Tuesday, February 10, 2015

‘செவ்வானம்’ - தீந்தமிழ்க் கவிஞன் திரு.பூ.பிரதீபன்


வரலாற்றுப் புகழ்மிக்க தம்பலகாமத்தைப் தாயகமாகக் கொண்டவர் நமது பல்துறைக் கலைஞர் திரு.பூபாலசிங்கம் பிரதீபன் அவர்கள். தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயிலில் வைராவியார், காரியப்பர் ஆகிய இருவழித் தொழும்புகளுக்கு உரிமையுள்ளவராகிய செல்வராசா பூபாலசிங்கம் அவரது துணைவியார் கோடீஸ்வரி அம்மையார் ஆகியோர்களின் மூத்த புதல்வனாகப் பிறந்தவர். தனது ஆரம்பக்கல்வியை தி/புனிதசவேரியர் மகாவித்தியாலயம், தம்பலகாமம் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கற்ற இவர் உயர் கல்வியை திருகோணமலை இ.கி.ச கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் பெற்றார்.



இலங்கை ‘அபின நாடக அரங்கியல் கலைக்கல்லூரியின்’சிரேஸ்ட பயில்முறைப் பயிற்றுனராகக் கடமையாற்றும் இவர் பல பரிமாணங்களில் தன் ஆற்றலைப் பதிவு செய்தவர். இலங்கையின் ஆற்றுகைக் கலைஞனாக, மேடை, தொலைக்காட்சி, திரைப்பட நடிகனாக, நெறியாளனாக, பாடகனாக, ஓவியனாக,  யோகக்கலை வித்தகனாகப் பலரும் போற்றிப் புகழும் வகையில் தனது ஆற்றல்களை வெளிப்படுத்தி வருகிறார்.

இத்தகைய சிறப்புகளுக்கு உரிமையுள்ளவராகிய திரு.பூ.பிரதீபன் அவர்கள் 2013ஆம் ஆண்டில் மகரந்தம் வெளியீட்டகத்தினூடாக ‘செவ்வானம்’ என்ற தலைப்பில் கவிதை நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 2005 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறுபட்ட தலைப்புகளில் இவர் எழுதிய 50 கவிதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.


ஓய்வு நிலையதிபர்களாகிய தாமரைத்தீவான்,கலாபூசணம் கனகமகேந்ராஆகிய இருவரும் இந்நூலுக்கு வாழ்த்துச் செய்திகளை வழங்கியுள்ளனர். மொத்தமாக 96 பக்கங்களை உடையது இக்கவிதை நூல். கவிஞர் இந்நூலை தனது பெற்றோர்களுக்கும், பிறந்த பொன்னாடாகிய ஈழத்திருநாட்டிற்கும், தாய் மொழியாகிய தமிழுக்கும் காணிக்கையாக்கி உள்ளமை கவனிக்கற்பாலது. ‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே’ என்ற கோட்பாடு இச்செயலூடாகத் தொனிக்கிறது.


வாழ்க தமிழே! என்ற கவிதையில் ஆரம்பிக்கின்ற இந்நூலில் கடவுள், பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும், ஓவியம், பூக்களின் ஏக்கம், கனவு, காதல், ஒரு ஈழத்தாய் கதறுகிறாள், மீழ்க என் தமிழே!, மனிதம் உயிர்த்திட, விடியலை நோக்கி, சாதனையைத் தகர்க்கும் சாதியணை போன்ற தலைப்புகளில் 50 கவிதைகள் அடங்கியுள்ளன. நூலின் விலை 350 ரூபா.

வையகம் போற்றிட வாழ்க என் தமிழே!
மெய்யகம் உள்ளுயிர் உறைகின்ற வரையில்
தாயகம் காத்திடும் தமிழே வாழத்
தாயினும் மேலாய்த் தாங்குவேன் தமிழே!
சமுத்திரம் முழுவதும் நீ கலந்தினித்து
சரித்திம் செய்யென் தாய் மொழி அம்மே!
கண்டங்கள் முழுவதும் அழகுறப் பரவி
அண்டத்தின் அடிமுடி அளந்திடு தமிழே! என அழகுற ஆரம்பிக்கிறது இவரது கவிதை நூல்.

