ஒரு சமூகம் தன் பண்பாட்டையும், நம்பிக்கைகளையும் அடையாளப்படுத்த முனையும் போது அங்கு ஆலயம் துளிர்விட்டுத் தளைக்கின்றது. பண்பாடும், நம்பிக்கைகளும் என்ற இரு எளிமையான சொற்களுக்குள் ஒரு சமூகத்தின் மிக பெரிய தொன்மம் வித்துக்களாக புதைந்திருக்கும். இந்திய ஞான மரபுகளில் கிளர்ந்தெழுந்த ஆலயங்கள் நெஞ்சுருகி ஆணவங்களைக் கரைத்து முத்திக்கு வழிதேடும் கூடங்கள் என்ற மனச்சித்திரமே நமது பொது பண்பாட்டில் உண்டு. ஆனால், அங்கு தான் இசையும் நாட்டியமும் செவ்வியலாகின. பக்தி இலக்கியங்கள் தமிழுக்கு செறிவூட்டின. சிற்பங்கள் பேச ஆரம்பித்தன. கட்டடக் கலையின் பெருமையாக கோபுரங்கள் உயர்ந்து நிமிர்ந்து நிற்கத் தொடங்கின. மலைகள், நதிகள், விருட்சங்கள் என இயற்கையோடு ஒட்டியதாக எழுந்த ஒவ்வொரு தலங்களும் மானுட வரலாற்றையும், சிந்தனைகளையும் உரத்து கூவத் தொடங்கின. விருட்ச வழிபாடு சைவ நெறிக்குள் உள்வாங்கப்பட்ட காலத்தில் இருந்து ஆலயங்கள் பல விருட்ச அடைமொழியுடன் சேர்த்து அழைக்கும் மரபும் உருவாகத் தொடங்கியது. இந்து வழிபாட்டு மரபில் ஒவ்வொரு மூலவரும், தலங்களும் விருட்சங்களினால் அடையாளப்படுத்தப்படுவது பொது வழக்காகியது. ‘கொக்கட்டிச் சோலை’ தான்தோன்றீஸ்வரம் விருட்சத்தினால் அடையாளப்படுத்தப்படும் கிழக்கின் தொன்மை மிகு ஈஸ்வரமாகும்.