிடக்க, குடிசைக்குள் மழைவெள்ளம் வராமல் விடியவிடிய மண்ணணை கட்டிய காட்சிகள் மனதில் படமாக வந்து போகிறது. ம்.. ம் ..இன்னும் இப்படி நிறைய...

நீண்ட நேரம் புகைப்படக்கருவியுடன் அந்த இடத்தில் நிற்பதை உணர்ந்து திடுக்கிட்டு பழைய நினைவுகளில் இருந்து சுதாகரித்துக் கொண்டு வீடுதிரும்பினேன்.

என் அன்றைய பொழுதினை நிறைத்திருந்தது பழைய ஞாபகங்கள்..

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

21 comments:

  1. புகைப்படங்கள் கலக்கலாய் இருந்தாலும் உங்கள் நினைவுகள் மனதை கலங்க வைக்கிறது.

    ReplyDelete
  2. நன்றி யூர்கன் க்ருகியர்

    ReplyDelete
  3. Sugirthan EaswaranathanJul 23, 2009, 1:26:00 PM

    thnx anna.i remember that time i was 6yr old.....

    ReplyDelete
  4. ஜீவன்!

    நீங்கள் பிறக்க முன்னமே அந்த மண்ணை விட்டு ஒட்டப்பட்டவர்கள் நாங்கள். பொன் விழையும் பூமியாக இருந்த நிலங்களை போர்ப்பூமியாக்கியவர்களே எங்களையும் விரட்டினார்கள்...படங்களைப் பார்க்கும் போது எனக்கும் பழைய ஞாபங்கள் வருகிறது.
    உண்மையில் ஊரைப்பார்க்கும் ஆசை வரும்போதெல்லாம் உங்கள் வலைப்பூவுக்கே வருகின்றேன்.
    நன்றி
    நட்புடன்
    மலைநாடான்

    ReplyDelete
  5. படங்களைப் பார்க்கும் போது பழைய ஞாபகங்கள் என்னையும் மீட்டுச் செல்கின்றது, பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. நன்றி Sugirthan Easwaranathan

    ReplyDelete
  7. நன்றி மலைநாடான் அவர்களே

    ReplyDelete
  8. நடந்து வந்ததே பாதையினைத் திரும்பிப் பார்ப்போர் ஒரு சிலரே. அதிலும் நல்ல நிலைமையின் போது அவற்றைக் கதைக்கவே விரும்பாதவர்கள் தான் அதிகம்.
    பன்னிரண்டு வயதில் பசுமரத்தாணி போலப் பதிந்து விட்ட நினைவுகளும் இழப்புக்களும் வாசிக்கும் போது மனதில் வலியைத் தான் ஏற்படுத்தியது. உங்கள் எழுத்திலுள்ள உண்மையும் எளிமையும் என்னைப் பிரமிக்க வைத்தன.

    ReplyDelete
  9. நன்றி தீவிரவாசகன் அவர்களே

    ReplyDelete
  10. Kaneshamoorthy VicneswarananthanJul 28, 2009, 8:28:00 PM

    வணக்கம் அண்ணா!
    உங்களுடைய ஜீவநதி யை பார்வையிடுபவர்களில் நானும் ஒருவன். தமது சொந்த ஊரை மறந்து சென்ற ஊரே கதி என்று இருப்பவர்கள் மத்தியில் உயிர்காக்கும் உத்தம துறையில் இருந்து கொண்டு நீங்கள் இப்படியான செயற்பாட்டில் ஈடுபடுவது என்பது என்னை ஆச்சர்யப்பட வைக்குறது.
    உங்கள் 'ஊர்எல்லை' என்னுடய மனதிலும் ஒரு மிகப்பெரிய கனதியை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் நானும் உங்கள் ஊரோடு தொடர்புடைய உங்கள் ஊரிற்கு சற்று அருகில் உள்ள ஆலங்கேணியை சேர்ந்தவன் என்பதும், இடம்பெயர்வின் போது உயிர்ப்பயத்தோடு எங்கள் ஊர்விட்டு கடுமேடெல்லாம் கடந்து உங்கள் ஊரிற்குவந்து சேர்ந்து அங்கு சற்றுக்காலம் வசித்தும் ஆகும்.
    இயற்கை அண்ணையின் அரவனைப்பில் எப்போதுமே செழிப்பாக காட்சிதரும் எங்கள் ஊர்கள்தாம் எமக்கு எப்போதுமே சொர்கம்.
    உங்கள் கவிதைகள் ஒவ்வொன்றுமே நன்றாக இருக்கிறது.