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் என்ற தலைப்பில் யாழ் திருமறைக் கலாமன்றம் 2001 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடத்திய தமிழ் விழா கவியரங்க நிகழ்வில் இவர் பங்கேற்று வாசித்த கவிதை தமிழ் மீதும், தாய் மீதும் இவர் கொண்டிருந்த அளவற்ற காதலை அப்படியே தத்துவரூபமாக எடுத்துரைக்கிறது.

என் தாயையும் பிறந்த பொன்னாட்டையும்
எடுத்தியம்ப …. நான்
பேசும் நாவும் எழுதும் கரமும்
போதாது …ஆனாலும்
என் விரர்கள் வலிக்கும் வரை
இதயம் இளைக்கும் வரை
மூளை களைக்கும்வரை ஏன்
நானே மரிக்கும் வரை ..என்
தாயையும் தாய் நாட்டையும்
எப்போதும் எடுத்துரைப்பேன்.
என்கிறார் கவிஞர்; உறுதியாக


‘சாதனையைத் தடுக்கும் சாதியணை..!’ என்ற தலைப்பில் அமைந்த கவிதையில் தமிழினத்தின் அழிவுக்கு மூலகாரணமாகிய சாதியை அதனால் தமிழினத்திற்கு ஏற்படும் கேட்டை பின்வருமாறு எடுத்துக் காட்டுகிறார் கவிஞர்.

ஆதியிலிருந்து நாம்
சாதி..சாதியென்று சமூகத்தில் ஓதி ஓதியே
மனிதக் குழுமங்களை மட்டுமின்றி
தெய்வங்களையும் கூறுபோட்டுக் கொண்டோம்.
பிரிவினைத் தீயை ஊதி ஊதி எரித்து
வேறு வேறாய்க் கூடி நின்று
எமக்குள் நாமே மோதி மோதி
எம்மை நாமே கொன்று தின்று
இழப்பதற்கு மீதியாக ஏதுமின்றி இன்று
நாதியற்று நடுவீதி வந்து நிற்கின்றோம்.

சுனாமியின் கொடுமையைச் சுவையாகச் சொல்லுகிறது ஒரு கவிதை.
கடலே நீ எனக்கு
அழகாகத் தெரிந்தாய்.
கவிஞர்களாலும்
காதலிக்கப் பட்டாய்.
ஏதோ உன்னைக்
கற்பழித்து விட்டதாய் ஏன்?
கண்ணகி கோலம் பூண்டாய்?
ஓலத்தாளமும் ஒப்பாரி ராகமும்
உன் காதுகளை எட்டியிருக்கும்
உன் நெஞ்சோடு வந்து
ஒட்டிருக்கும் என எண்ணுகிறோம்.
இனியேனும் உன்
ஆட்டம் அடங்கட்டும்
விடு விடு விட்டு விடு உன்
வீறாப்பு விந்தை
இத்தோடு ஓயட்டும்
மன்றாடுகிறோம் நாங்கள்
மனிதர்கள்.


என முடிகிறது அக் கவிதை. பெரும் பாலும் அவர் கவிதைகள் இயற்கையின் சீற்றத்தை, போர் அவலங்களை, மனித சமூகத்தின் அல்லல்களை நமக்கு சுவையாக ஒரு புதிய சந்தவடிவத்தில் எடுத்துரைகின்றன.
கலாபூசணம் வே.தங்கராசா 


தொடர்பு கொள்ள.....
திரு.பூ.பிரதீபன்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. வணக்கம்
    ஐயா

    புத்தகத்தின் விமர்சனம் அருமையாக உள்ளது.. வாங்கி படிக்க வேண்டும் என்ற உணர்வு.... சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.. ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இந்நூலை(செவ்வானம்) தி/சண்முகா இந்து மகளீர் கல்லூரிக்கு முன்பாக உள்ள SS டிகிடலில் பெற்றுக்கொள்ளலாம் ..... - பூ.பிரதீபன் (நூலாசிரியர்)

      Delete