    வாழ்த்துக்கள் அண்ணா! உங்கள் பணி தொடரட்டும்

    ReplyDelete
  11. உங்களின் இந்த பதிவு தமிழ் மலர் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
    vist தமிழ் மலர்

    ReplyDelete
  12. Hi Anna,

    Is this the border of Thambalagamam? Just to confirm it. My friends think that its further south and somewhere near Arugam Bay. My father is from there and I am Sugirthan's cousin.

    ReplyDelete
  13. தனிமதிAug 31, 2009, 6:46:00 PM

    கொடுமையான நாட்கள்..
    தமிழருக்கென்றே தலையில் எழுதிவைத்த சாபக்கேடுகள்..
    மறக்க வேண்டும் என்றே நினைத்தாலும் மறக்கமுடியாத வடுக்கள்..

    படங்களையும், சம்பவங்களையும் சமர்ப்பித்த தங்களுக்கு நன்றிகள் ஜீவா...

    ReplyDelete
  14. சத்தியாAug 31, 2009, 6:49:00 PM

    ம்...
    இப்படித்தான் ஒவ்வொரு தமிழனுக்குள்ளும்
    ஓராயிரம் நினைவுகள் தழும்புகளாய்...

    ஊரைத் தொலைத்தோம்.
    உறவுகளைத் தொலைத்தோம்.
    படிப்பைத் தொலைத்தோம்.
    பரிதவித்து அலைந்தோம்.

    ம்ம்... நாம் பாவப்பட்ட ஜென்மங்கள்.

    பதிவிற்கு நன்றிகள் ஜீவா.

    ReplyDelete
  15. நன்றி தனிமதி அவர்களே
    நன்றி சத்தியா அவர்களே

    ReplyDelete
  16. படித்து முடித்ததும் பாராட்டக்கூட மனமில்லை! மனத்தில் இனம்புரியா தாக்கத்தை ஏற்படுத்தி, மூளைச் செல்களை சுக்குநூறாக உடைத்தெரிந்துவிட்டது தங்களின் கட்டுரை!

    ReplyDelete
  17. நன்றி நண்பரே
    பகிர்கையில் குறைகிறது துன்பம்
    உங்கள் அன்பிற்கும் ,ஆதரவிர்க்கும் நன்றி சிவா

    ReplyDelete
  18. நன்றி Renuka Srinivasan அவர்களே

    வணக்கம் Kaneshamoorthy Vicneswarananthan

    மிக்க நன்றி
    உங்கள் அறிமுகம் கிடைத்தது மகழ்ச்சி தருகிறது.
    இன்னும் நான்ஆலங்கேணிக்குச் செல்லவில்லை என்பது வேதனையான விடையம் பார்ப்போம் சந்தர்ப்பம் கிடைத்தால் நிட்சயம் வலையில் காணலாம்.



    தொடர்பில் இருப்போம்...

    நட்புடன்
    ஜீவன்

    ReplyDelete
  19. Hi செந்தூரன் சிதம்பரநாதன்

    This is the border of Thambalagamam
    called as "sivadtha paalam"


    Jeevan

    ReplyDelete
  20. எல்லா ஊர்களுக்கும் பொதுவான விடயங்கள் உண்டென்பதை இந்த குறிப்பு தருகிறது. நினைவழியா தடங்களில் நானும் ஊர்ந்தேன் .நன்றிகள் .

    ReplyDelete